அண்டை மாநிலங்களில் கள் விற்க அனுமதி..தமிழ்நாட்டில் ஏன் இல்லை? பின்னணியை விளக்கும் பனையேறி பாண்டியன்!
சென்னை எழும்பூரில் உள்ள சமூகவியல் பள்ளியில் அண்மையில் பனை பொருட்கள் விற்பனை குறித்த நிகழ்வுக்காக வந்திருந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பனையேறி திரு.பாண்டியன் அவர்களை சந்தித்து உரையாடினேன்.
பனையேறும் தொழிலில் உங்களுக்கு ஈடுபாடு வந்தது எப்படி?
என் குடும்பத்தில் என் தாத்தா, தந்தை என பரம்பரையாக பனையேறும் தொழிலாளர்கள்தான். பனையேறும் தொழிலாளர்களாக இருந்தும் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்பதால் என் தந்தை என்னை கல்வி கற்று பட்டப்படிப்பு முடித்த பின்னர் வேலைக்கு செல்லும்படி கூறினார். ஆனால், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நானும் பனையேறும் தொழிலாளர் ஆகவே மாற நேர்ந்தது.
பனை பொருட்களை நீங்களே தயாரித்து விற்பனை செய்கின்றீர்களா?
ஆமாம். பனங்கருப்பட்டி, பனங்கிழங்கு, பனங்கற்கண்டு என்று பனை பொருட்களை நாங்களே தயாரித்து விற்பனை செய்கின்றோம். விழுப்புரம் மாவட்டத்தை சுற்றி உள்ள சித்த வைத்தியம் செய்பவர்கள் எங்களிடம் மருத்துவ தேவைக்காக பனை பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். எங்கள் ஊரிலும், அருகாமையில் உள்ளோரும் தேடி வந்து எங்களிடம் பனை பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
கள் இறக்க அனுமதி கேட்டு தொடர் உண்ணாவிரதம் இருந்தீர்களே தமிழ்நாடு அரசு சார்பில் உங்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தனர்.
வாக்குறுதி ஏதும் அளிக்கவில்லை. நானும், எங்கள் மாவட்டத்தில் உள்ள சில பனை தொழிலாளர்களும் எங்கள் நிலத்தில் உள்ள பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து வருகின்றோம். தமிழ்நாட்டில் சட்டப்படி கள் இறக்கக் கூடாது, விற்பனை செய்யக் கூடாது என்ற சட்டம் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் சட்டத்தை மீறி கள் விற்பனை செய்யப்படுகிறது.
கள் விற்பனை செய்யும் பனை தொழிலாளர்களிடம் இருந்து போலீசார் மாமூல் வாங்கிக் கொண்டு விற்பனையை அனுமதிக்கின்றனர். எனது சக தொழிலாளர்கள் சிலர் கள் விற்பனை செய்கின்றனர். போலீசாருக்கு மாமூல் கொடுக்கக்கூடாது என்ற கொள்கையை அவர்கள் கொண்டிருக்கின்றனர். இயற்கை தந்த கொடையான கள்ளை இறக்கி விற்பனை செய்வதற்கு நான் ஏன் போலீசாருக்கு மாமூல் தர வேண்டும் என்பதே என் சக பனை தொழிலாளர்களின் கருத்து. எனவே என் சக தொழிலாளர்கள் போலீசாருக்கு மாமூல் தராமல் துணிச்சலாக கள் விற்பனை செய்து வருகின்றனர். போலீசாருக்கு மாமூல் தரவில்லை என்பதால் அவர்களுக்கு ஆத்திரம். எனவே என் சக பனையேறிகளை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பனை தொழிலாளர்கள் மீது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தனர் என்று வழக்கு பதிவு செய்தனர். எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், கள் இறக்கி விற்பனை செய்தோம் என்றும் வழக்குப்பதிவு செய்யவும் வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோம்.
உங்கள் கோரிக்கை நிறைவேறியதா?
கள் விற்க சட்டப்படி அனுமதிக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதே நேரத்தில் கள்ளசாராயம் காய்ச்சி விற்பனை செய்தனர் என்று போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. சக பனையேறிகள் விடுவிக்கப்பட்டனர். இது எங்களுக்கு கிடைத்த வெற்றிதான்.
கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவில்லையே?
உண்மைதான். கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற எங்கள்கோரிக்கை என்னை போன்ற தமிழ்நாட்டில் உள்ள பல லட்சம் பனையேறிகளால் தொடந்து வலியுறுத்தப்படுகிறது. ஆங்கில ஆட்சி காலத்தில் அவர்கள் வெளிநாட்டு மது வகைகளை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கள் இறக்கவும், விற்கவும் தடை விதித்தனர். ஆங்கில ஆட்சியில் போடப்பட்ட சட்டங்கள் பலவற்றை மாற்றி விட்டோம். ஆனால், கள் இறக்கி விற்பனை செய்வதற்கான தடையை மட்டும் இப்போதைய அரசும் தொடர்ந்து அமல்படுத்துகிறது.
சட்டம் அனுமதிக்கவில்லை என்றாலும், கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று நீங்களே சொல்கிறீர்களே?
ஆமாம். தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி விற்பனை செய்யப்படுகிறது. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், எங்கெங்கு கள் இறக்கப்படுகிறது. யார், யாரெல்லாம் கள் விற்கின்றனர் என்ற விவரம் அந்தந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்குத் தெரியும். கள் இறக்கி விற்பனை செய்வோரிடம் மாதம் தோறும் போலீசார் மாமூல் வாங்குகின்றனர்.
போலீசாரை கவனித்து விட்டு சிலர் கள்ளில் கலப்படம் செய்தும் விற்கின்றனர். இதனால் தரமான கள்ளும் கிடைப்பது அரிதாகவே உள்ளது. போலீசார் என்னிடமும் மாமூல் கேட்டனர். இன்றைய தினம் வரை மாமூல் கொடுப்பதில்லை என்று முடிவோடு இருக்கின்றேன். என் நிலத்தில் உள்ள பனை மரம், அதில் இருந்து இயற்கையாக கிடைக்கும் கள் விற்பனை செய்வதற்கு நான் ஏன் மாமூல் கொடுக்க வேண்டும்? சட்டப்பூர்வமாக அனுமதித்து விற்றால் அரசுக்கு அதனால் வருவாய் கிடைக்கத்தானே போகிறது. போலீசாருக்கு மாமூலாக போகும் பல கோடி ரூபாய் பணத்தை அரசுக்கு வருவாய் ஆக திருப்பலாமே. அதை ஏன் இந்த அரசாங்கம் செய்ய மறுக்கிறது.
அரசு செய்ய மறுப்பதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
ஒரு அரசாங்கத்தின் பின்னணியில் யார் இருப்பார்களோ அவர்கள்தான் இருக்கின்றனர். அவர்கள் யார் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. மது தொழிற்சாலைகள், மது விற்கும் நிறுவனங்கள், வெளிநாட்டு மது இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இந்த நிறுவனங்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் எல்லோரும்தான் பின்னணியில் இருக்கின்றனர். கள் விற்பனை நடைபெற்றால், குறைந்த விலையில் விற்கப்படும். அதனோடு மதுபானங்கள், டாஸ்மாக் சரக்குகள் போட்டி போடமுடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே, அரசே முயற்சித்தாலும் பின்னணியில் இருப்பவர்க்கள் தடுக்கின்றனர்.
மற்ற மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறதா?
ஆமாம். கேரளா மாநிலத்தில் அரசே கள், சாராயம், மதுக்கடைகள் நடத்துகிறது. மூன்றின் விற்பனையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தேவையைப் பொறுத்து மக்கள் பயன்படுத்துகின்றனர். கள் விற்பனை செய்வதால் மது விற்பனை பாதிக்கப்படவில்லை. நமது பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியிலும் கள், சாராயம், மது மூன்றும் விற்பனை செய்யப்படுகிறது. அங்கும் கள் விற்பதால் சாராயம், மது விற்பனைகளில் எந்தவித பாதிப்பும் இல்லை. இலங்கை போன்ற வெளிநாடுகளில் கள்ளை பாட்டில் அடைத்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். கள் மூலம் உலகம் முழுவதும் வருவாய் ஈட்டும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
தமிழ்நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக கள் வடித்து விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். கள்ளுக்ககு அரசு விதிக்கும் நியாயமான வரி, அரசின் கஜானாக்களுக்கு சென்று சேரும். பனை தொழிலாளர்கள், பனையேறிகள் வாழ்வாதாரம் உயரும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரவும் வழிவகுக்கும்.
#toddybanTN #toddy #palmworkers #palmwine
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments