
கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஏற்ற உணவுப் பழக்கங்கள்
கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமின்றி சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்தல் முக்கியமானதாகும். மேலும் அதிக குடிநீரை அருந்துவதும் முக்கியமானதாகும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.
சம-சீரான உணவு
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நன்கு சம சீரான உணவை உட்கொள்பவர்கள் வலுவான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க முடியும். இத்தகையவர்களுக்கு நாட்பட்ட நோய்கள் மற்றும் தொற்று நோய்களுக்கான ஆபத்து குறைவாக இருக்கிறது.
உடல் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அவசியமாகும். இவற்றைப் பெற ஒவ்வொரு நாளும் பலவிதமான புதிய மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளை ஒருவர் சாப்பிட வேண்டும்.
ஒரு சீரான உணவு வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவுகிறது, இது வைரஸின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியே உதவும். தற்போதைய சூழ்நிலையில், கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு நமது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய குறிப்பிட்ட வகை உணவுகள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
கொய்யா, ஆப்பிள், வாழைப்பழம், ஸ்ட்ராபெரி, முலாம்பழம், திராட்சைப்பழம், அன்னாசிப்பழம், பப்பாளி, ஆரஞ்சு போன்ற பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளலாம். மிளகுத்தூள், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, ப்ரோக்கோலி, பச்சை மிளகாய், பருப்பு வகைகள் (பீன்ஸ் மற்றும் பயறு) போன்ற புதிய காய்கறிகளை சாப்பிடுங்கள்.சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்பு அதிகம் உள்ள திண்பண்டங்களை விடவும், சீசனுக்கு ஏற்றவாறு கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம்.. அடிக்கடி தேவையில்லாமல் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
முழு தானியங்கள் மற்றும் கொட்டைகள்
முழு தானியங்கள் மற்றும் கொட்டைகள், பதப்படுத்தப்படாத மக்காச்சோளம், ஓட்ஸ், கோதுமை, தினை, பழுப்பு அரிசி, போன்ற 180 கிராம் தானியங்கள் சாப்பிடுங்கள். பாதாம், பிஸ்தா போன்ற கொட்டைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அசைவ உணவுகள்
(ஆட்டிறைச்சி) சிவப்பு இறைச்சியை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடலாம், கோழி இறைச்சி வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை சாப்பிடலாம். மீன், முட்டை மற்றும் பால் ஆகியவற்றை சாப்பிடலாம்.
உப்பின் அளவை குறைத்து நிறைவுறா கொழுப்புகள் உட்கொள்ளுங்கள்
உப்பு உட்கொள்ளலை ஒரு நாளைக்கு 5 கிராம் வரை கட்டுப்படுத்துங்கள். உங்கள் உணவில் அதிக நிறைவுறா கொழுப்புகள் சேர்க்கவும். மீன், கொட்டைகள், சோயா, ஆலிவ் எண்ணெய், சோள எண்ணெய் பயன்படுத்தலாம்.
சர்க்கரையை குறைத்து அதிக தண்ணீர் குடிக்கவும்
ஒவ்வொரு நாளும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது இரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லவும், கழிவுகளை அகற்றவும், உடல் வெப்பநிலையை சீராக்கவும் உதவுகிறது. அனைத்து செறிவூட்டப்பட்ட சாறுகள் மற்றும் சர்க்கரை கொண்ட அனைத்து பானங்களையும் தவிர்க்கவும். உலர்ந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடும்போது சர்க்கரை அல்லது உப்பு சேர்க்காமல் சாப்பிடவும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
உடற்பயிற்சி, தியானம் மற்றும் போதுமான தூக்கம் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்கவும். போதுமான தூக்கம் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்க உதவும்.முடிந்தவரை வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுங்கள்,
-பா.கனீஸ்வரி
Comments