சர்க்கரை நோயாளிகள் பாதங்களைப் பேணுவது ஏன் முக்கியம்?; மருத்துவர் ஃபரூக் அப்துல்லா பிரத்யேக கட்டுரை


இந்தியாவில் இன்றைய பொழுதில் 8 கோடி நீரிழிவு நோயாளிகள் வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியாமல் சில கோடி மக்கள் இருக்கின்றனர்.இந்த சர்க்கரை நோய் ஆட்கொண்ட  மக்களுக்கு முக்கியமானது "கால்களில் ஏற்படும் புண்" குறித்த பிரச்னை.இதை Diabetic foot ulcer என்கிறோம். ஏனைய பிறருக்கு வரும் பாதப்புண்ணுக்கும் ஒரு நீரிழிவு நோயாளிக்கு வரும் பாதப்புண்ணுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உரிய வித்தியாசம் உள்ளது. 

காரணம் 

சரியாக ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்காத ஒரு நீரிழிவு நோயாளிக்கு அவருக்கு வந்த புண் சீக்கிரம் ஆறாது சரி புண் வந்தால் சரியாக ஆறுவது கடினம் என்று தெரியும். ஆனால் பலருக்கு தங்கள் கால்களில் புண் ஏற்பட்டதே பல நாட்கள் தெரியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது . 

எப்படி? 

முற்றிய நீரிழிவு நோய் உள்ள ஒருவருக்கு தனது பாதங்களில் உள்ள நரம்பு மண்டலத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் சிறுகச்சிறுக நலிந்து குறைந்து முற்றிலும் நின்று விடுகிறது. இதனால் அவர்களது பாதங்களில் உள்ள நரம்புகள்   வலி / தொடுதல்/ வெப்பம் உணரும் தன்மையை சிறிது சிறிதாக இழக்கின்றன முதலில் கால் லேசாக எரிச்சல் எடுக்க ஆரம்பித்து. காலம் செல்லச்செல்ல எரிச்சல் மரமரப்பு உணர்வாக மாறி பிறகு உணர்ச்சியற்ற நிலைக்கு சென்று விடும். 

Must Read: உண்ணும்போது குளிர்பானங்கள் குடிக்கக்கூடாது ஏன் தெரியுமா?

உணர்ச்சியற்ற நிலைக்கு சென்ற பாதங்களுக்கு உணர்ச்சி ஏற்படுத்துவது தற்போதைய மருத்துவ வளர்ச்சி கொண்டு இயலாத காரியம்.இந்த நிலையைத் தான்  Diabetic peripheral neuropathy  என்கிறோம் 

நீரிழிவு நோயாளிக்கு வரும் பாத நரம்பு மண்டல அழற்சி. இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பலர் நமது குடும்பங்களிலேயே இருப்பர். இதில் பெரிய சேலஞ்ச் என்னவென்றால்  நமது இந்தியா போன்ற அதிக கிராமங்கள் உள்ள நாட்டில்.. 4 கோடி நீரிழிவு நோயாளிகள் கிராமங்களில் தான் வசிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் காலுக்கு செருப்பு கூட அணியாத பாதசாரிகளாக இருக்கின்றனர். 

ஆகவே தங்களின் கால்களில் ஆணியோ முள்ளோ தைத்தாலும் இவர்களுக்குத் தெரியாது. பல நாட்கள் பார்க்காமல் இருந்துவிட்டு , காலில் சீழ் வைத்து துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்தவுடனோ அல்லது  தங்களது இடுப்பு பகுதியில் நெறி கட்டிய பின்னரோ அல்லது அந்த புண்ணால் ஏற்படும் குளிர் காய்ச்சல் எனும் நிலை வந்தபிறகு தான் பலருக்கும் அந்த புண் பற்றி தெரிய வரும். 

சிலரது கால்களில் இறந்த பிணங்களை  திண்ணும் மேகாட்ஸ் எனும் புழுக்கள்  மண்டிக்கிடப்பதைக்கூட  காண முடியும்  இப்படி ஒரு முள் / ஆணி நமது பாதங்களை தைத்தால் , பாதத்தில் ஊசி போட்டது போல கிருமி நமது தோலுக்கு கீழ் சென்று பத்திரமாக சேர்ந்து விடும்  அங்கு பல்கிப்பெருகும். சீழ் வைத்து வெளியே வரப்பார்க்கும் 

அந்த நேரத்தில் சரியாக சிகிச்சை எடுத்து அறுவை சிகிச்சை செய்து சீழை வெளியேற்றி விட்டு கட்டுகள் போட்டு தகுந்த மருந்து மாத்திரை கள் எடுத்தால் கால்கள் தப்பிக்கும். இல்லாவிடில் அந்த கிருமி தன்னை எதிர்க்க ஆள் இல்லை என அடுத்து தசைகள், எலும்புகள் என ஆதிக்கம் செலுத்தி அழிக்க ஆரம்பிக்கும்.  

சர்க்கரை நோயாளிகள் கால்களை பாதுகாப்பது முக்கியம்

சாதாரண புண்ணாக இருக்கும் ஒன்று . முற்றிய அழுகிய நிலைக்கு செல்ல சில நாட்கள் போதும்.  இன்னும் அடுத்த நிலை "கேன்க்ரீன்"(gangrene) எனும் ரத்த ஓட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டு கால் விரலோ மொத்தமாகவோ கருப்பாக மாறிவிடும்  

இந்த நிலையில் அந்த விரலையோ அல்லது கணுக்காலுக்கு கீழோ நாம் காவு(salvage amputation)  கொடுத்தாக வேண்டும். இல்லாவிடில் உடல் முழுவதும் அந்தக்கிருமி பரவி (septicemia) உயிரை எடுத்து விடும். நாளுக்கு நாள் அறுவை சிகிச்சை அரங்குக்கு ஒரு விரல் எடுக்க . கால் எடுக்க என அனுமதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே தான் செல்கிறது. 

புண்களை வராமல் பார்த்துக் கொள்ள சில பரிந்துரைகள்

1. தினமும் உறங்கச் செல்லும் முன் கால்களை சோப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

2. நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் அமர்ந்து  உங்கள் கால்களை முக்கியமாக பாதங்களை ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு நன்கு பரிசோதிக்க வேண்டும். புதிதாக ஏதேனும் பாதவெடிப்புகள்/ புண்கள்/ முள் குத்திய தடம் ஏதும் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். (INSPECTION) 

2.அடுத்து உங்களின் விரல்களைக் கொண்டு பாதங்களை அழுத்திப்பார்க்க வேண்டும். பல நேரம் முள் குத்திய காயம் வலியே இருக்காது. ஆனால் அந்த இடத்தில் அழுத்தினால் வலி தெரியும். (PALPATION) அப்படி வலி தெரிந்தால் உடனே அடுத்த நாள் காலை மருத்துவரை நாட வேண்டும். 

Must Read: பழங்களை அதன் சாதக பாதகங்கள் அறிந்து உண்ண வேண்டியது முக்கியம்

3.  வாரம் ஒரு முறை கட்டாயம் கால் நகங்களை வெட்ட வேண்டும். நகங்களை வெட்டும் போது தோலோடு ஒட்ட வெட்டக்கூடாது. அப்படி வெட்டும் போது தெரியாமல் புண் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு  

4. பித்த வெடிப்புகள் இருந்தால் தேங்காய் எண்ணெய் / நீரிழிவு நோயாளிகள் பாதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய மாய்ஸ்ச்சரைசர் க்ர்ம்களை தடவலாம். கால் பாதங்கள் வரவரவென்று இருப்பதை தவிர்க்க வேண்டும். 

5.கால் விரல்களுக்கு இடுக்கில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக துடைத்து விட வேண்டும். கால்கள் தண்ணீரில் எப்போதும் படுமாறு வேலை செய்பவர்களுக்கு சேற்றுப்புண் எரும் பூஞ்சை தொற்று ஏற்படலாம். ஆகவே அவர்கள் தினமும் கால் விரல்களுக்கு இடுக்கில் உள்ள இடங்களில் சேற்றுப்புண் (Athletes foot) இருக்கிறதா? என்று பார்த்து இருந்தால் அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும். 

6. பொதுவாக நீரிழிவு நோயாளிகள் அனைவரும் 50 வயதைத்தாண்டியவர்ளாக இருப்பதால் கிட்டப்பார்வை சரியாக இல்லாமல் இருக்கலாம். ஆகவே அதற்குரிய லென்ஸ் கொண்டு பாதங்களை பார்க்கலாம்

7. கால் பாதங்களில் புண் ஏற்பட்டால் போர்க்கால நடவடிக்கையில் சிகிச்சை எடுக்க வேண்டும். 

கட்டாயம் கட்டு போடப்பட வேண்டும். கட்டு போடாமல் வெறும் காலில் புண்ணோடு நடப்பது தவறு. மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவமனையில் தங்கியும் சிகிச்சை எடுக்க வேண்டும். 

8. நீரிழிவு நோயாளிகள் வெளியே எங்கு சென்றாலும் கட்டாயம் செருப்பு அணியாமல் செல்லக்கூடாது. 

காலணிகள் மிகவும் முக்கியமானவை. 

நியூரோபதி வந்தவர்கள் MCR சப்பல் எனும் காலணிகளை வாங்கி அணியலாம். குளிர் காலத்தில் வீட்டில் இருந்தால் கால்களில் சாக்ஸ் அணியலாம். வெளியே ஷுக்கள் அணிந்து செல்லலாம்.  முட்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் ஷூக்கள் அணிந்து வெளியே செல்வது சிறந்தது.  காலை வாக்கிங் செல்பவர்கள் - ஷூ அணியாமல் செல்லக்கூடாது. 

முக்கியமான பரிந்துரை

நீரிழிவை கட்டுக்குள் வைக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவுகளை வீட்டிலேயே க்ளூக்கோமீட்டர் கொண்டு சோதித்து பார்க்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவுகளை சரியாக பராமரித்தால் இந்த நியூரோபதி வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். மருத்துவரிடம் சரியாக காண்பித்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்குரிய மருந்துகளை சரியாக எடுக்க வேண்டும். முகத்தை அழகாக தினமும் கண்ணாடியைப் பார்த்து பராமரிப்பதை விட பல மடங்கு கவனமாக நமது பாதங்களை பராமரிக்க வேண்டும். 

Dr.A.B.  ஃபரூக் அப்துல்லா ,பொது நல மருத்துவர் ,சிவகங்கை

#diabeticpatients  #diabeticfootcare  #Howtocarefoot


Comments


View More

Leave a Comments