சுவையான காஃபியின் தேடல்


.

காஃபி நல்லது என்றும், காஃபி நல்லதல்ல என்றும் இரண்டு விதமான கருத்துகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. ஆனால், நாள் ஒன்றுக்கு காலை மாலை இரண்டு வேளை மட்டும் காஃபி குடித்தால் எந்த தீங்கும் ஏற்படாது என்பது உண்மை.

காஃபி குடிக்காமல் இருக்க முடியாது என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையோ அல்லது நினைத்தபோதெல்லாம் காஃபி குடித்தால் அது உடலுக்கு கேடுதான்.

காஃபியில் உள்ள காஃபின் என்ற பொருள் புத்துணர்ச்சியை அளிக்கிறது. நீங்கள் அடிக்கடி காஃபி குடித்தால், உங்கள் உடலில் காஃபின் எதிர்விளைவை உண்டாக்கக் கூடும். காஃபி குடிப்பது வேண்டாம் என்றோ அவசியம் என்றோ மருத்துவர்கள் கூறுவதில்லை.

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ அல்லது சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரத்துக்குப் பின்னரோ காஃபி குடிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சாப்பிட்ட உடன் காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கின்றனர்.

கொரோனா காலகட்ட பொது ஊரடங்கின்போது தளர்வுகள் இல்லாத முதல் ஊரடங்கு காலத்தில் தேநீர் கடைகள், உணவகங்கள் முற்றிலும் மூடப்பட்டபோது காஃபி பிரியர்கள் நிறையவே அவதிப்பட்டார்கள். தினமும் காஃபி குடிக்காமல் இருக்க முடியாது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களின் தவிப்பை அனுபவித்தால் மட்டுமே நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இதனால், சிலர் தாங்களே வீட்டில் காஃபி போட பழகிக் கொண்டனர். தப்பும், தவறுமாக பாலை கீழே கொட்டி, டிகாசனை கீழே கொட்டி எப்படியோ பலர் கற்றுக் கொண்டனர். டிகாசன் எப்படி இறக்குவது என்று தெரியாமல் விழிபிதுங்கி, பாலை எப்படி காய்ச்சுவது என்று தெரியாமல் தவித்து என்று பலவித அனுபவங்களை அவர்கள் பெற முடிந்தது.

சென்னையைப் பொறுத்தவரை நான் சில இடங்களில் நல்ல காஃபியை சுவைத்தது உண்டு. சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் உள்ள பாலாஜி பவனில் நல்ல காஃபி எப்போதுமே கிடைக்கும். அதே போல மயிலாப்பூர் சங்கீதா பவனிலும் நல்ல காஃபி கிடைக்கிறது.

ராதாகிருஷ்ணன் சாலையில் சரவணபவனுக்கு அருகே விவேகானந்தா காஃபியிலும் நல்ல சுவையான காஃபி  கிடைக்கிறது. இவை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்தது.

காஃபியில் டிகாசன் இறக்குவதும், பால் காய்ச்சுவதும் சரியான விகித த்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் காஃபியின் ருசியை உணரமுடியும். நான் மேற்குறிப்பிட்ட மூன்று இடத்திலும் இந்த சுவையை உணர்ந்தேன்.


Comments


View More

Leave a Comments