நியூயார்க் நகரில் நடிகை பிரியங்கா சோப்ரா தொடங்கும் இந்திய உணவகம்


குஷ்பு இட்லி என இட்லிக்கு நடிகையின் பெயர் வைத்து மகிழ்ந்தவர்கள் தமிழர்கள். நடிகர், நடிகையரில் பலர் இன்றளவும் உணவு பிரியர்களாக இருக்கின்றனர். எம்.ஜி.ஆர் காலம் தொட்டு இன்று வரை பலர் உணவு பிரியர்கள்தான்.

ஒரு படி மேலே போய் நடிகர் கருணாஸ் திண்டுக்கல் நகரில் கருணாஸ் ரத்தின விலாஸ் என்ற பெயரில் உணவகம் திறந்துள்ளார்.  நடிகர் சூரி, மதுரை விமானநிலையம் அருகே அம்மன் என்ற சைவ உணவகத்தையும், அய்யன் என்ற அசைவ உணவகத்தையும் திறந்துள்ளார். அம்மன் உணவகத்துக்கு மதுரையில் ஒரு சில கிளைகளும் உள்ளன.  நகைச்சுவை நடிகர்கள் தொடங்கிய இந்த உணவகங்கள் சுவையிலும், தரத்திலும் கொடிகட்டிப்பறக்கின்றன. உணவுப் பிரியர்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளன.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் சமீபத்தில் தனது புதிய உணவகத்தை நியூயார்க்கில் தொடங்குவதாக அறிவித்தார், இந்த உணவகத்துக்கு சோனா என்று பெயரிட்டுள்ளார். இந்த உணவகத்தில் பாரம்பர்ய மிக்க இந்திய உணவு வகைகள் கிடைக்கும் என்று கூறி உள்ளார்.  இந்த மாத இறுதியில் இந்த உணவகம் திறக்கப்பட உள்ளதாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். “நியூயார்க் நகரத்தில் சோனா என்ற புதிய உணவகத்தை உங்களுக்கு வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய உணவுகள் மீதான காதல். காலமற்ற இந்தியாவின் அவதாரமாக சோனா உருவாகி இருக்கிறது. நான் சாப்பிட்டு வளர்ந்த சுவைகள் சோனாவில் கிடைக்கும், ” என்று கூறி உள்ளார்.

அவரது பதிவின் படி, இந்த உணவகத்தின் செஃப் ஆக Hari Nayak ஹரி நாயக் என்ற பிரபல சமையல் கலைஞர் நியமிக்கப்பட்டுள்ளார். நியூயார்க் நகரில் வசிக்கிறார். நவீன இந்திய சமையல், மை இந்தியன் கிச்சன் மற்றும் தி ஸ்பைஸ் டிரெயில் உள்ளிட்ட அதிகம் விற்பனையாகும் ஏழு சமையல் புத்தகங்களை இவர் எழுதி உள்ளார்.

சோனா உணவகம் இந்த மாதம்திறக்கப்படுவதாக இன்ஸ்டாவில் பிரியங்கா சோப்ரா கூறி உள்ளார். உணவகம் திறக்க உதவிய  தனது நண்பர்களான மனீஷ் கோயல் மற்றும் டேவிட் ராபின் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.  

-பா.கனீஸ்வரி 

#PriyankaChopraJonas  #SonaIndianRestaurant  #IndianRestaurantAtNY #NYCINDIANRESTAURANT


Comments


View More

Leave a Comments