கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம் இஞ்சி மிட்டாய்…
பசுமை சாகுல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்காரர். பசுமை, இயற்கை சார்ந்து இயங்குபவர். பசுமை அங்காடி என்ற பல்பொருள் அங்காடியை நடத்தி வருகிறார். இந்த கடையில் இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. இது தவிர பசுமை சார்ந்து, இயற்கை சார்ந்தும், இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் குறித்தும் தன் முகநூலில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வருகிறார். அண்மையில் அவரது புதிய முயற்சியை அவரது முகநூலில் பார்த்தோம். அந்த தகவல் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
Must Read:வாய் நாற்றம் தீர கிராம்பு உடல் எரிச்சல் தீர கீழா நெல்லி
இஞ்சி மிட்டாய்கள் பொதுவாக வெள்ளை சர்க்கரையில்தான் செய்து சந்தைபடுத்த படுகிறது. அதற்கு மாற்றாய் கருப்பட்டியில் இஞ்சி மிட்டாயை செய்தால் என்ன என்கிற எண்ணம் நீண்ட நாள் இருந்தது. கருப்பட்டி இஞ்சிமிட்டாய் என சிலர் தயாரிக்கிறார்கள். அதிலும் பாதியளவு அஸ்கா சர்க்கரை கலந்து விடுகிறார்கள். சாப்பிட்டதுமே கண்டுபிடித்து விட முடிகிறது. முழுக்க கருப்பட்டியில் மட்டுமே நாம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று முயற்சியில் இறங்கினேன்.
எங்கள் குடும்ப தொழில் மிட்டாய் தயாரிப்பது. மிட்டாய்காரவீடு என்றுதான் எங்களை அடையாள படுத்துவார்கள். அத்தானின் மிட்டாய் கம்பெனியில் ஐம்பது பேருக்குமேல் வேலை செய்கிறார்கள். தலைமை சரக்கு மாஸ்டரிடம் என் எண்ணத்தை சொல்லவும் சிறப்பாய் செய்திடலாம் எனறார். களத்தில் இறங்கினோம்.
Must Read:தேன் நெல்லி சாப்பிடலாமா மருத்துவர் விக்ரம் குமார் சொல்லும் விளக்கம்…
ஏற்கனவே பனைகளை குத்தகைக்கு எடுத்து அங்காடிக்காக காய்ச்சிய கருப்பட்டியில் பத்து கிலோவிற்கு மேல் மழையால் சற்று கசிந்திருந்தது. அதை விற்கவும் முடியாது. அந்த கருப்பட்டியை இஞ்சி மிட்டாய்க்கு பயன் படுத்தினேன். கூடவே இஞ்சி, சுக்கு,வால்மிளகு, திப்பிலி,அதிமதுரம், சித்தரத்தை போன்றவைகளையும் தேவையான அளவு சேர்த்து மரப்பொடி பயன்படுத்தும் கூண்டு அடுப்பில் வைத்து காய்த்து பதம் வந்ததும் தட்டில் ஊற்றி ஆற வைத்து 5,10 ரூபாய் வில்லைகளாக வெட்டி தயார் செய்தோம். எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக வந்தது கருப்பட்டி இஞ்சி முறப்பா. அங்காடியில் இந்தவார புதுவரவு இது.
-படம், தகவல் நன்றி; பசுமை சாகுல்
#GingerBarfi #GingerMurabba #GingerMurabbaRecipe #KarupattiGingerMurabba
Comments