தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம்… உள்ளம் நெகிழ்ந்த பதிவுகள்!


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப் போவதாக" கடந்த ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி இந்தத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதற்கட்டமாக சில மாநகராட்சிகள், நகராட்சிகள், சில தொலைதூரக் கிராமங்களில் அமல்படுத்தப்பட்டது. ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு முதற்கட்டமாக இந்தத் திட்டத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.

தற்போது இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்கூடங்களிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் 17 லட்சம் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த  வெள்ளிக்கிழமையன்று திருக்குவளையில் விரிவாக்கப்பட்ட காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தார். 

Must Read: சென்னை உணவு வரலாற்றில் தடம் பதித்த வடகறி, சிக்கன் 65…

இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மதிய உணவுத்திட்டத்தை செயல்படுத்தியது தமிழ்நாடுதான். பின்னர் இது சத்துணவுத்திட்டமாக மாறியது. முட்டை, வாழைப்பழம் என சத்துமிக்க உணவுகள் வழங்கப்பட்டன. இப்போதும் நாட்டிலேயே முதல்முறையாக காலை உணவுத்திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. 

காலை உணவுத்திட்டத்தை தொடங்கிய முதலமைச்சர்

இதன்மூலம் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த சிறார்கள் காலை உணவு இல்லை என்ற கவலையுடன் பள்ளி செல்ல வேண்டியதில்லை. அறிவிப்பசிக்கு கல்வியுடன், வயிற்றுப்பசிக்கு சோறிடும் நிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. 

காலை உணவுத்திட்டம் குறித்து முகநூலில் டிஜிட்டல் கிரியேட்டர்கள் உளப்பூர்வமான பதிவுகளை வெளியிட்டிருக்கின்றனர். உடுமலைப்பேட்டையை சேர்ந்த திரு. ஷாஜஹான் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவு; 

நலத்திட்டங்கள் என்பவை முதலீடுகள்

திருப்பூர் பக்கம் பின்னலாடை நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள். கிளாசிக் போலோ போன்ற பல்வேறு பெயர்கள் கொண்ட பேருந்துகள் கச்சிதமாக குறிப்பிட்ட நேரத்துக்கு அங்கு வரும். அதேபோல, மாலை 7.30 - 7.40 வாக்கில் பேருந்துகள் அவர்களை இறக்கிவிட்டுச் செல்வதையும் கவனித்தேன்.

காலையில் ஏழரை மணிக்கு வேலைக்குச் செல்ல அங்கே நிற்கிறார்கள். என்றால், எழுந்து, காலைக்கடன் முடித்து, தனக்கும் குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் சமைத்து, குளித்து, சாப்பிட்டு ... இத்தனை வேலைகளையும் முடிக்க எத்தனை மணிக்கு எழுந்திருப்பார்கள் என்ற கேள்வி உழப்பிக்கொண்டே இருக்கும். 

குறித்த நேரத்துக்கான பேருந்தை தவற விட்டுவிட்டால் கட்டணப் பேருந்தில் போய் நேரத்துக்கு வேலைக்குப் போகவும் முடியாது. அன்றைய கூலி கிடைக்காது. ஏழரை மணிக்கு தயாராக எவ்வளவு பரபரப்பாக இயங்கியிருப்பார்கள் என்று வியப்பாக, மலைப்பாக இருக்கும்.

அந்தப் பரபரப்புக்கு இடையில் சாப்பிடத்தான் முடியுமா? அதிலும் பள்ளி செல்லும் பிள்ளைகள் உள்ள பெண்களாக இருந்தால். பிள்ளைகளை சாப்பிட வைக்க முடியுமா? இல்லை அவர்களுக்கென தயாரித்து டிபன் பாக்சில் போட்டுத்தரத்தான் நேரம் இருக்குமா? 

சில மாதங்களுக்கு முன்புதான் காலை உணவுத் திட்டம் பற்றிய அறிவிப்பும் வந்தது முதல்வர் ஸ்டாலின் ஒரு சிறுமிக்கு உணவு ஊட்டுகிற படம் வந்தது. என்னைப் பொறுத்தவரையில் இதுபோன்ற செய்திகளும் படங்களும் நெகிழச் செய்பவை. கண் கலங்கச் செய்பவை.  

Must Read: தன்னம்பிக்கையுடன் டெலிவரி செய்யும் ஒரு கை இல்லாத ஸ்விக்கி ஊழியர்

காலை உணவுத் திட்டம் மாநிலமெங்கும் வந்தால் மேலே குறிப்பிட்ட உழைக்கும் பெண்களுக்கு - அவர்களின் பிள்ளைகளுக்கு எவ்வளவு பெரிய ஆறுதலாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டதுண்டு. 

இன்று ஒரு வீடியோ பார்த்தேன். முதல்வர் ஸ்டாலின் தன் அருகே இருக்கும் ஒரு சிறுவனுடன் பேச்சுக் கொடுக்கிறார். அவனுடைய கடிகாரத்தைப் பார்க்கிறார். தன் கடிகாரத்தைக் காட்டுகிறார். செல்லமாக தாடையில் தடவிக்கொடுத்து, தம்பி... முதல்ல ஸ்வீட் சாப்பிடு என்கிறார். 

அந்த வீடியோவைப் பார்த்ததும் அன்று போலவே இப்போதும் கண்கலங்கினேன். நலத்திட்டங்கள் என்பவை சலுகைகள் அல்ல, அவை முதலீடுகள். அதனால்தான் தமிழ்நாடு பல துறைகளிலும் முன்னிலை வகிக்க முடிகிறது. 

காலை உணவு என்ற தாய்மை சிந்தனை 

விருதுநகர் மாவட்டம் கே.மடத்துப்பட்டி பள்ளியில் ஆசிரியை ஆகப் பணியாற்றும் பாரதி சந்தியா அவர்களின் முகநூல் பதிவு 

என் புள்ளைகளுக்கு கடந்த 25 ஆம் தேதி அம்புட்டு சந்தோசம்.சரவணன் வந்து சொல்றான்.அம்மா காலைல  ஆசுபத்திரியில் கக்கூஸ் கழுவற  வேலைக்கு போய்டுவாகள்ல.அக்கா தான் சோறு பொங்குவா.இனி இங்க வந்து சாப்பிட்டுகலாம் என்கிறான்.எலேய்..எங்க அம்மாவும்  தெரு குப்பை அள்ள காலைலயே கிளம்பிடுவாக.கஞ்சியும்,வெங்காயமும் தான் இருக்கும் .இனி கவலையில்லங்கறான்... இன்னொரு குழந்தை. காலை உணவு அவர்களுக்கு சந்தோசமாக. பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்களும்,தீப்பெட்டி ஆபிசுலயும் வேலை பாக்கற பெற்றோர்கள். அவர்களின் பிள்ளைகள்தான் இவர்கள். 

நல்ல சாப்பாடோ,இது போல வெரைட்டி சாதம்லாம் எம் புள்ளைகளுக்கு தேவாமிர்தம் தான்.

போன வாரம் காலைல 11 மணி வாக்கில ஒரு குழந்தை கேக்கறா..

தெனமும் காலைல  சாப்பிட்டியானு கேப்பீகள்ல..ஏன் கேக்கல..பாடத்தின் மும்முரத்தில் மறந்திருந்தேன்.

காலை உணவுத்திட்டம் தொடக்க விழா

நான் சாப்பிடல..அம்மாவுக்கு முடியல என்றவளுக்கு அப்பா இல்லை.பதறிப் போய் என் டிபன் பாக்ஸை கொடுக்கிறேன்.சாப்பிட்டாள். பெரும் பாலும் சத்துணவு  சாப்பிடற நான்..நல்ல வேளை அன்னிக்குனு பாத்து டிபன் பாக்ஸ் கொண்டு வந்த்து சரியா போச்சு.

அப்றம் போன வாரம் ஸ்காலர்ஷிப் பத்தி கேக்க வந்த அழகிஅம்மாவோ தள்ளு வண்டில கம்மங் கூழ் விக்கறவக.அவளுக்கும் அப்பாஇல்ல.அவகஅம்மாவோ மறு நாள் கம்மங்கூழ தூக்காளி நெறய வைச்சு,அதோட தொட்டுக்க மொளகா ஊறுகாயும் கொடுத்து விட்டாக.நல்லா இருந்துச்சு.

சேமியா உப்புமா,கேசரி. எனக்காக தட்டில வாங்கி வைச்சிட்டு உக்காந்திருக்குதுக எம் புள்ளைக...

ஆட்டோ எப்படா வரும்னு எம்  புள்ளைக என்னைய எதிர் பாத்துட்டு..வந்து சாப்பிட்டேன்.காலை உணவு சூப்பர்.மதியம்  சத்துணவில சாம்பார் சாதம்..வாங்கிகிட்டோம். தொட்டுக்க வெங்காயம் வதக்கினத கொண்டு வருது ஒரு பாப்பா.

சாப்பிடற நேரத்துல ஒரு தாத்தா சாப்பாடு இல்லைனு விமல் செல்லவும் என் சாப்பாட கொடுத்து விட்டாச்சு. செவிக்கும்,வயிற்றுக்கும் உணவு தந்த முதல்வர் ஸ்டாலின் எனக்கும்,எம் பிள்ளைகளுக்கும் கடவுள் தான்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தேரே. வயிற்றுக்கிச் சோறும்,பயிற்றுப் பல கல்வி  தந்து இந்த பாரினை உயரச் செய்யும் தமிழக அரசினை வணங்குகிறேன். 

இன்னிக்கு காலைல வாட்ஸ் அப்ல  தமிழா தமிழா வீடியோவ அனுப்பி..இப்ப பசிக்கல டீச்சர்னு அனுப்பி இருக்கா லதா...பசிக்குதுனு 12 மணிக்கே சோத்து பெல் எப்ப அடிப்பாக டீச்சர்னு இனி தட்டை தூக்காதுக என் புள்ளைக. காலை சாப்பாடு தான் இப்ப கெடைச்சுருச்சே. கலைஞர் தந்த மக்காச் சோள மாவும்,சத்துணவும் சாப்பிட்டு வளர்ந்தவ தா நானும். ஒரு நல்ல அம்மாவாக எங்க தமிழக முதல்வர். காலை உணவு என்ற சிந்தனை தாயுள்ளமே.

“உயிர் வாழ ருசி தேவையில்லை ஒரு வேளை உணவு வேண்டும்”

டிஜிட்டல் கிரியேட்டர் திரு.வெங்கடேஷ் ஆறுமுகம் எழுதியுள்ள பதிவு;

அது எங்கள் குடும்பத்தில் வறுமை மைக்கேல் ஜாக்ஸனைப் போல துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருந்த சமயம். எனக்கு 15 வயது பெரிய தம்பிக்கு 12, தங்கைக்கு 10, கடைசி தம்பிக்கு 6 வயது நாங்கள் அனைவருமே நன்கு வசதியாக வாழ்ந்து விதவிதமான உணவுகளை உண்டவர்கள். பசி என்று எழுத்தில் கூட எழுதிப்.படித்ததில்லை

அய்யோ பாவம் இது வாழ்ந்து கெட்ட குடும்பங்க என்பது எங்களை அறிந்த அனைவரின் வாயிலும் இருந்து வரும் பரிதாப வார்த்தைகளாகும். எங்கள் வசதி காலத்தில் வீட்டில் சமைக்கும் பாத்திரங்களாக இருந்த பித்தளைப் பாத்திரங்கள் எங்கள் வறுமையில் விலைக்கு போய் பசியாற்றும் பாத்திரத்தை..கனகச்சிதமாக செய்தன. 

காலை உணவுத்திட்டம்

எல்லாம் விற்று வீடே அலுமினியமாய் ஜொலித்த போது அதன் ஜொலிப்பு தெரியாத வண்ணம் அங்கு வறுமை ஒளி வீசிப் பிரகாசித்தது! வீட்டில் இருப்பதை சாப்பிட்டு பழைய சோற்றை அதிசயமாகப் பார்த்து முதலில் அதை சாப்பிடாது விலக்கி பிறகு அதை மனதார ஏற்றுக் கொண்டதை ஃபாஸ்ட் ஃபார்வேர்டாக ஓட்டிவிடுங்கள். 

எங்கள் 2 வேளையைத் தின்று போஷாக்காக வளர்ந்த வறுமை 3 வேளை சாப்பாட்டை 1 வேளை ஆக்கியது! எந்த பழைய சோற்றை வேண்டாம் என விலக்கி வைத்தோமோ அதாவது காலையில் கிடைக்காதா என்று ஏங்க வைத்தது. இதில் ஒரே ஆறுதலான விஷயம் நாங்கள் பசி தாங்கப் பழகிக் கொண்டோம். 

நன்றாக வாழ்ந்த குடும்பம் என்னும் ஒரு தகுதியே என் தந்தைக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காமலிருக்க அற்புதமாக உதவியது. மூத்தவன் எனக்கே 15 வயது என்பதாலும் அப்போது எந்த வேலையும் தெரியாததாலும் எதற்கும் முயற்சிக்கவில்லை. 

அம்மா மட்டும் ஒரு வழி கண்டுபிடித்தார். அது என்ன வேலை தெரியுமா? முள் வெட்டுவது! சீமைக் கருவேல மரத்தை வெட்ட வேண்டும். ஒரு கட்டு முள் அப்போது 2 ரூபாய்! அம்மா ஒரு நாளைக்கு 8 முதல் 10 கட்டு வெட்டுவார்கள்! அதில் 2 கட்டு எங்கள் வீட்டு சமையலுக்கு எரிக்க.. மீதிக்கு 16 ரூபாய்கிடைக்கும்! அன்றைக்கு 16 ரூபாய் என்பது மிகப் பெரிய தொகையாக இல்லாவிட்டாலும் 2 வேளை.சாப்பாடு நிச்சயம். 

Must Read: தமிழர்களின் மிளகு ரசத்தில் இருந்து உருமாறிய முல்லிகாடாவ்னி சூப் பற்றி தெரியுமா?

முதல் 6 மாதங்கள் காலை உணவுக்கு மிகவும் ஏங்கினோம். பாதாம், பிஸ்தாவாக அள்ளியள்ளி சாப்பிட்ட எங்களை பழைய சோற்றுக்கு ஏங்கவிட்டது வறுமை.

இந்த சமயத்தில் ஒரு நாள் சூடான உப்புமா சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. யார் வீடு என்பதை சொல்ல விரும்பவில்லை சட்டியில் அடி பிடித்து சற்றே கருகிப் போன உப்புமா அது! கீழே கொட்ட வேண்டிய அந்த உப்புமாவை எங்களுக்கு தந்தனர். ஆனால் அந்த உப்புமா அன்றைக்கு எங்களுக்கு தேவாமிர்தமாக ருசித்தது. 

13 வயது வரை நன்கு விதவிதமாக சாப்பிட்டு.. வெறும் 2 வருடங்கள் வறுமையில் வாடிய எங்கள் வாய்க்கே அந்த ருசி அற்புதமாக இருந்தது என்றால் காலம் காலமாக கஷ்டப்படும் ஏழைகளின் நிலையை இப்போது எண்ணினாலும் அழுகை வரும். உயிர் வாழ ருசி தேவையில்லை ஒரு உணவு வேண்டும் என்பதே வாழ்வியல். 

தொகுப்பு; ரமணி 

#tngovtmorningfoodscheme #morningfoodscheme #tnstudentsmorningfoodscheme #kalaiunavuscheme

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments