
ஏழை, எளியவர்களின் பசியைப் போக்கும்…இட்லி பாட்டிக்கு பரிசாக கிடைத்த வீடு!..
கோவை மாவட்டத்தின் மலைக் கிராமமான வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலம்மாள் என்ற மூதாட்டி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு விற்பனை செய்து வருகிறார். இப்போதுதான் ஒரு இட்லி விலை ஒரு ரூபாய் என்று விற்பனை செய்கிறார். 50 ஆண்டுகளுக்கு முன்பு இட்லி விற்க தொடங்கும்போது ஒரு இட்லி 25 பைசாவுக்குத்தான் விற்பனை செய்தார்.
Must Read: முருங்கை விதை, முருங்கை பொடி, முருங்கை எண்ணைய்… முழுமையான பலன்களை தரும் முருங்கை
மலைகிராமத்தில் உள்ள மக்கள் காலையில் வேலைக்குப் போவார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு பாட்டி சுடும் இட்லியை வாங்கிக் கொடுப்பார்கள். மலைகிராம மக்கள் வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள். அவர்களால் ஒரு இட்லிக்கு கொடுக்க முடிந்தது 25 பைசாதான். அதைத்தான் இட்லி பாட்டி தனது இட்லிக்கு விலையாக நிர்ணயித்தார். காசு இல்லை என்று சொன்னாலும் அவர்களுக்கும் இட்லி கொடுத்தார் இட்லி பாட்டி. இதனால் அவரது கமலம்மாள் என்ற பெயரே மாறி இட்லி பாட்டி என்ற பெயர் நிலைத்து விட்டது.
கொரோனா காலகட்டத்தில் வடிவேலம்பாளையத்தை சேர்ந்த மக்கள் உணவின்றி தவித்தபோது கமலம்மாள் பாட்டிதான் கைகொடுத்தார். இந்த தகவல் வெளியுலகுக்குத் தெரிய வந்ததால் பிரபலமானார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஒன்றிணைவோம் வா என்ற இயக்கத்தின் மூலம் திமுகவினர் கமலம்மாள் பாட்டியை அடையாளம் கண்டு அவருக்கு உதவி செய்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அப்போது கமலம்மாளிடம் பேசினார். என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாக சொன்னார். அந்த காலகட்டத்தில் இட்லி அரிசி, உளுந்து போன்றவற்றை திமுகவினர் வாங்கிக் கொடுத்தனர்.
இதன் பின்னர் அப்போதைய ஆளும் கட்சி அமைச்சர் வேலுமணி கலம்மாளுக்கு வீட்டு மனை ஒன்றை வாங்கிக் கொடுத்தார். இட்லி பாட்டி பற்றி சமூக வலைதளங்கள் வழியாக அறிந்த தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா, இட்லி பாட்டிக்கு வீட்டு மனை வாங்கிக் கொடுத்தார். அத்துடன் வீடும் கட்டிக்கொடுத்தார். வேலுமணி வாங்கிக் கொடுத்த நிலம், ஆனந்த் மஹேந்திரா வாங்கிக் கொடுத்த நிலம் இரண்டிலும் சேர்த்து இட்லி பாட்டிக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு அன்னையர் தினத்தன்று அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எந்தவித பலனையும் எதிர்பாராமல் எளியவர்களுக்கு உணவளித்து உயர்ந்து நின்ற பாட்டிக்கு, கிடைத்த பரிசு சாதாரணமான ஒன்று அல்ல. அவரது பசிபோக்கும் பணிக்கு இயற்கை அளித்த பரிசாகவே அதனைப் பார்க்க முடிகிறது. கமலம்மாள் பாட்டி எப்போதுமே தன்னைப் பற்றி பெரிதாக பொருட்படுத்தியதில்லை. பிறரின் பசி, பிறரின் தேவைகளை எப்போதுமே அறிந்து வைத்திருப்பவர்.
மு.க.ஸ்டாலின் இட்லி பாட்டியுடன் பேசியதாக வெளியான தகவலுக்குப் பின்னர் அப்போது இந்து தமிழ் திசையின் செய்தியாளராக இருந்த கா.சு.வேலாயுதன் அவரை சந்தித்துப் பேசினார்.
Must Read: ஷவர்மா ஏன் விஷமாகிறது? டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா விளக்கம்
அப்போது கா.சு.வேலாயுதன், “ஏன் பாட்டி…நாலஞ்சு மாசம் வர்ற மாதிரி பத்து மூட்டை அரிசி, ரெண்டு மூட்டை உளுந்து இப்படி கேட்டிருக்கலாம்ல. ஸ்டாலின் பெரிய கட்சித் தலைவரு. வசதியானவரு. கொடுத்திருப்பார்ல?” என்று கேட்டார்.
அதற்கு அந்த பாட்டி, “ஏன் சாமி, அப்படி கேட்டா நல்லாயிருக்குமா? நமக்கே அடுக்குமா? ஊர் சனமே சோறில்லாம கிடக்குதுக. ரோடு வழி, தடம் வழியெல்லாம் வேலை வெட்டியில்லாம எத்தனை ஆயிரம் பேர் கிடக்கிறாங்க. நம்ம மட்டும் வாங்கிட்டா ஆச்சா? அவங்களுக்கெல்லாம் யாரு கொடுப்பாங்க. அவங்க பாவத்தை நாம சம்பாதிக்கலாமா... எல்லோருக்கும் அவரு கொடுக்கணும்ல. கொடுக்கட்டும் சாமி. அதுதானே நமக்கு நல்லது. அதுதானே தர்மம்?” என்று சொன்னார். அந்த தர்மம்தான் இட்லி பாட்டியை இன்றளவுக்கும் பாதுகாக்கிறது.
-ஆகேறன்
#IdliPatti #OneRupeeIdliPatti #Kamalammal #IdlipattiKamalammal
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments