மூலிகை தேடலில் ஆர்வமுள்ளோர் இணைய வாருங்கள்…


நம்மைச் சுற்றி வளரக்கூடிய மூலிகைகளை அடையாளம் கண்டு அவற்றின் மூலம் பல்வேறு நோய் மற்றும் குறைபாடுகளை நமக்கு நாமே சரிசெய்து கொள்ளலாம். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சமீபத்தில் எங்கள் பகுதியில் செயல்படும் அத்திக்குழு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சுற்றி வளரக்கூடிய மூலிகைகள் அடையாளம் காணப்பட்டது. 

முன்னோட்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மூலிகைகள் அடையாளம் காணப்பட்டன. நேரம் குறைவாக இருந்ததால் அவற்றின் மருத்துவ குணம் பற்றி சுருக்கமாகவே சொல்ல முடிந்தது. முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஒருநாளாவது தேவைப்படும். மேலும் பனி மற்றும் வெயில் காரணமாக திறந்தவெளியில் மூலிகைகளை காண்பது அரிதாக இருக்கிறது. 

Must  Read: மாதவரம் அருகே அடையாளம் காணப்பட்ட 36 மூலிகைகள்…

ஆகவே, சென்னைக்கு அருகே உள்ள இயற்கை பண்ணைகள் அடையாளம் காணப்பட்டு அங்கே அழைத்துச் சென்று சில செய்முறை பயிற்சிகளையும் தரலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் திட்டமிட்டபோது மழைக்காலம் தொடங்கியிருந்தது. பருவ மழைக்காலம் நிறைவுபெற்றுவிட்டதால் இப்போது பண்ணைகளுக்கு சென்று வர வாய்ப்பு உள்ளது. 

மூலிகை தேடல் அல்லது மூலிகை நடை என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியின்மூலம் முதலில் மூலிகைகளை அடையாளம் கண்டுகொள்ளலாம். அடுத்ததாக அவற்றைக்கொண்டு நமக்கு வரக்கூடிய உடல் பாதிப்புகளை சரிசெய்து கொள்ளலாம். மூன்றாவதாக விரும்புகிறவர்களுக்கு ஒவ்வொரு வீட்டிலும் மூலிகைகள் வளர்க்கவும் ஏற்பாடு செய்யலாம். கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டம் மிக மோசமாக உள்ளது. பாதிப்பு எதுவும் வராதவரை பிரச்சினையில்லை. பலரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது. 

மூலிகை நடைமூலம் விழிப்புணர்வு

அண்மையில் தொலைபேசியில் அழைத்த அந்த நண்பருக்கு சுமார் 40 வயது இருக்கும். இளமைப்பருவத்தில் மதுபானம் அருந்துவது, பரோட்டா உள்ளிட்ட உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது, நேரம் தவறி சாப்பிடுவது என பல்வேறு காரணங்களால் அவருக்கு குடல் பகுதியில் பிரச்சினை. செரிமானக்கோளாறு, எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் என தொடர்வதால் அதற்காக பல மருத்துவர்களை சந்தித்தும் பலனில்லை என்றவர் மரண பயம் வருவதாகச் சொன்னார். 

அவருக்கு உணவியல் மாற்றம் மற்றும் சில ஆலோசனைகளைச் சொன்னேன். இதேபோன்று போன வாரம் மதுரை சென்றிருந்தபோது உறவினரான அந்த 65 வயது நபரும் இதுபோன்று வேறு சில பிரச்சினைகளைச் சொன்னார்.இவை சில உதாரணங்களே. 

Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை

மூலிகைகளை ஆராய்ச்சி செய்து சில நோய்களுக்கு எனக்கு நானே செய்துகொண்ட சிகிச்சைகளின் அனுபவத்தில் சொல்லி வருகிறேன். அப்படிப்பட்ட என்னிடமே இத்தனை பேர் தங்களது உடல் பாதிப்புகளை சொல்லும்போது இன்னும் எத்தனையோ மக்கள் சிரமப்படுவார்கள். முகநூலில் ரீல்ஸ் பகுதியில் வீடியோ போட்டதைப் பார்த்து ஏராளமானோர் ஆலோசனை கேட்கின்றனர். இவற்றையெல்லாம் அடிப்படையாகக்கொண்டு நோய் வருமுன் காப்பது, வந்த நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்வது அவசியமாக இருக்கிறது. 

முன்பே திட்டமிட்டபோது பலர் வருவதாக சொல்லியிருந்தார்கள். வர விருப்பம் உள்ளவர்கள் பெயர்களை பதிவிடுங்கள். நாள் மற்றும் அதற்கான தொகை பின்னர் அறிவிக்கப்படும். உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் போன்ற இடங்களில் உள்ள இயற்கை வழி விவசாய பண்ணைகள் காத்திருக்கின்றன.

மீண்டும் சொல்கிறேன்.... மூலிகை தேடல் அல்லது மூலிகை நடை என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியின்மூலம் மூலிகைகளை அடையாளம் கண்டு அவற்றை மருந்தாக பயன்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

-- எம்.மரிய பெல்சின் - 9551486617

#HerbalWalk  #HerbalsIdentify  #TraditionalMedicine

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

 

ஆரோக்கியசுவை இணையதளத்தில் விளம்பரம் செய்ய; 7397477987 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்


Comments


View More

Leave a Comments