நோய் தொற்றே பரவாயில்லை… கொரோனா காலத்து ஃபுட் டெலிவரி அனுபவங்கள்


கொரோனா தொற்று பொது ஊரடங்கு காலகட்டத்தின் போது சுகாதாரப்பணியாளர்கள், காவல்துறை, ஊடகத்தினர் போன்றவர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். 

இவர்களைப் போலவே,ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்ற உணவு விநியோக பணியில் ஈடுபடுவோர் மக்களுக்கு உணவை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். 

இந்த கொரோனா பெருந்தொற்றில் அவர்களின் பணி எப்படி இருக்கிறது என்று அவர்களில் சிலரை சந்தித்துக் கேட்டோம். நிஜாம் என்பவர், “ஆறு மாசமா நான் ஒர்க் பண்றேன். சென்னையில பல அபார்ட்மெண்ட்ல வீடெல்லாம் பூட்டிக்கிடக்கு. குடும்பத்தோட இருக்கிறவங்க அவங்களே சமைச்சு சாப்பிடறாங்க. கொரோனாவுல ஸ்விக்கி, ஜோமோட்டோவுல ஆர்டர் பண்ணி சாப்பிடற பழக்கம் குறைஞ்சிருக்கு.

தனியா வசிக்கிறவங்கதான் பெரும்பாலும் ஆர்டர் பண்றாங்க.முன்னாடி மாசம் ரூ.20 ஆயிரம் சம்பாதிச்சேன். இப்போ ரூ.15 ஆயிரம்தான் கிடைக்கிறது கூட கஷ்டமா இருக்கு. பெட்ரோல் விலையும் நாளுக்கு நாள் ஏறிக்கிட்டு வருது. எப்போ கொரோனா ஊரடங்கு முடியும்னுதான் இருக்கு. அப்பத்தான் எங்களுக்கு கூடுதலா பணம் கிடைக்கும் என்றார். 

ரேஷ்மா என்ற இளம் பெண் ஸ்விக்கியில் வேலை பார்க்கிறார். “எனக்கு இந்த வேலை செய்வது பிடித்திருக்கிறது. உனக்கு எந்த வேலை பிடிக்கிறதோ அந்த வேலைக்குப் போகலாம் என்று வீட்டில் சொல்லி விட்டனர். எனக்கு டூ வீலர் ஓட்டத்தெரியும் என்பதால், எனக்கு இந்த வேலை பிடித்தமானதாக இருக்கிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் எங்களிடம் கனிவுடன் நடந்து கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். 

இதையும் படியுங்கள்; சாப்பிடுகின்றவர்களின் திருப்தி முக்கியம்…. 50 ரூபாய்க்கு அளவற்ற உணவு வழங்கும் செந்தில்குமார்..

ஒருநாள் லிப்ட் இல்லாத அபார்ட்மெண்டில் ஐந்து மாடிகள் ஏறி சென்று வாடிக்கையாளருக்கு பார்சல் கொடுத்தேன். இப்படி பட்ட இடங்களி்ல் எங்கள் சிரமங்களை புரிந்து கொண்டு வாடிக்கையாளர்கள் செயல்பட வேண்டும்,” என்றார். 

பெயர் சொல்ல விரும்பாத சென்னையில் பணியாற்றும் தென்மாவட்டம் ஒன்றை சேர்ந்த ஸ்விக்கி பணியாளரின் அனுபவம் கொடூரமானது. “ஊரடங்கு காரணமா, பார்சல் டெலிவரிக்கு குறிப்பிட்ட நேரம்தான் கொடுத்திருக்காங்க. 

மதியம் மூன்று மணிக்கு ஆர்டர் எடுப்பது முடிஞ்சுடும். ஆனா, 2.58க்கு ஆர்டர் வந்தாலும் அதை டெலிவரி பண்ணியாகனும்.  ஆர்டரை எடுத்துட்டு ரெஸ்டாரெண்ட்ல இருந்து வெளியே வர்றதுக்கே மூணேகால் ஆயிடும். 

மூன்று மணிக்கு மேலே டெலிவரி அனுமதி இல்லைன்னு போலீஸ்காரங்க வழியில மறிப்பாங்க. அவங்க கிட்ட சொல்லி புரிய வைக்க முடியாது. நான் ஆர்டர் எடுத்த டைம்,ரெஸ்டாரெண்ட்ல எனக்கு கொடுத்த டைம் எல்லாத்தையும் எடுத்து காண்பிச்ச பிறகுதான் சில இடங்கள்ல அனுமதிப்பாங்க. 

கொஞ்சநாளைக்கு முன்னாடி மடிப்பாகத்துல டெலிவரி கொடுக்க ராத்திரி 9 மணிக்கு மேல ஆயிடுச்சு. ஏன் இந்த நேரத்தில டெலிவரி கொடுக்கிறன்னு போலீஸ்காரங்க பிடிச்சுகிட்டாங்க. 

கஸ்டமர் ஆர்டர் கொடுத்த டைம், ரெஸ்டாரெண்ட்ல இருந்து வெளியே வந்த டைம் எல்லாத்தையும் எடுத்துக் காட்டினேன். அப்புறம்தான் அவங்க நம்புனாங்க. அப்புறம் என்னோட லைசென்ஸ், ஆர்சி புக் எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்துத் தரச்சொன்னாங்க. அந்த ராத்திரி நேரத்தில எந்த ஜெராக்ஸ் கடை திறந்திருக்குமனு சொல்லுங்க. ஸ்கேன் பண்ணி வாட்ஸ் ஆப்ல அனுப்பிட்டு வந்தேன்.இப்படி தினந்தோறும் புதுபுது தொல்லைங்க இருந்துகிட்டே இருக்கும்,” என்றார் வேதனையுடன். 

இன்னொருவரும் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். “நாங்க டெலிவரி கொடுக்கிற வீட்டில கொரோனா தொற்றுபாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவங்க இருப்பாங்க. அதை எங்கள்ட முன்னாடியே சொல்லிட்டா, நாங்க தூரத்தில நின்னு கொடுத்திட்டு போய்டுவோம். ஆனா, கஸ்டமர் யாருமே முன்கூட்டியே சொல்றதில்ல. 

சில கஸ்டமர்ங்க மட்டும் வீட்டுக் கதவுக்கு பக்கத்துல ஓரமா வச்சட்டு போய்டுங்கன்னு சொல்வாங்க. இந்த மாதிரி எங்க பாதுகாப்பை மனசுல வச்சிருக்கிற கஸ்டமர்ங்க ரொம்ப கம்மி,” என்றார். 

பெரும்பாலான ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி ஆட்கள் எல்லோருமே ஒரு ஆண்டுக்குள் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே இருந்த பார்த்த வேலைகளில் இருந்து கொரோனாவை காரணம் காட்டி  நிறுவனத்தால் வெளியே அனுப்பப்பட்டவர்கள். 

இந்த கொரோனா காலத்தில் அவர்களுக்கு வாழ்வாதரமாக இருப்பது இந்த டெலிவரி வேலைகள்தான். ஆனால் அதிலும் அவர்களுக்கு இத்தனை சவால்கள். எனினும் சவால்களை சந்தித்து உழைக்கிறார்கள் அவர்கள் குடும்பத்தினரின் பசியை தீர்க்க. 

-பா.கனீஸ்வரி

 #FoodDelivery   #FoodDeliveryApp  #Swiggy #Zomato    

 


Comments


View More

Leave a Comments