தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத சுவை மிக்க உணவகங்கள்…


சுடச்சுட...எடுப்பு சாப்பாடு...பொரித்த பெரிய மீன்...மீன்குழம்பு, கருவாட்டு குழம்பு, நண்டு, சிக்கன், மட்டன் குழம்புகள், ரசம், அப்பளம்..இவை எல்லாமே ரூ.70/-க்கு கோவையில் கிடைக்கிறது. எங்கே என்பதை தெரிந்துகொள்ள திரு.கா.சு.வேலாயுதன் அவர்களின் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.

ரூ.70க்கு வயிறு நிறைய தரமான சாப்பாடு 

ரொம்ப காலமாக ஓட்டலில் சாப்பிடுவதை தவிர்க்கிறேன். வேறு வழியில்லாமல் சமீபத்தில் -நீண்ட நாட்களுக்குப் பின் கோவை அன்னபூர்னா கௌரி சங்கரில் ஒரு மசால் தோசை சாப்பிட்டேன். ரூ.95/- பில் வந்தது. ரூ.100/- தாளை சர்வரிடம் தந்து வந்தேன். அப்படி ஒன்றும் பிரமாதமில்லை.

சில நாட்களுக்கு முன் மதியம் 2 மணி கடந்து விட்டது. கோவை காந்திபுரம். எங்கே சாப்பிடுவது. அன்னபூர்னா ஓட்டல் மாதிரி வேறு வேறு கடைகள் பார்த்துக் கொண்டே தயங்கித் தயங்கி சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் வந்து விட்டேன்.

Must Read: கோவையில் மற்றுமொரு பசி போக்கும் உணவுப்புரட்சி

அங்கே S வளைவு ஓரம் நல்ல கூட்டம். தள்ளு வண்டி. கையேந்தி உணவகம். சின்னதாக போர்டு. வறுத்த மீனுடன், முழு சாப்பாடு ரூ.70/- நிறைய பேர் சாப்பிடுவதும், கை கழுவுவதுமாக இருந்தார்கள். பெரும்பாலும் இளைஞர்கள்.

 ஒரு அம்மணி, நான் போய் நின்றதும் சாப்பாடா என்று கேட்டு விட்டு தட்டில் இலையை விரித்து சாப்பாட்டை, அன்னக் கரண்டியில் அள்ளி நிறைத்து, மீன் குழம்பு ஊற்றினார். சுடச்சுட வடசட்டியிலிருந்து எடுத்த ஒரு பெரிய மீன் துண்டை ஓரமாய் வைத்தார். 'சாப்பாடு மறுபடியும் கேட்டு வாங்கிக்குங்கண்ணா' என்று கேட்டுக் கொண்டார். 

மீன் குழம்பு அற்புதம். மீனும் நல்ல ருசி. அடுத்தது கருவாட்டுக் குழம்பு, அதற்கடுத்து நண்டு, சிக்கன், மட்டன் குழம்பு வகையறாக்கள். மறுபடி சாப்பாடு, ரசம், மோர். பொரித்த மீன் சாப்பிடச் சாப்பிட தீரவில்லை. இதைப் பொரிக்க எண்ணெய்க்கே நிறைய செலவாகுமே. இன்னும் கூட ஒரு மீன் சாப்பிடலாமோ என்று ஆசையாய் இருந்தது. 

மீன் மட்டும் தனியாக என்ன விலை? கேட்க கூச்சம். அதற்குள் இத்தனை அயிட்டங்களில் வயிறு கும்மென்று ஆகி விட்டது. போர்டில் உள்ள விலைதானோ? சந்தேகம். கைகழுவி தட்டை வைத்து, தண்ணீர் குடித்து விட்டு, 'சாப்பாடு என்ன விலை?' கேட்டேன்.' ரூ 70/- தாண்ணா' என்றார் அப்பெண்.ரூ.100/-தந்தேன். மீதி ரூ.30/- தந்தார்.

"எத்தனை வருஷமா இங்கே கடை போடறீங்க?"

"நாலு வருஷமா?"

'' எப்படி கட்டுபடியாகுது?"

Must Read: கரிசலாங்கன்னி லட்டு ருசித்திருக்கிறீர்களா?

"நாலு வருஷம் முந்தி 50 ரூவாய்க்கு கொடுத்தேன். கொரானாவுக்கு பின்னால  60 ரூவாய் ஆக்கினேன். 2 மாசமாத்தான் 70 ரூவாய். இதுவே என் மனசுக்கு கஷ்டமாயிருக்கு. இவ்வளவு காசுக்கு ஜனங்க எங்கே போவாங்கன்னு''

அவர் சொல்லும் போது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.

'எப்படி கட்டுபடியாகுதோ? அடுத்து வரும் போது youtube பேட்டி ஒண்ணு இந்தப் பொண்ணெ எடுக்கணும்' என்று நினைத்துக் கொண்டேன்.

சந்தை கடை..

தென்காசி சுற்றுவட்டாரத்தில் பாவூர் சாத்திரம் சந்தை முக்கியமானது.சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்காகவே பல வருடங்களூக்கு முன் லிங்கதுறை என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட சிறு சாப்பாட்டு கடைதான் சந்தைகடை.

பாவூர்சத்திரம் சந்தைக்கடை உணவகம்

கடையத்தில் விளைந்த குத்தரிசி சோறும்,ஆலங்குளம் வேலியாட்டு கறிக்குழம்பும் கடையை பிரபலப்படுத்தியது.சுடச்சுட சோறும்,கொதிக்க கொதிக்க ஆட்டுக்கறியும்,தொட்டுக்க மட்டன் சுக்காவும்,முட்டை வறுவலுமாக சாப்பிட நான்கு வாய் வேண்டும்.

திருநெல்வேலி-ஆலங்குளம் வழியாக குற்றாலம் செல்பவர்கள் மதிய நேர சாப்பாட்டுக்கு பாவூர் சத்திரம் சந்தைகடைக்கு போய் ஒரு பிடி பிடிச்சுட்டு வாங்க.

செய்தி, படம்; கா.சு.வேலாயுதன், பசுமை சாகுல் முகநூல் பதிவுகள்

#Kovaifoods #nvlunchrs70only #Pavoorchatramsandhaifood #affordablefood #streetfoods

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குநம்மாழ்வார் பிறந்தநாள்,  ரூ.30க்குமுழுசாப்பாடு

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments