உணவகங்களில் இயல்புநிலை திரும்பி விட்டதா? ஒரு நேரடி ரிப்போர்ட்!


வழக்கமாக வீட்டிலேயே உணவு உண்டு சலிப்பை உணரும் பலர் ரெஸ்டாரெண்ட் சென்று குடும்பத்தோடு உணவு உண்ணுவதை அல்லது நண்பர்களோடு சென்று உணவு உண்பதை பெரும்பாலும் விரும்புவது வழக்கம்.  

ஆனால், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி கொரோனா பெருந்தொற்று காரணமாக குடும்பத்தோடு ஒரு இடத்துக்கு போவது என்பது என்பது முற்றிலும் குறைந்து விட்டது. தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா பெருந்தொற்று கால கட்டுப்பாடுகள் நம்மை கட்டிப் போட்டிருந்தன. பெருந்தொற்று பரவல் குறைந்திருப்பதால் கடந்த 5ம் தேதி முதல் ரெஸ்டாரெண்ட்களில், கஃபேக்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அரசு அனுமதி அளித்திருக்கிறது. 

நான்கு நாட்களாக ரெஸ்டாரெண்ட்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வர்த்தகம் எப்படி இருக்கிறது என்று சில ரெஸ்டாரெண்ட்களில் விசாரித்தோம். முதலில் சென்னை அசோக் பில்லர் அருகில் இருக்கும் சரவணபவன் ரெஸ்டாரெண்ட் சென்றோம். 

அங்கிருந்த மேலாளர் ஒருவரிடம் பேசினோம், “சென்னையில் எங்களுக்கு 40 கிளைகள் இருக்கின்றன. ஊரடங்கு காரணமாக இதில் 8 கிளைகள் வரை மூடிவிட்டோம். 32 கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த ஊரடங்கின்போதும், இந்த ஊரடங்கு காலத்திலும் பார்சல் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தோம். 

இதையும் படியுங்கள்:தமிழகத்தின் சமையல் கலையை உலகறிய செய்த வில்லேஜ் குக்கிங் சேனல்

அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகள் காரணமாக இப்போது சென்னையில் 32 கிளைகளிலும் 50 சதவிகித வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்கின்றோம். வாடிக்கையாளர்கள் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்கின்றோம். வாடிக்கையாளர்களை கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்துகின்றோம்.

 

சரவணபவன் ரெஸ்டாரெண்ட்

 

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜொமோட்டோ, ஸ்விக்கி வாயிலாக ஆர்டர் செய்வது அதிகம் இருந்தது. இப்போது 5ம் தேதியில் இருந்து பார்சல் ஆர்டர் குறைந்திருக்கிறது. பொதுமக்கள் நேரடியாக ரெஸ்டாரெண்டில் வந்து சாப்பிடுவதையே விரும்புகின்றனர் என்பது எங்களுக்குப் புரிகிறது. வாடிக்கையாளர்கள் கொரோனா தொற்று விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவல் குறையும். அரசும் 100 சதவிகித வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கும் என்று நினைக்கின்றோம்” என்றார் நம்மிடம் பேசிய மேலாளர். 

அடுத்ததாக அசோக் நகரில் உள்ள திருச்செந்தூர் மணி அய்யர் உணகத்துக்குச் சென்றோம். ஊரடங்கு காரணமாக சில நாட்கள் மட்டும் இயங்கி வந்த உணவகம் பல நாட்கள் மூடியே கிடந்தது. திருச்செந்தூரில் செயல்படும் மணி அய்யர் உணவகம் கடந்த ஆண்டுதான் சென்னை அசோக் நகரில் திறக்கபட்டது. தென் மாவட்ட சுவையுடன் மதியம் அன்லிமிடெட் உணவு, காலையில் அன்லிமிடெட் டிபன் என புதிய புதிய திட்டங்களுடன் வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்தது. அரசு தளர்வுகள் அறிவித்து இரண்டு நாட்கள் கழித்துத்தான் உணவகமே திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் அன்லிமிடெட் மதிய உணவுக்காக இங்கு வாடிக்கையாளர்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்குத்தான் அனுமதி என்பதால் பல வாடிக்கையாளர்கள் காத்திருந்து சாப்பிடுகின்றனர். சிலர் திரும்பிச் செல்கின்றனர்.   விரைவில் முழு அளவில் வர்த்தகம் நடைபெறும் என்று திருச்செந்தூர் மணி அய்யர் ஓட்டல் நிர்வாகத்தினர் நம்புகின்றனர். 

இதையும் படியுங்கள்:உணவு விநியோக செயலிகளுக்கு மாற்று


அடுத்ததாக திண்டுக்கல் தலப்பாகட்டி உணவகம் சென்றோம். ஊரடங்கு காலத்திலும் தலப்பாகட்டி உணவகங்களின் கிளைகள் அனைத்தும்  முழு அளவில் செயல்பட்டன. கடந்த ஜூலை 4ம் தேதி வரை உணவு விநியோக செயலிகள் வாயிலாக இயங்கிய உணவகத்தில் இப்போது 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடுகின்றனர். 

உணவகத்தின் வர்த்தகம் கொரோனா காலத்துக்கு முன்பு இருந்ததுபோல இல்லை என்று சொல்கின்றனர். ஆனால், அது பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்று மறுத்து விட்டனர். பார்சல், உணவகத்தில் சாப்பிடுவது என்று இரண்டுக்கும் ஒரே விலைதான் நிர்ணயிக்கப் பட்டிருப்பதால் வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர் என்று சொல்கின்றனர். 100 சதவிகித வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டால், வர்த்தகம் நன்றாக இருக்கும் என்று சொல்கின்றனர். 

-பா.கனீஸ்வரி

#AfterCoronaRelaxation #ChennaiRestaurants #HotalSaravanaBavan

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்  


Comments


View More

Leave a Comments