உடற்கட்டமைப்புக்கான குறுக்கு வழி ஸ்டீராய்டுகள் ஆபத்தானவை


ஜிம் பயிற்சியாளராக இருந்த 25 வயதே ஆன சகோதரர் ஒருவர் இறந்திருப்பது வருத்தம் தரும் செய்தியாகும். அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  

பாடி பில்டிங் போட்டிக்காக அதீத பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் சேரும் போது சிறுநீரகங்கள் இரண்டு முழுவதும் செயலிழந்து விட்டது தெரிந்திருக்கிறது. மரணமும் சம்பவித்திருக்கிறது. மரணத்திற்கான காரணமாக அவர் அளவுக்கு அதிகமாக பாதகம் விளைவிக்கும் அளவு ஸ்டீராய்டு மருந்துகளை உட் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 

Must Read: கோவையில் மற்றுமொரு பசி போக்கும் உணவுப்புரட்சி

இது குறித்த விழிப்புணர்வு இளம் சகோதரர்களுக்கு அவசியம் என்பதால் இந்தப் பதிவு முக்கியமானதாகிறது. பாடி பில்டிங் எனும் உடல் அமைப்பை கூட்டும் முயற்சியில் ஆண் அழகன் போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கிலும் , பரீட்ச்சார்த்தமாகவும் சிலர் எந்த நோக்கமும் இல்லாமல் உடலை கட்டுமஸ்தாக வைத்தால் போதும் என்று ஆண்மைக்கான ஹார்மோனான  ஆண்ட்ரோஜென்களை பல விதங்களில் ஊசியாக செலுத்திக் கொண்டோ மாத்திரையாகவோ உட்கொண்டோ வருவது ஆய்வுகளில் தெரிகிறது. 

இதில் முக்கியமான ஆண்ட்ரோஜெனாக இளையோர் பாவிப்பது நாண்ட்ரோலோன் டெகோனேட் எனும் ஆண்ட்ரோஜெனாகும் இதுவன்றி டெஸ்டோஸ்டிரோன்,மெதன்டியனோன்,ஸ்டேனோசோலால் போல்டினோன் , ஆக்சான்ட்ரோலோன்,ட்ரென்போலோன்,ஆக்சி மெதோலோன் போன்ற ஆண்டோரஜென்களும் தவறாக உபயோகிக்கப்படுகின்றன.

ஸ்டீராய்டு மருந்துகளால் பக்கவிளைவுகள்   

 மேற்கூறிய மருந்துகள் அனைத்தும்  ஆண்மைக்கான ஹார்மோன் குறைபாடு இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள். இவற்றை தேவைக்கு மருத்துவர் பரிந்துரையில் இந்த நோய் இருப்பவர்கள் போடுவது சரியானது . அதுவே அளவுக்கு அதிகமாக உடலின் தசைகளை கூட்டுவதற்கு எடையை கூட்டுவதற்கு வலுவாக்கும் முயற்சியில் அளவுக்கு அதிகமாக போடுவது ஆபத்து. மேற்சொன்ன மருந்துகள் அனைத்தும் மருத்துவர் பரிந்துரையின்றி போட்டுக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். 

பாடி பில்டிங் செய்யும் சகோதரர்களுள் சிலர் மேற்சொன்ன ஆண்ட்ரோஜென் மருந்துகளுடன் கூடவே அளவுக்கு அதிகமாக தேவைக்கும் மீறி புரதப் பொடிகள், கிரியாடினின் பொடிகள், கொழுப்பை எரிக்கும் மாத்திரைகள் , நீரிழப்பை ஏற்படுத்தும் மாத்திரைகள், வளர்ச்சிக்கான ஹார்மோன், இன்சுலின் ஹார்மோன், க்ளென் புட்ரால், ஃபாலிகுலார் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் போன்றவற்றையும் சேர்த்து போட்டுக் கொள்கிறார்கள்

தொடர்ந்து இவற்றை எடுப்பதால் இத்தகையோருக்கு  உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் தோன்றுகின்றன இதில் பாடி பில்டர்ஸ் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்டீராய்டு மருந்துகளை சேர்த்து எடுப்பதை ஸ்டாக்கிங் என்கிறோம்.  அதிலும் ஸ்டீராய்டு டோஸ் அளவுகளை மிக குறைந்த அளவில் இருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொஞ்ச நாள் ஸ்டீராய்டு நிறுத்தி விட்டு மீண்டும் ஆரம்பிக்கின்றனர். 

ஸ்டீராய்டு மருந்துகளால் ஆபத்து   

இது போன்று சங்கிலித் தொடராக மாறி மாறி குறைத்து குறைத்து கூட்டுவதை "பிரமிடிங்" என்கிறோம். இத்தகைய ஸ்டீராய்டுகளால் தேவையற்ற இடங்களில் அதிகம் முடி முளைப்பது  பருக்கள் தோன்றுவது, ரத்த கொதிப்பு, இதய தசை வீக்கம், இதய ரத்த நாள அடைப்பு போன்றவை நேரிட வாய்ப்புகள் உண்டு. இதுதவிர ,உடலில் ஆபத்தான அளவில் நீர் சேருதல்,கல்லீரல் பாதிப்பு,சிறுநீரக பாதிப்பு ஆகியவையும் நேரிடும். 

இந்த ஊசிகளுக்கு அடிமையாகுதல், ஊசி போட்டால் தான் நல்ல மனநிலையை அடைவது, இல்லாவிடில் மனத்தாழ்வு நிலைக்கு செல்வது, ப்ராஸ்டேட் சுரப்பி வீங்குவது பாலுணர்வில் கோளாறு, ஆணுறுப்பு எழுச்சியின் குறைபாடு , போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு மரணம் சம்பவிக்கும் வாய்ப்பும் உண்டு. 

Must Read: நோய்களுடன் கட்டுப்பாடான ரம்லான் நோன்பு இருப்பது எப்படி தெரியுமா?

ஜிம்களுக்கு சென்று சிறப்பாக உடற்பயிற்சி செய்வதில் உடலுக்கு நல்ல பலன் உண்டு. ஜிம்களுக்கு சென்று பளு தூக்கும் பயிற்சி செய்து தசைகளை வலுப்படுத்துவது உடலுக்கு நன்மை தரும் செயலாகும். இதனால் நீரிழிவு ரத்தக் கொதிப்பு இதய நோய் போன்ற இணை நோய்கள் நெருங்காமல் தடுக்க முடியும் .ஆயினும் அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சே

இதை உணர்ந்து கொள்ள வேண்டும் மருத்துவர் பரிந்துரையின்றி ஆண்ட்ரோஜென் ஸ்டீராய்டுகளை பாவிப்பது தவறு மட்டுமின்றி ஆபத்தும் கூட.  உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை அறிந்து கொண்டு புரதப் பொடி / கிரியாடினின் பொடி போன்றவற்றை உட்கொள்ளவும். மீண்டும் கூறுகிறேன் 

ஜிம் சென்று உடலை மெருகேற்றுவது உடலுக்கு நன்மை பயக்கும் செயலாகும் .  இந்த செய்தியால் ஜிம்கள் மீது ஒவ்வாமை கொள்ள வேண்டியதில்லை. சரியான உடற்பயிற்சி , சரியான புரதச்சத்து நிரம்பிய உணவுகள் சரியான அளவுகளில் தேவையான சப்ளிமெண்ட்கள் உட்கொண்டே உடற் கட்டமைப்பை  நன்றாக பராமரிக்க முடியும்.

இதை சரியாக பரிந்துரைக்கும் உடற்பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள் . அவர்கள் ஒருபோதும் ஆண்ட்ரோஜென் மருந்துகளை ஊசிகளை பரிந்துரைக்கமாட்டார்கள் உடற்கட்டமைப்பை அடைவதற்கு குறுக்கு வழியாக விளங்கும் ஆண்ட்ரோஜென் ஸ்டீராய்டுகள் ஆபத்தானவை என்பதை மறக்க வேண்டாம். 

-Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர்,சிவகங்கை

#tngymmasterdead #steroidsideeffects #avoidsteroids

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குநம்மாழ்வார் பிறந்தநாள்,  தேன்சாப்பிடும் முறை

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

 

Comments


View More

Leave a Comments