பரவி வரும் பன்றி காய்ச்சல்; அறிகுறிகளை தெரிந்து கொண்டு சிகிச்சை பெறுங்கள்….


தமிழ்நாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திடீரென காய்ச்சல் பரவி வருகிறது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையின் தகவலின்படி எச்1 என் 1 எனும் பன்றி காய்ச்சல் பரவி இருப்பதாக தெரியவந்துள்ளது. 

தமிழ்நாட்டில் பரவலாக 50 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. பன்றி காய்ச்சல் உலக நாடுகளில் பரவியபோது  2009-ம் ஆண்டு இந்த காய்ச்சலை கொடிய நோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. 

ஆனால், தற்போது இந்த காய்ச்சலின் அபாயம் உலக அளவில் குறைந்துள்ளது. சாதாரண ப்ளு காய்ச்சல் வரிசையில் பன்றி காய்ச்சலும் இடம் பெற்றிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Must Read: கண்களின் ஆரோக்கியம்;: நான்கு உணவுகளை தவற விடவேண்டாம்

எனவேதான் பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எப்படி பரவுகிறது? 

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரவுகிறது. பாதிக்கப்பட்டோர் இருமினாலோ, தும்மினாலோ அல்லது அவர்களின் எச்சில், சளி ஆகியவற்றின் மூலம் பன்றிகாய்ச்சலை உருவாக்கும்  வைரஸ் கிருமிகள் இன்னொருவருக்கு பரவுகிறது. ஒருவரிடம் பரவிய இந்த வைரஸ் கிருமிகள் குளிர்ந்த இடங்களில் 2 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். மற்ற இடங்களில் பல மணி நேரத்திற்கு வைரஸ் கிருமிகள் உயிருடன் காணப்படும். 

பன்றி காய்ச்சல்கிருமிகள் ஒட்டியிருக்கும் கதவு, கைப்பிடி, நாற்காலி, உள்ளிட்ட பொருட்களை தொடும்போது, இன்னொருவருக்கு பரவுகிறது. 

சிகிச்சை முறைகள் 

'எச்1என்1 எனப்படும்  இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமிகளால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு மருத்துவர்கள் டாமி புளூ மாத்திரையை பரிந்துரை செய்கின்றனர். இந்த மாத்திரையை  உட்கொண்டால் ஒருவாரத்துக்கும் குறைவாகவே காய்ச்சலின் தீவிரம் குறைந்து விடும். 

ஆனால், மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்குப் பின்னரே டாமி ப்ளூ மாத்திரையை எடுத்துக் கொள்ளவேண்டும். பொதுமக்கள்  தாங்களாவே எந்தவித பரிசோதனையும் செய்து கொள்ளாமல் டாமி ப்ளூ மாத்திரியை உட்கொள்ளக்கூடாது என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  பன்றி காய்ச்சல் அறிகுறிகள் மூன்று விதமாக தென்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.  

ஏ டைப் 

இந்த வகை வைரஸ் தொற்று பன்றி காய்ச்சலின் ஆரம்ப அறிகுறியாகும். லேசான காய்ச்சல்,. சளி, இருமல் , தலைவலி, வயிற்றுப்போக்கு வாந்தி ஆகியவை இருக்கும். ஆனால், அனைத்தும் மிதமான வகையில்தான் இருக்கும். அதிலும் குறிப்பாக சிலருக்கு  வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்காது. 

வெறும் இரண்டு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டோரை தனிமை படுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளித்தால் போதுமானது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. சாதாரண அறிகுறிகள் இருக்கும்போது டாமிபுளு மாத்திரை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். 

பி டைப் 

இரண்டாவது வகையில்  காய்ச்சல், தொண்டை வலி அதிகமாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகவேண்டும். அவர்களுக்கு மருத்துவர்கள் உடனடியாக டாமி புளு மாத்திரை பரிந்துரைப்பர். 

Must Read:டெங்கு காய்ச்சல் பாதிப்பு;தவிர்க்க வேண்டிய, உண்ண வேண்டிய உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்…

குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நுரையீரல், இருதயம் பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்களையும் பாதிக்கும். வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும். நோய் குணமாகும் வரை வெளியில் செல்லக்கூடாது.  

சி டைப் 

மேலே குறிப்பிட்ட இரண்டு வகையை விடவும் தீவிர அறிகுறிகள் தென்படும். அதிக மூச்சுத்திணறல் ஏற்படும். ரத்தத்துடன் கலந்த சளிவரும். பசி எடுக்காது.இத்தகைய அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். 

பன்றி காய்ச்சல் தொற்றாமல் இருக்க சில உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும். 

1. நெல்லிக்காய்:

‘நெல்லிக்காயில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. நெல்லிக்காயை முழுவதுமாகவோ அல்லது சாறு எடுத்தோ உட்கொள்ளலாம்.

2. துளசி:

துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இதன் மூலம் பன்றி காய்ச்சலால் நேரிட்ட தொண்டை புண் மற்றும் நுரையீரல் தொற்றுகள் சரியாகும். பன்றி காய்ச்சலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

3. தண்ணீர் 

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு நேரிடலாம். எனவே, உடலில் அதிக அளவில் நீரிழப்பு ஏற்படலாம் அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் நீர் சத்து நிலைத்திருக்கும். .

Must Read:மனநல பாதுகாப்பு; ஐந்து முக்கிய உணவுகளை மறக்க வேண்டாம்

4. பாலில் மஞ்சள் பொடி சேர்த்து குடித்தல்

காய்ச்சல், சளி, இருமல் இருப்போர்  நன்றாக காய்ச்சிய பாலில் மஞ்சள் பொடியை சேர்த்து காய வைத்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும். இதன் மூலம் சளி, இருமல் குணம் அடையும். 

5. பூண்டு:

பூண்டில் அல்லிசின் என்ற பொருள் நமது உடலில் ஆக்ஸினேற்றத்தை அதிகரிக்கும். இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ள பூண்டு உண்பதால் காய்ச்சலுக்கு எதிரான சிகிச்சையில் பயன் கிடைக்கும். தினமும் 2 பூண்டு விழுதுகளை விழுங்கி, வெது வெதுப்பான தண்ணீரை குடிக்கவும். 

பன்றி காய்ச்சல்   

வருமுன் தடுக்கலாம் 

சுய சுகாதாரம் இல்லாததால்தான் பெரும்பாலான தொற்றுகள் பரவுகின்றன.  பன்றிகாய்ச்சல் கிருமிகள் பிறரிடம் இருந்து நம் கைகளில் ஒட்டியிருக்கலாம் என்பதால் அவ்வப்போது கைகளை சுத்தம் செய்து கொள்வது நல்லது. ஒரு மணி நேரத்திற்கு கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம். பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் அருகில் செல்லாமல் இருப்பது நல்லது. கைகழுவுவதுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கொஞ்சம் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். பொது இடங்களில் முக க்கவசம் அணிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்

பன்றிகாய்ச்சல் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்க; 

பன்றிக்காய்ச்சல் குறித்த சந்தேகங்களை அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையை (டிபிஎச்) 044-24350496, 044-24334811, 9444340496, 9361482899 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

-ரமணி 

#H1NI , #SwineFlu, #SwineFluSymptoms , #SwineFluTreatment

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

 

Comments


View More

Leave a Comments