தோல் பாதுகாப்புக்கு ஒரு வித்தியாசமான திராட்சை பழரசம்


இனிப்பான, சில நேரம் புளிப்பு சுவை கொண்ட திராட்சை எப்போதுமே நமக்கு விருப்பமான பழங்களில் ஒன்றாகத்தான் இருக்கிறது. திராட்சை பழம் அது பச்சையாக இருந்தாலும் அல்லது கருப்பு திராட்சை என்றாலும் தினமும் அதனை உண்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. ஆண்டு முழுவதும் இப்போது திராட்சை சந்தையில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. திராட்சையை கொட்டையோடு சாப்பிடுவதால் புற்றுநோய்க்கு அருமருந்தாக இருக்கும் என்பதும் பலருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால், இதில் தெரியாத விஷயம் ஒன்றும் இருக்கிறது. ஆம், திராட்சை நமது தோலுக்கும் நல்லது செய்யும். குறிப்பாக முகப்பரு, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

திராட்சை நம் தோலுக்கு நன்மை தரும் என்பது பல்வேறு ஆராய்ச்சிகள் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்திகள் பலவற்றை திராட்சை கொண்டிருக்கிறது. நம் உடலில் நச்சு தன்மையை நீக்குகிறது, ரத்த த்தை சுத்திகரிக்கிறது என்பதும் ஆய்வின் வாயிலாக தெரிய வந்திருக்கிறது. லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் திராட்சையில் ரெஸ்வெராட்ரோல் என்ற பொருள் அதிகம் இருப்பது தெரியவந்திருக்கிறது. இது முகப்பரு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது. அமெரிக்க அகாடமியின் தோல் நோய் இயல் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி நூலில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் திராட்சை உண்பதால் அல்ட்ரா வயலட் கதிர்களால் தோலில் ஏற்படும் பாதிப்புகள் சரியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

திராட்சையின் இந்த பலன்களைக் கருத்தில் கொண்டு ஒரு புதுவகை திராட்சை பழரசம் செய்வது பற்றி பார்க்கலாம். இதனை திராட்சை சதை பழ ரசம் என்று கூட அழைக்கலாம்.

முதலில் கொஞ்சம் தண்ணீரில் சர்க்கரை போட்டு அதனை நன்றாக காய்ச்சவும். பின்னர் திராட்சையை நன்றாக கழுவிவிட்டு, அதனை சர்க்கரை சேர்த்த தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும். திராட்சையின் தோலில் வெடிப்பு விழும் வரை சூடு பண்ண வேண்டும். பின்னர் அந்த திராட்சைகளை எடுத்து தோல்களை எல்லாம் உரித்து எடுத்து விட்டு திராட்சை சதையை மட்டும் ஒரு மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

பின்னர் திராட்சையில் இருந்து எடுக்கப்பட்ட தோலை திராட்சையை வேக வைத்த தண்ணீரில் போட்டு நடுத்தரமான சூட்டில் 15 நிமிடங்கள் காய்ச்சவும். பின்னர் அதனையும் எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து திராட்சை சதை மற்றும் திராட்சை தோல் வேகவைக்கப்பட்ட தண்ணீர் இரண்டையும் கலந்து பழரசத்தை அருந்தலாம்.  

-பா.கனீஸ்வரி

#GrapeJuice      #GrapeForGoodSkin   #GrapesForSkinCare


Comments


View More

Leave a Comments