கொரோனா கொடுத்த வாய்ப்பு... வீட்டுசுவையுடன் உணவு விற்கும் பொறியியல் பட்டதாரிகள்...


சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளான மணிகண்டன், வர்ஷா இருவரும் ஏதேனும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று யோசிக்கின்றனர். அப்போது அவர்களுக்கு வந்த யோசனை ஈவன்ட் மேனேஜ்மெண்ட் தொடங்க வேண்டும் என்பதுதான். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த தொழில் அவ்வளவாக கைகொடுக்கவில்லை.

அதே நேரத்தில் கொரோனாவால் தனிமையில் இருந்த பலர் இவர்களிடம் உணவுத் தயாரித்து தரும்படி கேட்டனர். கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், வீட்டில் உணவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

சென்னை புதுப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனிடம் அவர்களின் வெற்றிக்கதை குறித்து கேட்டோம்.

“சென்னை வண்டலூரில் உள்ள ஸ்ரீராமானுஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் ஐடி-யில் பொறியியல் பட்டம் பெற்றேன். அது தொடர்பான வேலைக்கு போகவேண்டும் என்று எனக்கு ஆர்வம் இல்லை. எனக்குப் போலீஸ் வேலைக்குப் போகவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.

படித்து முடித்த நிலையில் போலீஸ் வேலைக்காக தயார் செய்வது ஒருபுறம் இருந்தபோதிலும் நானும் என்னுடன் படித்த வர்ஷாவும் சேர்ந்து ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம்.

நிகழ்வுகள் நடத்தக்கூடிய ஈவன்ட் தொழிலில் ஈடுபட முடிவு செய்தோம். வெறும் ஈவன்ட்கள் மட்டுமின்றி, ஈவன்ட்டுக்குத் தேவைப்படும் அ முதல் ஃ வரை அனைத்துச் சேவைகளையும் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். கடந்த ஜூன் மாதம் இறுதியில் ஈவன்ட் தொழில் தொடங்கி இருப்பதாக நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் தகவல் கொடுத்தோம்.

ஆனால், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் இருந்ததால் யாரும் நிகழ்வுகள் நடத்த முன்வரவில்லை. அதே நேரத்தில் கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் பலர் உணவு சமைத்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டனர். கொரோனா காரணமாக சிறிய அளவில் பிறந்த நாள்விழா, காதணி விழாக்கள், திருமண நிச்சயதார்த்தம் போன்றவற்றை நடத்துபவர்களும், சமைத்துத் தரும்படி கேட்டனர். கிடைத்த வாய்ப்புகளை விட்டுவிட வேண்டாம் என்று இப்போதைக்கு சமையல் ஆர்டர்களை பெற்று வீட்டு சுவையுடன்  சமைத்து கொடுத்து வருகின்றோம்.

முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் எங்களின் விற்பனை பற்றிய தகவல்களை வெளியிட்டோம். தினமும் இரண்டு பேருக்கு உணவு வழங்குவது முதல் வார, மாத அடிப்படையிலும் உணவு சமைத்துத் தரும்படி கேட்கின்றனர்.

கொளத்தூர், அம்பத்தூரில் கிச்சன்கள் திறந்திருக்கின்றோம். அங்கிருந்து உணவுகளை தயாரித்து விநியோகம் செய்கின்றோம். இது தவிர வளசரவாக்கத்தில் உள்ள தெரிந்த திருமணம் மண்டபம் மூலம் வரும் ஆடர்களையும் செய்து கொடுக்கின்றோம். விரைவில் ஒரு அலுவலகம் திறந்து ஈவன்ட் தொடர்பான தொழில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். அதில் ஒரு பகுதியாக உணவு விற்பனையும் தொடரும். உடலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களைக்கொண்டு வீட்டு சுவையுடன் சமைத்துக் கொடுப்பதால், பலர் மீண்டும், மீண்டும் எங்களுக்கு ஆர்டர் தருகின்றனர்,”  என்றார்.   

-அறுசுவை ரசிகன் 


Comments


View More

Leave a Comments