மரபீனி மாற்றக் கடுகு - உணவும் உழவும் உணர்வும்-பாமயன்
'இயற்கைவழி வேளாண்மை நமது கடமை' *
- பிரதமர் திரு. நரேந்திரமோடி 75ஆம் விடுதலைத் திருநாள் உரை
'மரபீனி மாற்றப் பொருள்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது' **
(APEDA guideline, NPOP section 8.7)
இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு மரபீனி மாற்றமில்லா சான்றளிப்புக் கட்டாயம் தேவை' ***
(FSSAI order)
நமக்கு முன்பாக மேலே கூறப்பட்ட மூன்று செய்திகள் உள்ளன. முதலில் நமது பிரதமர் விடுதலை நாள் உரையில் இயற்கைவழி வேளாண்மையே நமது கடமை என்றும், அதன் மூலம் சிறு குறு உழவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
இரண்டாவது நம்முடைய அரசின் ஏற்றுமதிக்கு அனுமதி தரும் நிறுவனம், எந்தவிதமான மரபீனி மாற்றப் பொருள்களும் இயற்கை வேளாண்மை அல்லது உயிர்ம வேளாண்மைக்குள் வரவே கூடாது என்று கட்டளையிடுகிறது.
மூன்றாவது மக்களின் உடல்நலம் காக்க முனைப்புடன் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்பாடு ஆணையம், இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கு மரபீனி மாற்றம் இல்லை என்ற சான்று பெற வேண்டும் என்று ஆணையிடுகிறது.
Must Read: 12ம் தேதி காந்திக்கிராமத்தில் இயற்கை வேளாண்மை உரைக்கோவைகள்
இந்த மூன்று செய்திகளும் உணவில் 'மரபீனி மாற்றம்' என்ற செயல்பாடு நாட்டுக்கு நலனுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல மக்கள் உடல்நலத்திற்கும் எதிரானது என்று தெளிவாகத் தெரிகிறது.
முதலில் இந்த மரபீனி மாற்றம் என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.
இது அறிவியல் கண்டுபிடிப்பு என்று சில அறிவாணர்கள் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட உயிரியின் உடலில் இருந்து ஒரு குறிப்பிட்ட தன்மையைப் பெற்றுள்ள மரபீனியை (Gene) பிரித்து எடுத்து வேறொரு உயிரியின் உடலின் செலுத்தி குறிப்பிட்ட தன்மையைப் பெறும் செயல்.
இது அறிவியல் கண்டுபிடிப்பல்ல, தொழில்நுட்பக் கையாட்டம். (technological manipulation). எடுத்துக்காட்டாக, பருத்தியில் நடந்த கதை. பாசில்லஸ்துரிசின்சியன்ஸ் (பி.ட்டி) என்ற நுண்ணியிரில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மரபீனி, பருத்தியைத் தாக்கும் அமெரிக்கன் காய்ப்புழுவைக் கொல்லும் திறன் கொண்டது என்று கருதி பருத்திச் செடிக்குள் நுண்ணுயிரியின் மரபீனியைச் செலுத்தினார்கள்.
Must Read: மரபியலும், அறவியலும், அறிவியலும் சேர்ந்த பயிற்சி நிறைவு
இதன் மூலம் அவர்கள் சொன்னது, விளைச்சல் அதிகரிக்கும் என்பதல்ல, பூச்சிக்கொல்லிப் பயன்பாடு குறையும் என்பதே. விளைவு, காய்புழுக்கள் தாங்குதிறன் பெற்றதுதான் மிச்சம். விளைச்சலும் கூடவில்லை, பூச்சிக் கொல்லி தெளிப்பும் குறையவில்லை. https://www.drishtiias.com/.../bt-cotton-in-india....
கடந்த 2002ஆம் ஆண்டு நுழைந்த பி.ட்டி பருத்தியால் பெரிய விளைச்சல் உயர்வை எட்ட முடியவில்லை. ஆனால் விதைச் சந்தையில் இருந்து பிற மரபீனி மாற்றலில்லாத விதைகள் அனைத்தையும் விரட்டியடித்துவிட்டது. https://www.hindustantimes.com/.../bt-cotton-drives-socio...
கடந்த பத்தாண்டுகளில் சிறிது உயர்ந்துள்ள விளைச்சல் அளவும் கூட உற்பத்தித் திறனால் அல்ல, அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யதால் ஏற்பட்டுள்ளது. அதாவது 2011ஆம் ஆண்டு 33.9 மில்லியன் பொதிகள் விளைந்தது, அது 2021ஆம் ஆண்டு 37.1 மில்லியன் பொதிகளாக உயர்ந்தது. (https://www.statista.com/.../raw-cotton-production-india)
அதே சமயம் 2011ஆம் ஆண்டு, 121.78 லட்சம் எக்டேர் சாகுபடியான பரப்பு 2021 ஆம் ஆண்டு, 132.85 எக்டேர் பரப்பளவாக உயர்ந்தது. (https://cotcorp.org.in/statistics.aspx)
ஆகவே பி.ட்டியின் வருகையால் எந்த உயர்வும் பெரிதாக எட்டவில்லை என்பது அப்பட்டமான உண்மை. அத்துடன் சாகுபடிச் செலவும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆக இந்த தோல்விக்கதை இப்படி இருக்கும்போது, உணவும் பொருட்களின் மரபீனி மாற்றம் வரவே வராது என்று அடித்துச் சொன்னவர்கள், (பருத்தியும் ஒரு வகை உணவுப் பயிர் என்பது அவர்களுக்குத் தெரியாது போலும், மதுரைப் பக்கம் வந்து பருத்திப்பால் குடித்திருக்க மாட்டார்கள் போலும், மாட்டுக்கு பருத்திக் கொட்டை அரைத்துக் கொடுப்பதைப் பார்த்திருக்க மாட்டார்போலும், அந்த மாடுகள் தரும் பாலைக் குடித்திருக்கமாட்டார்கள் போலும்...) இப்போது உணவுப் பொருளாக உள்ள கடுகில் கைவைத்து உள்ளார்கள்.
கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத் தடைக்குப் பின்னர், அமைதியாக இருந்துவிட்டு அதில் எந்தவித மாற்றமும் செய்யாமல் மீண்டும் அதே மரபீனி மாற்றக் கடுகு விதையை அனுமதித்துள்ளது மரபீனிப்பொறியல் ஏற்பிசைவுக்குழு (GEAC).
இந்தக் கடுகிற்கு அவர்கள் வைத்துள்ள பெயர், தாரா கலப்பினக் கடுகு ( DMH11) என்பதாகும். மரபீனி மாற்றம் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் மக்களிடம் எதிர்ப்பு வரும் என்று குயுத்தியாக பெயரை மாற்றிக் கூறுகின்றனர்.
Must Read:கூந்தல் எண்ணை தயாரிக்கும் மென்பொருள் பொறியாளர்…
மரபீனிமாற்றக் கடுகு அதிகமான விளைச்சல் தரும், வெளிநாட்டில் இருந்த வந்த நுட்பமல்ல 'நமது' அறிவாணர்களே கண்டறிந்த சுதேசி நுட்பம் என்ற முழக்கங்களை முன்வைக்கின்றனர். முதலில் இவர்கள் கூறும் 30 விழுக்காடு விளைச்சல் உயர்வு எப்படி வரும் என்று விளக்கவில்லை.
உலக சராசரி ஏக்கருக்கு 2200 கிலோ, நாம் ஏக்கருக்கு 1200 கிலோ எடுக்கிறோம் என்று கூறுகிறார்கள். எந்த நாடுகளிலும் தாராக் கடுகை சாகுபடி செய்து (ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக) பார்க்கவில்லை. அடுத்ததாக இந்த சுதேசி என்பதே தவறானது, இதன் அடிப்படைத் தொழிநுட்பமான பர்னசே பார்ஸ்டார் என்பது, (மகரந்தத்தூளில் மாற்றம் நிகழ்த்துவது) பேயர் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்குரியது. அதற்கு அவர்கள் காப்புரிமை பெற்றுள்ளார்கள்.
இந்த விதைகளைப் பயன்படுத்தும்போது, அதிக அளவு பேயர் நிறுவனத்தின் களைக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும். இது அந்த களைக்கொல்லியைத் தாங்கும் திறன் கொண்டது. ஆனால் அந்தக் களைக்கொல்லிகள் மண்ணில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குளுஃபோசனைட் (Glufosinate) என்பது மிக மோசமான உடல்நலக் கேடுகளை குறிப்பாக நரம்பு மண்டலம், உணவு மண்டலம் ஆகியவற்றைப் பாதிக்கக் கூடியதாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. https://assets.nationbuilder.com/.../glufosinate.pdf....
இந்தக் களைக்கொல்லியையும் பேயர் நிறுவனமே கொடுக்கிறது. எனவே மறைமுகமாக பன்னாட்டு நிறுவனத்திற்கு உதவி செய்யும் வேலையைத் தவிர இதை வேறு என்ன சொல்வது?.
அறிவியல் என்பது வேறு, தொழில்நுட்பம் என்பது வேறு, இரண்டையும் நமது அறிவாணர்கள் குழப்பிக் கொள்கின்றனர். சூழலியல் பாதுகாப்புக் குறித்துப் பேசுவோர்களையும் இயற்கை வேளாண்மை ஆர்வலர்களையும் அறிவியலுக்கு எதிரானர்கள் என்று திரித்துக் கூறுகின்றனர். நாம் அறிவியலுக்கு எதிரானவர்கள் அல்ல, அறிவியல் பொதுவானது. ஆனால் தொழில்நுட்பம் எல்லாருக்கும் பொதுவானதானல்ல,
பரந்துபட்ட மக்களுக்கான தொழில்நுட்பம் வேறு, குறிப்பிட்ட சிலருக்கான தொழில்நுட்பம் வேறு. ஆகவே இந்தியாவில் உள்ள இரண்டு ஏக்கருக்கும் குறைவாக உள்ள மக்களுக்கான தொழில்நுட்பம் வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் பைகளை நிரப்பும் தொழில்நுட்பம் தேவையில்லை. யூரியாவைப் பயன்படுத்தும் நுட்பத்தைவிட, சாணத்தையும், மாட்டுச் சிறுநீரையும் எப்படி எளிமையாக, சிறப்பாக, சுத்தமாகப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
சமூகவியல் பொருளியல் சிக்கல்களை, தொழிநுட்பச் சிக்கல்களாக குறுக்கிக் பார்க்கும் கார்டீசிய குறைப்புவாதமே இங்கு தெரிகிறது. விளைச்சல் அதிகமானால் உழவர்கள் பயன்பெறுவார்கள் என்ற சொத்தை வாதம் வருத்தமளிக்கிறது. சந்தை என்ற மோசமான பூதம் நம்முன்னே உள்ளது. அதிகமாக விளையும்போது விலை சரிந்துவிடும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களை என்வென்பது. சரியான விலை உறுதிப்பாடு இல்லாதபோது, எவ்வளவு விளைவித்தாலும் உழவர்களுக்கு என்ன பயன் கிட்டும்?
Must Read: கண்ணதாசன் மெஸ்சின் வெற்றியின் ரகசியம் சொல்லும் கவிஞரின் மகள் கலைச்செல்வி
எந்தக் வரைமுறையும் இல்லாமல் இந்திய நிலங்களில் கொட்டப்படும் களைக்கொல்லிகள் பற்றிய பெரிய ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை. ஆங்காங்கே வரும் பகுதி சார்ந்த ஆய்வுகள் நமக்கு அச்சமூட்டுபவையாக உள்ளன. முதலில் கிளைபோசைட் களைக்கொல்லி புற்றுநோய்க் காரணி இல்லை என்றார்கள், இப்போது அதுவும் புற்றுநோய்க்காரணி என்று கண்டறிந்துள்ளார்கள்.
இதேபோல் குளுஃபோசைட்டும் இருந்தால் என்ன செய்வது. ஒரு கட்டத்தில் சூழலில் நஞ்சு பரவியதோடு, சூப்பர்களைகள் என்ற சொல்லப்படும், கொல்ல முடியாத களைகள் உருவாகும்போது இந்திய வேளாண்மையே ஆபத்தில் சிக்கிவிடும் அல்லவா?
ஒரு முறை முன்னாள் நடுவண் அமைச்சர் செயராம் ரமேஷ் கூறினார், பணியில் இருக்கும்போது மரபீனி மாற்றப் பயிர்களை ஆதரிக்கும் விஞ்ஞானிகள், ஓய்வுக்குப் பின்னர் சூழல் பாதுகாப்புப் பணியில் முனைப்புக் காட்டுகிறார்கள். அவர் கூற்று உண்மையானால், அறிவியல் அறிஞர்களுக்கு புற அழுத்தம் உள்ளதோ என்ற ஐயம் தோன்றுகிறது.
மீண்டும் முதல் பத்திக்கு வருவோம், இந்தியாவை இயற்கை வேளாண்மைக்கான நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் விரும்பம் உண்மையிலேயே நிறைவேற வேண்டுமானால், நம் நாட்டின் வேளாண் பொருள் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமானால், நமது உணவில் தீங்கான மரபீனிகள் வராமல் இருக்க வேண்டுமானால், மரபீனி மாற்றக் கடுகை துளியேனும் அனுதிக்கக் கூடாது.
இந்த கட்டுரைக்கான தரவு ஆதாரங்கள்;
* - இந்தியப் பெருநாட்டின். 75ஆம் விடுதலைத் திருநாள் உரையில் இந்தியத் தலைமை அமைச்சர் திரு. நரேந்திரமோடி. (ஆக.15 2022)
https://www.hindustantimes.com/.../modi-pitches-for...
** National Programme Organic Production, Ministry of Commerce & Industry 8.7
*** https://fssai.gov.in/.../5f3fb6de8a4f1Order_GM_Food_21_08...
#DMH11 #BtCotten #BtMustard #DontAllowBtMustard
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments