பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை பசியாறுங்கள்…. திண்டிவனம் இளைஞரின் அறப்பணி


பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் என்ற நூலில் உள்ள சோற்றுக்கணக்கு என்ற உண்மை கதை பலருக்கு நினைவிருக்கலாம். அந்த அந்த உண்மை கதையில் வரும் கெத்தேல் சாகிப் என்பவர் திருவனந்தபுரம் நகரில் நடத்தும் சிறிய உணவு விடுதி பற்றி ஜெயமோகன் அதில் எழுதியிருக்கிறார். 

காசு இல்லாவிட்டாலும் அங்கே சாப்பிடலாம். முடிந்தவர்கள் தாங்கள் சாப்பிட்டதற்கு முடிந்த பணத்தை உண்டியலில் போடலாம். அதற்காக கெத்தேல் சாகிப் கோபித்துக் கொள்வதில்லை. தனது கடைக்கு வரும் ஒவ்வொருவரையும் பசியோடு வரும் மனிதராகத்தான் பார்க்கிறார். ஒவ்வொருவருக்கும் பரிமாறும்போதும் மிகவும் அக்கறையோடு, ஒரு தாய் அன்போடு பரிமாறுவது அவரது வழக்கம். 

Must Read:  மரபியலும், அறவியலும், அறிவியலும் சேர்ந்த பயிற்சி நிறைவு

திருவனந்தபுரம் நகர் முழுக்க அவர் பெயரும், அவரது உணவகமும் பிரபலம். மீன் கறி சோறு, கோழிகறி சோறு சாப்பிட தினந்தோறும் அங்கு ஏராளமானோர் குவிகின்றனர். சாதாரண கூலி தொழிலாளி முதல், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் வரை  திருப்தியாக சாப்பிட்டு விட்டு தங்களால் முடிந்த பணத்தை உண்டியலில் போடுகின்றனர். 

இப்போது கெத்தேல் சாகிப் உயிரோடு இல்லை எனினும் அவரது வாரிசுகள் திருவனந்தபுரத்தில் பல இடங்களில் இதே போன்ற உணவு விடுதிகளை நடத்தி வருகின்றனர். இதே போன்ற ஒரு உணவு விடுதியை திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் கிராமத்து இளைஞர் ஒருவரும் அவர் தாயும் நடத்தி வருகின்றனர். தென்கோடி பாக்கம் எனும் கிராமத்தை சேர்ந்த இளைஞர் பூவரசன், தனது தாயுடன் சேர்ந்து உணவின் விலை உங்கள் விருப்பம், பணம் இல்லையெனினும் பசியாறிவிட்டு செல்லலாம் என்று எழுதி வைத்து உணவகத்தை நடத்தி வருகின்றார். 

தென்கோடிபாக்கம் கிராமத்தில் இருந்து பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர், கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், இளைஞர்களுக்கு அவரது கடை தினந்தோறும் பசியாற்றுகிறது. இவரது சேவை பற்றி பல முன்னணி செய்தி தளங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. தவிர இவரது சேவையை பாராட்டி மெட்ராஸ் ஸ்ட்ரீட் எனும் யூடியூப் தளத்தில் இவரது வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர். 

தனது பணி குறித்து பிரபல தமிழ் இணைய செய்தி தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கொரோனா காலத்தில் பலர் பசியோடு தவித்து வந்ததை பார்த்தேன். நானும் அப்படியான ஒரு வறுமையில்தான் இருந்தேன். இது போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என்று நினைத்தேன். கொரோனா காலகட்ட முடிந்த நிலையில் அதன் தாக்கத்தால் பலர் இன்னும் கஷ்டப்பட்டு வருகின்றனர். 

Must Read: வெங்காயத்தின் நன்மைகள்; ஜலதோஷம் முதல் முடி உதிர்வதை தடுப்பது வரை பலன் தரும்

எனவே என் தாயுடன் சேர்ந்து இந்த உணவகத்தை நடத்தி வருகின்றேன். காலை 5 மணிக்கு என் தாய் உணவகத்துக்கு தேவையான இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவுகளை சமைப்பார். அவருக்கு நான் உதவி செய்வேன். ஏழரை மணிக்கு மேல் அனைத்து உணவுகளும் தயாராகி விடும். தேவையான உணவை கேட்டு சாப்பிடுவோர், தாங்கள் சாப்பிடதற்கு அவர்களிடம் உள்ள தொகை எவ்வளவோ அதனை கொடுக்கின்றனர். 

பசியாற்றும் மனித நேய உணவகம்

சிலர் காசின்றி, பசியோடும் சாப்பிடுகின்றனர். யாரிடமும் நாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை. தினமும் 1500 முதல் 2000 ரூபாய் வரை கிடைக்கிறது. அதனைக் கொண்டு மறுநாள் உணவுக்கான பொருட்களை வாங்குவோம். எங்களால் முடிந்த வரை இந்த பணியை தொடருவோம்,” என்றார் நம்பிக்கையுடன். பூவரசனை 9585798079, 9626580312 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அவரது அரிய அறச்சேவைக்கு முடிந்தவர்கள் உதவி செய்யலாம். 

-புகைப்படங்கள் நன்றி; ஏபிபி நாடு தமிழ் இணையதளம்

#FoodForPoor  #FoodAsPeoplesLike #Poovarasan #ManithaNeyaUnavagam

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 


Comments


View More

Leave a Comments