கோமியம் சில சர்ச்சைகளும், பின்னணி காரணங்களும்..
நம் அன்றாட உணவுகளில் பால், தயிர், மோர், நெய் என்ற பல வடிவங்களில் பசு தரும் பாலும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும் இடம் பெற்றுள்ளன. எனவே பசு வளர்ப்பு வணிகமும், அதன் மூலம் கிடைக்கும் பால் மற்றும் பால் பொருட்கள் வணிகமும் பல மடங்கு பெருகி உள்ளது. வெண்மை புரட்சியின் அங்கமாக இருக்கும் பசு தரும் கோமியம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
பசுவின் கோமியம் மருத்துவ குணம் நிறைந்தது என்றும் கேன்சர், கொரோனா என்று பல நோய்களை தீர்க்கும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். பசு கோமியத்தின் உண்மை நிலவரம் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
மண்வளத்துக்கு ஏற்றது
பசுவின் கோமியத்தை காலம் காலமாக நமது விவசாயிகள் உரமாக பயன்படுத்தி வருகின்றனர். பசும் சாணத்துடன், கோமியமும் கலந்து உரமாக பயன்படுத்தப்படுகிறது. பஞ்ச கவ்யம் எனும் கரைசலில் கோமியம் சேர்க்கப்படுகிறது. இப்படி விவசாயத்துக்கு துணைபுரிய கூடியதாக பசுவின் கோமியம் திகழ்கிறது.
இந்தியாவில் பல ஆண்டுகளாகவே கிருமி நாசினியாக பசுவின் கோமியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் பசு கோமியத்தை தெளிப்பது வழக்கம். பசு கோமியத்தை வாசலில் தெளித்து சாணத்தால் மெழுகுவதும் கிராம ப்புறங்களில் இன்றும் நடைபெற்று வருகிறது.
ஆயுர்வேத குறிப்புகள்
பசுவின் கோமியம் நீண்டநாட்களாகவே இந்திய பாரம்பர்ய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேதாவின் குறிப்புகள் படி 5000 ஆண்டுகளுக்கும் மேலாகவே கோமியம் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், முற்றிலும் தனியாக கோமியத்தை மட்டும் எதற்கும் பயன்படுத்துவது இல்லை.
முந்தைய காலங்களில் நாட்டு மாடுகள் அதிகம் இருந்தன. எனவே அவற்றின் கோமியத்தில் பல சத்துகள் இருந்தது உண்மை. ஆனால், இப்போது வணிக ரீதியில் அதிக பால் தரும் கலப்பின பசுக்கள் வர ஆரம்பித்து விட்டன. அப்போதே கோமியத்தின் மீதான மதிப்பும் குறைந்து விட்டது.
நிரூபணம் ஆகவில்லை
ஆனால், இப்போது சிலர் கன்னி பசு மாட்டின் கோமியம் பல தெய்வீக பலன்களை கொண்டிருப்பதாக கூறுகின்றனர். அதிகாலையில் வெறும் வயிற்றில் கன்னி பசு மாட்டின் கோமியத்தை குடித்தால், பல நோய்கள் குணமாவதாக சொல்கிறார்கள்.
2014ம் ஆண்டு சிலர் பசு கோமியம் குடித்தால், சர்க்கரை நோய், டிபி, வயிற்று பிரச்னைகள், கேன்சர் ஆகியவற்றில் இருந்து குணம் பெற முடியும் என்று திடீரென ஒரு தகவல் தீயாகப் பரவ ஆரம்பித்தது. ஆனால், யார் இப்படி சொன்னார்கள், எந்த ஆய்வில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பது இன்று வரை நிரூபணம் ஆகவில்லை.
இதையும் படியுங்கள்; நோய் தொற்றே பரவாயில்லை… கொரோனா காலத்து ஃபுட் டெலிவரி அனுபவங்கள்
பசு கோமியம் சில சர்ச்சைகள்
அதிலும் குறிப்பாக பசு கோமியம் கேன்சர் நோயை குணப்படுத்தும் என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். பிஜேபி எம்பி சாத்வி பிரங்கியா சிங் தாக்கூர், சில ஆண்டுகளுக்கு முன்பு பசு கோமியம் காரணமாகவே தனக்கு ஏற்பட்ட மார்பக புற்றுநோய் குணம் அடைந்த தாக கூறி உள்ளார். ஆனால், அவருடைய மருத்துவர் மார்பக புற்றுநோய்க்காக மூன்று முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறி உள்ளார்.
சில மாதங்களுக்கு மீண்டும் சாத்வி பிரங்கியா சிங் தாக்கூர், பசுவின் கோமியத்தால் சர்ச்சையில் சிக்கினார். தாம் தினமும் பசுவின் கோமியம் குடிப்பதால்தான் தனக்கு கொரோனா தொற்று வரவில்லை என்றார். ஆனால், கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்றுக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம்பெற்றார். இப்படி அவர் கூறுவதிலேயே முரண்பாடுகள் இருக்கின்றன.
கேன்சரை குணப்படுத்தும் என்பது உண்மை அல்ல.
பகவான் மகாவீர் கேன்சர் மருத்துவமனையின் மருத்துவர் அசீம் இது குறித்து கூறுகையில், “பசுவின் கோமியம் கேன்சர் நோயை குணப்படுத்தும் என்பது ஒரு தவறான கருத்தாகும். இத்தகைய கருத்துகளை பரப்புவதை நிறுத்த வேண்டும். பசுவின் கோமியத்தில் சில நற்பண்புகள் இருந்தபோதிலும், அது புற்றுநோயை குணப்படுத்தும் என்று எந்த மருத்துவ ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை.
மார்பக புற்றுநோயை அதன் ஆரம்ப காலகட்டத்தில் மட்டுமே சிகிச்சையால் குணப்படுத்த முடியும். நோய் முற்றிய நிலையில் நவீன மருத்துவ முறைகளால் கூட கேன்சரை குணப்படுத்த முடியாது,” என்று தெளிவுபடுத்தி உள்ளார். பசுவின் கோமியம் எந்த வித நோயையும் குணப்படுத்தக் கூடியது அல்ல என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கூறியிருந்ததையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
பசு கோமியத்தில் என்ன சத்துகள் உள்ளன?
பசு கோமியத்தில் உயர்ந்தபட்ச அளவு சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இவை எதுவும் கேன்சரை தடுக்கக் கூடியவை அல்ல. இந்த பசு கோமியம் மண்ணுக்கு ஏற்ற நல்ல உரமாக இருக்கும். ஆனால், எந்த வகையிலும் கேன்சரை குணப்படுத்தும் மாற்று மருந்தாக இருக்க வாய்ப்பில்லை.
கோமியத்தை கேன்சர் சிகிச்சைக்காக பயன்படுத்தலாமா? நிச்சயமாக கூடாது. எந்த ஒரு அறிவியல் பூர்வ நிரூபணமும் இல்லாமல் இது போன்ற தவறான சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடாது. மருத்துவ ரீதியில் நிரூபிக்கப்படாத நிலையில் பலர் வாய்வழியாக பரப்பிய தகவல்கள் தான் இணையத்தில் குப்பை போல பரவி கிடக்கிறது.
ஜூனகத் வேளாண் பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி விஞ்ஞானிகள் குழு 2018ம் ஆண்டு, தாங்கள் பசு கோமியத்தைக் கொண்டு கேன்சரை உண்டாக்கும் செல்களை அழித்ததாக கூறினர். ஆனால், அறிவியல் பூர்வமான ஆதாரம் எதையும் அவர்கள் முன் வைக்கவில்லை.
அமேசான் விற்பனை
பசு கோமியம் நோயை குணப்படுத்துமா இல்லையா என்ற விவாதங்கள் ஒருபுறம் நிகழந்து கொண்டிருக்க ஆன்லைனில் பசு கோமியம் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அமேசான் இணையதளத்தில் அரை லிட்டர் பசு கோமியம் ரு.110 ரூபாய், ரு.180 என்று விற்பனையாகிறது. இதையே ஆயுர் வேத மருந்து என்ற பெயரில் ரூ.400, ரூ 500 எனவும் விற்கின்றனர். ஆன்லைனி்ல் மட்டுமின்றி ராஜஸ்தானில், ஜெப்பூர் அருகில் உள்ள கைலாஷ் குஜ்ஜார் என்பவர் லிட்டர் ஒன்றுக்கு 30 ரூபாய் வரை கோமியத்தை விற்பனை செய்கிறார். பால், தயிர்,மோர், நெய் போல பசு கோமியமும் ஒரு வணிகம். அதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை.
-ஆகேறன்
#CowUrine #CowUrineIsaRealRemedy #CowUrineSales #AboutCowUrine
Comments