எளிய மருத்துவம் எல்லோரையும் சென்றடைவதற்கான முயற்சி….


செம்பருத்தி மூலிகை மருத்துவம் சார்பில் கடந்த  14ஆம்தேதி பாரம்பரிய மருத்துவ பயிற்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தேன். திட்டமிட்டபடி  சென்னை மாதவரம் பால்பண்ணையை அடுத்த மாத்தூரில் இந்த பயிற்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இயற்கை நல விரும்பிகள், உடல்மீதான அக்கறை உள்ளவர்கள் மட்டுமல்லாது சித்த மருத்துவர், ஓமியோபதி மருத்துவர் மட்டுமல்லாது அலோபதி மருத்துவர் என 25-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டால் பட்டியல் நீளும்; பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறுவதுடன் மக்களை ஒருங்கிணைக்க உதவிய Mark Zuckerberg | Facebook (முகநூல்) அவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

Must Read:  தக்காளிக் காய்ச்சல் என்ற கை,கால் வாய் தொற்று நோய் அச்சம் தேவையா? 

எளிய மருத்துவம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தலைவலி, காய்ச்சல், ஆஸ்துமா, வாந்தி - பேதி, வயிற்றுவலி, சிறுநீரகக்கல் பிரச்சினை என ஏராளமான உடல்நலக்கோளாறுகளை சரிசெய்வது எப்படி என்று என்னால் இயன்ற மருத்துவ தகவல்களைக் கூறினேன். அஞ்சறைப்பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் மட்டுமன்றி திப்பிலி, கருஞ்சீரகம் உள்ளிட்ட கடைச்சரக்குகள் மற்றும் வீட்டைச் சுற்றிலும் வளரக்கூடிய குப்பைமேனி, கீழாநெல்லி, கானாவாழை, அம்மான்பச்சரிசி உள்ளிட்ட மூலிகைகளைக் கொண்டு நோய்களை விரட்டும் வழிகளை எடுத்துச் சொன்னேன். 

செம்பருத்தி மூலிகை மருத்துவம் நடைபெற்ற நிகழ்வு

ஒருநாள் முழுவதும் நிகழ்ச்சியை நடத்தமுடியுமா என்ற எனது சந்தேகம் மூலிகைகளைப் பற்றி பேசும்போது தகவல்கள் நீண்டுகொண்டே போனது. இயன்றவரை எடுத்துச் சொன்னேன். அடிப்படை வாழ்வியல் மற்றும் உணவியல்முறை பற்றி பலரும் புரிந்துகொண்டதாகக் கூறியதில் மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வை சென்னை மட்டுமன்றி வேறு சில இடங்களிலும் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளேன். ஒத்துழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. நிகழ்ச்சி நல்லமுறையில் நடைபெற என்னோடு கரம்கோர்த்த வானவன் மாலதி, சித்த மருந்தாளுனர் ஶ்ரீதர், மண்வாசனை மேனகா, சுதேசி கமல் மற்றும் குறைந்த தொகையைப் பெற்று இடமளித்து உதவிய ஜம்புலிங்கம் ஆகியோருக்கு நன்றிகள் பல.

உணவு பரிமாறுவது உள்ளிட்ட பணிகளை எனக்குப் பின்னால் இருந்து கவனித்துக்கொண்ட என் குடும்பத்தாருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். காலைச் சிற்றுண்டியாக வெள்ளரிக்காய், பேரீச்சை, நிலக்கடலை, தேங்காய், உலர் திராட்சை மற்றும் ஆப்பிள் போன்றவற்றைக்கொண்டு இயற்கை ஆர்வலர் வானவன் அவர்கள் தயாரித்த கலவை உணவு வழங்கப்பட்டது. 

மதிய உணவில் வழக்கமான உணவுடன் வாழைத்தண்டு கூட்டு, வெண்டைக்காய் பொரியல், சிறுபருப்பு பாயாசம் விருந்தளிக்கப்பட்டது. அப்போது முதல் உணவாக கறுப்பு கவுனி சோறு மற்றும் சுட்ட கத்தரிக்காய் மசியல் பரிமாறப்பட்டது. மேலும் மண்வாசனை மேனகா அவர்கள் சார்பில் கறுப்பு கவுனி ஐஸ்கிரீம் சுவைக்க தரப்பட்டது. 

Must Read: கோவை மாவட்டத்தின் கறிசோறும், விரதமும்

மாலையில் சுதேசி கமல் அவர்கள் தயாரித்த சுக்கு காபி மற்றும் வாழைப்பூ வடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக நம்மைச் சுற்றி வளரக்கூடிய மூலிகைச் செடிகள் பார்வைக்காக வைக்கப்பட்டு விளக்கப்பட்டது. வானவன் அவர்களின் நாட்டு ரக விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இயற்கை விவசாயி மாரிமுத்து அவர்கள் அனைவருக்கும் பூனைக்காலி விதைகளை வழங்கினார். நான் எழுதிய இயற்கை மருத்துவ புத்தகம், வானவன் அவர்கள் எழுதிய உயிர்வேலி, மூலிகைச் சாறு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. நல்வழி என்ற மருத்துவ மாத இதழ் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் சில பகுதிகளை தமிழ் இல்லம் THAMIZH ILLAM  யுடியூப் சேனலில் காணலாம். 

-எம்.மரியபெல்சின் 

(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#ChennaiEvents #TamilMedicine  #PattiVaithiyam  


Comments


View More

Leave a Comments