நியாய விலைக் கடைகளில் சிறுதானியங்கள்..இயற்கை ஆர்வலர்கள், ஊடகங்களின் வெற்றி!


திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதையும் அதன் பேரில், வேளாண்மை பட்ஜெட்டில் குறிப்பிட்ட வாக்குறுதியையும் இப்போது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆம்.  நியாயவிலைக் கடைகளில் சிறுதானிய விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்க உள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பு பலரது வரவேற்பை பெற்றுள்ளது. 

இப்போதைக்கு சென்னை மற்றும் கோவையில் இருக்கும் நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. கம்பு, ராகி, திணை, குதிரைவாளி மற்றும் சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை அரசு குறிப்பிட்டுள்ள மாநகரங்களில், ரேஷன் கடைகளில் வாங்கி  பொதுமக்கள் பயன்பெறலாம். 

Must Read:திருப்பூரில் கொரோனா தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு உணவு டெலிவரி

சிறுதானியங்களை விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக வாங்குவதற்கும் அதன் விலையை நிர்ணயம் செய்வதற்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.  இந்த குழுதான் சிறுதானியங்களை கொள்முதல் செய்வது குறித்தும் முடிவு எடுக்க உள்ளது. 

இதன்மூலம் இயற்கை ஆர்வலர்கள், வேளாண் ஊடகங்கள், முக்கிய ஊடகங்கள்  முன்னெடுத்த இயற்கை உணவுக்கு ஆதரவான பரப்புரை அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது. முழு தமிழ் சமூகமும் இயற்கை உணவின் வழி வாழ்வதற்கான முதல் படியாகவும் இது கருதப்படுகிறது. 

ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை நம்மாழ்வார் ஐயா அவர்கள்… திரு.நெல் ஜெயராமன் அவர்கள்… திரு.அரச்சலூர் செல்வம் அவர்கள்… திரு.ஒரிசா பாலு அவர்கள்… மரு.கு.சிவராமன் அவர்கள்… பல அமைப்புகள்… இந்த வெற்றிக்கான விதையைத் தூவியவர்கள் என தாராளமாக சொல்லலாம். தமிழ் இந்து… விகடன்… போன்ற பத்திரிகைகள் மற்றும் காணொளி சமூக ஊடகங்கள் கடந்த பல வருடங்களாக இயற்கை மற்றும் மரபு சார்ந்த விஷயங்களுக்கு கொடுத்து வரும் ஆதரவு மிகப் பெரியது! ஊடகங்களும், எழுத்துத் தளமும் நினைத்தால் நல்ல விஷயத்தை மக்களிடம் எளிதாக சேர்க்க முடியும். இந்த விஷயத்தில் அதை தான் செய்திருக்கின்றன ஊடகங்கள்!

 

இவ்விஷயத்தில் அருகிலிருந்து பார்த்த சிலரின் உழைப்பைப் பற்றி எழுதுவது மகிழ்ச்சியான விஷயம்! 2005-06 ஆண்டுகளில் மரபணு பயிர்களின் ஆதிக்கம் குறித்த பேச்சு அடிபடும் போது, பலரோடு சேர்ந்து அதை எதிர்த்து நம் மரபு குறித்த பெருமைகளை பேசத்தொடங்கியிருக்கிறார் மரு.கு.சிவராமன் அவர்கள்! நமது மரபின் பெருமைகளுள் ஒன்றான சிறுதானியங்கள் குறித்து ஆரம்பத்தில் எழுதவும் பேசவும் தொடங்கி பரப்புரை நிகழ்த்த தொடங்கியிருக்கிறார்! எனக்குத் தெரிந்து விகடன் குழுமத்தால் வெளியிடப்பட்ட மரு.சிவராமன் அவர்களின் ’ஆறாம் திணை’ தொடர் பட்டித் தொட்டியெல்லாம் சிறுதானியங்களை கொண்டு சேர்த்தது என்பதில் சந்தேகமில்லை! சிறுதானியங்கள் பற்றி பரவலாக மக்கள் பேசத் தொடங்கிய காலக்கட்டம் அது!

Must Read:துத்தி கீரை சாப்பிட்டால் அஜீரணக்கோளாறு நீங்கும், உடல் சூடு குறையும்…

சிறுதானியங்களில் வெரைட்டியாக எப்படியெல்லாம் சமைக்கலாம்… ருசிக்கலாம்… அதன் மருத்துவப் பயன்கள் என அவரது விழிப்புணர்வு பணி மேடைகளிலும் எழுத்துத் தளங்களிலும் பிரதிபலித்தன! பூவுலகின் நண்பர்கள் போன்ற பல்வேறு அமைப்புகள், விவசாய அமைப்புகள் நடத்திய இயற்கை திருவிழாக்களில் சிறுதானியங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெரும்பாலான அவரது உரைகளில் சிறுதானியங்கள் தவறாமல் இடம்பிடித்தன! பூவுலகின் நண்பர்கள் நடத்திய இயற்கை விழாக்கள் சிறப்பானவை! பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலும் நடத்தப்பட்ட இயற்கை உணவுத் திருவிழாக்கள் முக்கியமானவை!

இயற்கை உணவுகளை முன்னெடுத்த தமிழ் ஆர்வலர்கள்

மரு.கு.சிவராமன் அவர்களின் எண்ணங்கள் தமிழக அரசின் திட்டக்குழுவில் அவரால் பரிந்துரைக்கப்பட்டன! பல செயல்திட்டங்களில் இதுவும் ஒன்று. சொல்லப்போனால் 15 ஆண்டு கால உழைப்பின் பலன் இது!... ‘நியாய விலைக் கடைகளில் சாமை, ராகி, கம்பு…’ என கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது! இயற்கையோடு சேர்ந்து பயணிக்க ஆர்வம் மேலோங்குகிறது! பல இயற்கை ஆர்வலர்களோடு மிகு முக்கிய பங்காற்றிய மரு.கு.சிவராமன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

இயற்கை வேளான் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் கருத்துகளை பின்பற்றி இப்போது இயற்கை விவசாயம், மரபு சார்ந்து திரும்பியவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு! இயற்கை சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களால் நிகழும் மாற்றம் மெதுவாக நிகழ்ந்தாலும், ஆழமாக உறுதியாக வேரூன்றும் என்பது தெளிவு!

இயற்கை சார்ந்து தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் திரு.சுந்தராஜன் அவர்கள்… எழுத்தின் மூலம் மாற்றத்தை தூவிக் கொண்டிருக்கும் நீர் எழுத்து ஆசிரியர் திரு.நக்கீரன் அவர்கள்… திரு.கோவை சதாசிவம் அவர்கள்… சுளுந்தீ ஆசிரியர் திரு.முத்துநாகு அவர்கள்…

ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கைஎழுத்துத் தளத்தில் இயற்கை சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து வரும் திரு.ஆதிவள்ளியப்பன் அவர்கள்… திரு.வெ.நீலகண்டன் அவர்கள்… திருமதி.வைதேகி அவர்கள்… திரு.மரிய பெல்சின் அவர்கள் என பட்டியலை பக்கம்பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்! ஒவ்வொரு கிராமங்களிலும் சிறப்பாக செயல்படும் இயற்கை விவசாய அமைப்புகள், விவசாயிகளுக்கு வாழ்த்துகள்!...

 

இப்போது இயற்கை சார்ந்து களம் இறங்கியிருக்கும் இளைஞர்கள் மற்றும் அவர்களின் பதிவுகள் நிச்சயம் நம்பிக்கையை அளிக்கின்றன! சிறுதானியங்கள் மீது தீராத பற்று கொண்டு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருமதி.மேனகா, மண்வாசனை அமைப்பு அவர்களின் பங்கு சிறப்பானது.

Must Read:உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 இயற்கை உணவுகள்

இயற்கை ஆர்வலர் திரு.கு.செந்தமிழ் செல்வன் அவர்களின் அறிவுத்தோட்ட செயல்பாடு மெச்சத்தக்கது! பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பல்வேறு விவசாயிகளின் பங்கு அளப்பரியது! மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள வேண்டிய நேரமிது!...கொண்டாடுவோம், தொடர்ந்து செயல்படுவோம்! சித்த மருத்துவம் சார்ந்த ஒரு விஷயம் நன்முறையில் பேசுபொருளாகும் போது உண்டாகும் திருப்திக்கு ஈடு இணையில்லை! விடுபட்ட இயற்கை சார்ந்த அறிஞர்களின் பங்கு தொடர் கட்டுரைகளாக எழுதலாம் என்றிருக்கிறேன்! தொடர்வோம்!

-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

#Millets #SiruThaniyangal #MilletsSaleAtRationShops   #TNRationShopsSaleMillets


Comments


View More

Leave a Comments