செல்ஃபி வித் ராயர் மெஸ்… வாடிக்கையாளரின் அனுபவ பதிவு


"ராயர் மெஸ்ல சாப்பிடப்போறீங்களா?.அந்தக்கால டேஸ்டை நினைச்சு போகாதீங்க சார்..அதலாம் அந்தக் காலம். இப்ப அந்த டேஸ்ட் இல்ல."

" அய்யோ..செம கூட்டமா இருக்குமே. நாங்க ரெண்டு தரம் போயும் சீட் கிடைக்காம அப்றம் வேற ஓட்டலுக்கு வந்து சாப்ட்டோமே."

" அச்சச்சோ..அங்க உள்ள உட்காரவே முடியாதுங்க. காத்து வசதியே இல்ல. ச்சும்மா பேருக்கு நானும் சுத்தறேனு ஒரு ஃபேன் ஓடும். சாப்ட்டு வெளில வர்றத்துக்குள்ள வியர்த்து தொப்பலா நனைஞ்சுதான் வெளில வரனும்.".

" டேஸ்ட் பரவால்ல சார். ஆனா , ரொம்ப நேரம் காத்திருந்துதான் சாப்டனும்.".

" செம டேஸ்ட்தான் சார். ஆனா , நாங்க பார்சல் வாங்கிட்டு வரச்சொல்லிதான் சாப்டுவோம்."

-- மயிலாப்பூர் ராயர் மெஸ்க்கு போறோம்னு சொன்னதுக்குத்தான் மேற்படி கமெண்ட்ஸ் மெசஞ்சர்லேயும் , ஃபோன் வாயிலாகவும் நண்பர்களிடம் இருந்து வந்தன. 

Must Read:உச்சிப்பிள்ளையார் கோயில் 150 கிலோ பிரமாண்ட கொழுக்கட்டையின் வரலாறு…

' சரி..எவ்ளவோ பார்த்தாச்சு. இதையும்தான் பார்த்திடுவோமேன்ட்டு வேளச்சேரி ட்ரெய்ன்ல எதேச்சையா மகாதேவன் சீனிவாசன் சாரோட கிளம்ப்யாச்சு. 

கோட்டூர் புரம் ஸ்டேஷன ட்ரெய்ன் கடக்கறச்ச எதேச்சையா நம்ம தயாளன் வெங்கடாசலம் சார் மொபைல்ல கூப்ட , அவரையும் மயிலாப்பூர் ஸ்டேஷன் வாசலுக்கு வரச் சொன்னோம்.

ஆழ்வார்பேட்டைலேர்ந்து  அவர் வரத்துக்கும்  நாங்க ஸ்டேஷன்லேர்ந்து வெளில வர்றத்துக்கும் சரியாக இருந்தது.

டக்குனு அங்க வந்த ஒரு ஆட்டோவ பிடிச்சு , ஒரு கிலோமீட்டர் டிராவல்ல ராயர் மெஸ் இருக்கற தெருவுக்கு வந்தாச்சு.

மயிலை ராயர் மெஸ்

மெஸ்ஸில் மொத்தமே நாலு டேபிள்தான். டேபிள்க்கு நாலு சேர்ங்க. நாங்க உள்ள போனப்ப ரெண்டு டேபிள்ல சாப்டுட்ருந்தாங்க. ஒரு டேபிள் மேல நாற்காலிய கவிழ்த்துப் போட்ருந்தாங்க. அநேகமா அது வெளில நிக்கற அந்த எட்டு பேர்க்கான ஃபேமிலிக்காக ஒதுக்கினது நினைக்கறேன்.

இன்னொரு டேபிள க்ளீன் பண்ணிட்ருந்தாங்க. க்ளீனிங் முடிஞ்சதும் நாங்க போய் உட்கார்ந்தோம். நல்ல அட்மாஸ்பியர்தான். சீலிங்ஃபேனும் வேகமாவே சுத்தி காத்தும் நல்லாவே வந்துச்சு.

டிஃபன் இலையப் போட்டு  டம்ப்ளர வெச்சுட்டு தண்ணிய ரொப்பிட்டு போனார் ஒருத்தர். இலைல தண்ணிய தெளிச்சுக்கிட்டு ரெடியானோம்.

பக்கெட்ல பொங்கலோட ஒருத்தர் வந்து ' பொங்கல் போடலாமா..?' னு கேட்க போடச் சொன்னோம். கரண்டிலேர்ந்து நன்னா தளர்வா வழுக்கி விழுந்தது பொங்கல் , ரெண்டு ஒடச்ச முந்திரிங்களோட.மிளகு வாசத்தோட பொங்கல் இருந்தது. 

Must Read: ரூ400 காபியை ரூ.190க்கு வாங்கிய வாடிக்கையாளரின் உத்தி

லைட் பச்சக்கலர்ல தண்ணியா ஒரு சட்னிய வெச்சுட்டு பக்கத்லயே தேங்கா சட்னியையும் வெச்சாங்க. பொங்கல சாப்ட்டுன்டிருக்கும்போதே அப்ப வாணலிலேர்ந்து எடுத்த உளுந்து வடைங்க வர ஆரம்பிச்சுது. நல்ல மொறு மொறு வடை.

பச்சக்கலர்ல தண்ணியா ஒரு சட்னி வெச்சாங்கனு சொன்னேன் இல்லியா.. ஒரு விள்ளல் பொங்கல எடுத்து அந்த சட்னில தோய்ச்சு வாய்க்கு தள்னேன் - சுர்ர்ர்ரனு காரம் நாக்ல பட்டு உச்சி மண்டைக்கு ஏற.டம்ப்ளர் தண்ணிய குடிச்சு காலி பண்ணினேன். யப்பா..செம ஆந்திரா காரம். அப்றம்தான் தெர்ஞ்சுது , அது வெறும் பச்ச மொளகா சட்னியாம்.

பொங்கலும் சாம்பாரும் நல்லா சூடாவே இருக்க , அத சாப்ட்டதுக்ப்றம் வந்த இட்லிங்களும் செம சூடு. திரும்ப சட்னியும் , சாம்பாரும் பரிமாறப்பட தோய்ச்சு பிரட்டி லபக்கினோம். 

' கை அலம்பிட்டு  காப்பி வேணும்னா ஆர்டர் குடுத்துட்டு வெளில வெய்ட் பண்ணுங்க சார் , ப்ளீஸ் ' ன்னார் மெஸ்காரர். ஆர்டர் பண்ணிட்டு வெளில வந்து நின்னோம். உள்ள போறத்துக்காக பத்துப் பன்னிரெண்டு பேர் நின்னுட்ருந்தாங்க.

நாங்க ஆர்டர் பண்ணின காப்பி எவர்சில்வர் டபரா டம்ப்ளர்ல வந்துது , கொதிக்க கொதிக்க. நிதானமா ஆத்தி குடிச்சோம். மிதமான சர்க்கரையோட ஃபில்டர் காப்பி அட்டகாசம்.  

தயாளன் சார் பில்லுக்கான பணத்த gpay செய்தார். கிளம்பறத்துக்கு முன்னாடி FB சாங்கியத்துக்காக தயாளன் சார் எங்களோட  செல்ஃபீ எடுக்கறத பார்த்த அங்க இருந்த பில் போட்டவர்,' நீங்க சேர்ந்து நில்லுங்க சார். எங்க ஆள் போட்டோ எடுப்பார் ' னு சொல்லி அழகா போட்டோ எடுத்துத்தர ஏற்பாடு பண்ணினார். 

ஆக , 'ராயர் மெஸ்ல கை நனைக்கனும்' ங்கற என்னோட நீண்ட நாள் ஆசை இன்னிக்கு நிறைவேறின சந்தோஷத்தோட அந்த ஸ்தலத்த விட்டு நட்பூஸ்ங்களோட கிளம்பினேன்.

- மடிப்பாக்கம் வெங்கட்.

#RayarMess #MylaporeRayarMess #MylaporeMess

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments