பொது ஊரடங்கில் தவித்தவர்களுக்கு உணவு வழங்கும் திருநங்கையர்


சவுந்தர்யா கோபி எனும் திருநங்கை தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரிகிறார். வார விடுமுறை நாட்களில் வட சென்னையில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த திருநக்கையர் ஏழுபேரும் உடன் இணைந்திருக்கின்றனர். தினமும் காலை ஆறுமணிக்கு அவர்கள் பணியை தொடங்குகின்றனர். எர்ணாவூரில் உள்ள சமூக சமையல் அறையை அமைத்திருக்கும் அவர்கள் தினமும் 550 உணவுப் பொட்டலங்களை தயாரித்து வழங்குகின்றனர். 

"பெரும்பாலும் சக திருநங்கையர்களுக்கு கொடுக்கின்றோம். மாற்றுத்திறனாளிகள், மாநகராட்சி சுகாதாரப்பணியாளர்கள் என தேவைப்படுபவர்களுக்கு உணவு கொடுக்கின்றோம்.  இந்த முயற்சியை நாங்கள் ஒரு பிடி அன்பு என்ற பெயரிட்டு அழைக்கின்றோம்," என்று சொல்கிறார் சவுந்தர்யா. 

திருநங்கையரின் இந்த சமூக சமையல் திட்டம் ஒரு சில இளைஞர்களின் முயற்சியால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கட்டியக்காரி தியேட்டர் குழு நடத்தும் ஸ்ரீஜித் சுந்தரம் என்பவர் இது குறித்து கூறுகையில், பொது ஊரடங்கின்போது நானும், அருவி, அனீஷ் ஆகியோர் இணைந்து திருநங்கையர், தன்பாலினத்தவர்களுக்கு உதவும் பணியைத் தொடங்கினோம்.

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திருநங்கையர்

 கடந்த ஆண்டு ஊரடங்கின்போது மளிகைப் பொருட்கள், மருந்துகள், இதர பொருட்களை அவர்களுக்காக வாங்கிக் கொடுத்தோம். அப்போது அவர்கள் மேலும் பலர் இருப்பதாகவும் அவர்களுக்கும் உதவி வேண்டும் என்று கேட்டனர். தவிர நடைபாதைகளில் வாழ்பவர்கள் உள்ளிட்டோர் பெரும்பாலும் தினந்தோறும் பசியோடுதான் உறங்கச் செல்கின்றனர். 

எனவே அவர்கள் பசியை போக்குவது முக்கியமானதாக கருதினோம். கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் பொது ஊரடங்கு அறிவிப்பின்போது எங்களுக்கு இந்த யோசனை உதித்தது. திருநங்கையர்களைக் கொண்டு எர்ணாவூர், போரூர் போன்ற இடங்களில் சமூக சமையல் திட்டத்தைத் தொடங்கினோம். இரண்டு இடத்திலும் தலா ஒரு குழு சமூக சமையல் பணியை கவனித்துக் கொண்டது. முதலில் இரண்டு வார ஊடரங்கின்போது எர்ணாவூரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சமுதாய சமையல் செயல்பட்டது அங்கு காலை உணவு, மதிய உணவு, இரவு உணவுகளை இரண்டு நாட்களும் தயாரிக்கின்றோம். 

இதையும் படியுங்கள்;கோமியம் சில சர்ச்சைகளும், பின்னணி காரணங்களும்..

போரூரில் அனைத்து நாட்களிலும் மதிய உணவு, இரவு உணவு தயாரித்து வழங்குகின்றோம். உணவுடன், தண்ணீர் பாட்டில்கள், முக க்கவசங்களையும் ஆதரவற்றோர்களுக்கு வழங்குகின்றோம் என்றார். 

அவர்களது குழுவில் இருக்கும் அருவி, "இந்த பணிக்காக எந்த ஒரு நிதி வசூலிலும் நாங்கள் ஈடுபடுவதில்லை. எங்களுக்குள்ளேயே நிதியை ஒருங்கிணைத்து செலவு செய்கின்றோம். எங்களுக்கு அறிமுகமான நபர்கள் மட்டுமே உதவுகின்றனர். நாங்கள் என்னென்ன செலவு செய்கின்றோம் என்பதை வெளிப்படையாக குறிப்பிடுகின்றோம்," என்றார். 

"திருநங்கை சமூகத்தினரின் உதவி செய்யும் மனப்பான்மையும், உணவு விநியோகம் செய்வதிலும் மிகவும் சேவை மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர்," என்கிறார் ஸ்ரீஜித். 

போரூரில் சமூக சமையலில் சமையல் பொறுப்பை ஏற்றிருக்கும் சங்கரி, "கடந்த ஆண்டு பொது ஊரடங்கு அறிவித்தபோது, உணவுக்காக எங்கே செல்வது என்று திடீரென ஒரு கேள்வி எழுந்தது. எங்களைப் போல தெருவில் இருக்கும் பலருக்கும் இது போல நேரக்கூடாது என்று நினைத்தோம். இந்த முறை பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அது போன்று உணவு இன்றி யாரும் தவிக்கக் கூடாது என்று நினைத்தோம். அதன் விளைவாகவே தினமும் உணவு வழங்கி வருகின்றோம்," என்றார். 

"தினந்தோறும் நாங்கள் வழங்கும் உணவுப்பொட்டலங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது. இரு சக்கர வாகனத்தில் எல்லாவற்றையும் எடுத்துச் செல்வது கடினமாக இருந்தது. ஆனால், உணவை வாங்கிக் கொண்டு அவர்கள் சொல்லும் வார்த்தைகளில் அந்த கஷ்டம் எல்லாம் மறந்து விடுகிறது," என்கிறார். 

பெரும்பாலும் சைவ உணவுகள்தான் வழங்குகின்றனர். ரம்ஜானை முன்னிட்டு பிரியாணி வழங்கினர். அதே போல சத்தான உணவுகளை கொடுக்கும் முயற்சியில் சில நேரம் சிறுதானிய உணவுகளையும் வழங்குகின்றனர். 

உணவு வழங்கும் பணியில் கொரோனா தொற்று பரவி விடக்கூடாது என்பதிலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். உணவு தயாரிப்பவர்கள் முதல் விநியோகிப்பவர்கள் வரை முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல் போன்ற கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை மிகுந்த அக்கறையுடன் கடைபிடிக்கின்றனர். 

-ஆகேறன்

#FreeFoodForPoor  #TransPeoplesHelp  #CommunityKitchen #ChennaiTransCommunittyHelpPoor