சென்னை சைதாப்பேட்டையில் கொரோனா தனிமையில் இருப்பவர்களுக்கு உணவு விநியோகம்


கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் தரப்படுகின்றன. அதே போல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ணும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஒருவருக்கு கொரோனா தொற்று நேரிடும் சூழலில் அவரே சென்று உணவு வாங்குவது அல்லது அவருக்காக குடும்ப உறுப்பினர்கள் சமைத்துக் கொடுப்பது இயலாத காரியமாக இருக்கிறது. தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் ஒரு அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவரை வேறு யாரும் தொடர்பு கொண்டால் தொற்று பரவும் அச்சமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் சில உணவகங்கள் கொரோனா தொற்று நோயாளிகளுக்கான மெனுவை அளித்து வருகின்றன. அதற்கு பெரும் அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு டெலிவரி கொடுக்கவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் சென்னை சைதாபேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அதன்படி கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு வீடுகளுக்கே சென்று சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.

ஆனந்தம் என்ற அறக்கட்டளையுடன் சேர்ந்து, சைதாபேட்டை பகுதி திமுகவும் இணைந்து இந்த திட்டத்தை சைதாபேட்டையில் மட்டும் தொடங்கி உள்ளன. காலை 8 மணி வரை கால உணவும், மதியம் 12  மணி முதல் அரை மணி நேரத்துக்கு மதிய உணவும், இரவு உணவும் வழங்கப்படுகிறது.

மூன்று வேளையும்  வழங்கப்படும் உணவுகள் மிகுந்த சத்து மிக்கதாக மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி சுகாதாரமான சமையல் கூடத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.  முற்றிலும் இலவசமாக இது வழங்கப்படுகிறது.

இப்போதைக்கு சைதாபேட்டையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் உணவு வழங்கும் பணியில் ஈடுபடுவதற்காக 100 தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். சைதாப்பேட்டையில் உள்ள 2200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இப்போது இந்த உணவு வழங்கப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே கொரோனா நோயாளிகளின் முகவரிகள் சேகரிப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து சென்னையின் பிற பகுதிகளுக்கும், மாநிலத்தின் பிறபகுதிகளுக்கும் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இதே போல அண்மையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் அவர்களை கவனித்துக் கொள்பவர்களுக்கும் மூன்று வேளை இலவச உணவு அளிக்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

அந்தந்த கோயில்களில் அன்னதான திட்டத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் அந்தந்த பகுதி தலைமை மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு இப்போது வழங்கப்பட்டு வருகின்றன.

-பா.கனீஸ்வரி

#FreeFoodForCoronaPatient # FoodForPatients #FoodForCoronaPatients

 


Comments


View More

Leave a Comments