பசியற்ற ஆரணியை நோக்கமாகக் கொண்ட அறச்செயல்...
கொரோனா கொடுமையினால் மட்டுமல்ல. நாம் வழும் வீட்டின் அருகே அருகாமைப் பகுதிகளில், கோவில்களில், மசூதிகளில், ஆலயங்களில் உணவின்றி கையேந்தும் பலரை தினந்தோறும் பாரத்து வருகின்றோம்.
பசிக்காமலேயே பார்டி என்ற பெயரில் சாப்பிட வேண்டுமே என்று கடனுக்கு சாப்பிட்டுவிட்டு ஒரு பிரபல ரெஸ்டாரெண்டில் இருந்து வெளியே வரும்போது நம் எதிரே கையேந்தும் எத்தனையோ பேரை இன்றைக்கும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். கொரோனாவின் கொடூரத்தால் இந்த எண்ணிக்கை அண்மைகாலமாக அதிகரித்து விட்டது.
தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல உள்ளங்கள் தினமும் இலவச உணவு வழங்கி வருகின்றன. ஆரணியில் அறம் செய்வோம் என்ற அமைப்பின் மூலம் பசியில்லா ஆரணி என்ற இலட்சத்தியத்தை நோக்கி பயணம் செய்கின்றனர். உணவு இல்லாமல் தவிப்போருக்கு தினமும் உணவு வழங்குகின்றனர். இவர்களின் தொண்டுள்ளத்தை அறிந்து இப்போது முகநூல் வழியே பலர் இவர்களைத் தொடர்பு கொண்டு, தங்களது பிறந்த நாள் திருமண நாள் ஆகியவற்றின் போது உணவு வழங்க பண உதவி செய்கின்றனர்.
அறம் செய்வோம் அமைப்பின் மூலம் கடந்த 800 நாட்களுக்கும் மேலாக ஆரணியில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது ஒரு புறம் இருக்க தோழர் சுதாகரின் குடும்பத்தினர் செய்யும் அறப்பணியும் வியக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. சுதாகர் தமது வீட்டின் முன்பு மோர் பந்தல் அமைத்துள்ளார்.
அந்த மோர் பந்தலில் தோழர் சுதாகரின் குழந்தைகள் மோர் வழங்குகின்றனர். மோர் குடிக்கவருவோர், பசியோடு உணவு கேட்கும் போது வீட்டுக்குள் அழைத்து உணவும் அளிக்கின்றனர். சுதாகரின் மனிதநேயமிக்க குடும்பத்தின் அறச்செயலில் நெகிழ்ந்த நாம் அவர்களின் முகநூல் பதிவை இங்கு பகிர்ந்து கொள்கின்றோம். இந்த பதிவை படிப்போர் அறம் செய்வோம் அமைப்புக்கு(அறம் செய்வோம் 9994236650) உதவலாம். ஆரணி டைம்ஸ் முகநூல் பக்கத்தில் தொடர்புகொண்டு உதவிகள் அளிக்கலாம்.
வீட்டுக்குள் கூப்பிட்டு சோறுபோட்டதால் நெகிழ்ச்சி
மோர் குடிக்க வந்த மனநிலை பிசகிய பெண்மணி ஒருவர் "இது எப்படி பத்தும் சோறு கொடு" என்கிறார் என்று மகள் ஓடி வந்து மனைவியிடம் சொல்கிறாள்."உள்ளே கூட்டி வா" என்றார் மனைவி"சாப்பாடுக்கு இன்னும் நேரமாகும்,இட்லி சாப்பிடுறீங்களா" என்று கேட்டு ஹாலில் அமர வைத்து உணவிட பட்டது.."அழாம சாப்பிடணும்,அழாம சாப்பிடணும்" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள் மனைவி. தனியே சாப்பிடட்டும் என்று ஹாலில் அமர்ந்து இருந்த வேறு சிலரை பின்னால் இருக்கும் அறைக்கு அனுப்பி விட்டு என்னிடம் வந்தார். "என்னவாம்" என்றேன்."வீட்டு உள்ளே கூப்பிட்டு தட்டில் இதுவரை யாரும் சாப்பாடு போட்டதில்லை என்று அழுகிறார்.இதுவே வயிறு ரொம்பிடுச்சி இந்த Can ல மோர் கொடு போதும் என்கிறார்.மூன்று இட்லி சாப்பிட்டு எழுந்திரு என்று சொல்லி விட்டு வந்தேன்" என்றாள்.இந்த வீடு தினமும் புதுப்புது ஆட்களை சந்திக்கிறது, புதுப்புது அனுபவங்களை பெற்றுக் கொள்கிறது.
சொல்லி தெரியவேண்டியதில்லை அறம்
உணவு என்பதும் அமிர்தம் என்பதும் ஒன்று..வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததும் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று நகர் புற வீடற்ற பழங்குடி சிறுவர்களை யார் என்று கேட்கும் முன் "மோர் கேட்டு வந்தாங்கப்பா,மோர் சீக்கிரம் காலி ஆகிடுச்சு சாப்பிட்டு போக சொன்னேன்" என்று சொல்கிறார்கள் வீட்டுப் பெண்கள்.நான் இனி எங்கள் வீட்டு பெண்களுக்கு எதுவும் சொல்லித் தர வேண்டிய அவசியமே இல்லை.நலமே சூழ்க..
Comments