சென்னையில் சிறப்பான தரமான இட்லி சாப்பிட ஏற்ற இடங்கள் எது தெரியுமா?


இட்லி என்பது எல்லா காலத்துக்கும் ஏற்ற ஆரோக்கியமான ஆவியில் வேக வைக்கப்படும் ஆரோக்கியமான உணவு. சென்னையில் குறிப்பிட்ட சில உணவகங்களில் இட்லி மிருதுவாகவும், சூடாகவும், தொட்டுக்கொள்ள சட்னி வகைகள், பொடி, சாம்பார் என அசத்தல் சைட் டிஷ் களுடன் சாப்பிடலாம். அப்படி சில உணவகங்களை இங்கே பார்க்கலாம். 

மயிலாப்பூர் சங்கீதா உணவகம் 

மயிலாப்பூர் பேருந்து நிலையம் அருகே ராமகிருஷ்ணா மடத்தை ஒட்டி இருக்கும் சங்கீதாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுட சுட இட்லியை சாப்பிடலாம். மெத், மெத்தென்று வாயில் கரைவதே தெரியாமல், இட்லியை பிட்டு பொடியில் தொட்டுக் கொண்டு உள்ளே தள்ளினால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். இட்லிக்கு தரப்படும் சாம்பார், காரசட்னி, புதினா சட்னி அல்லது தேங்காய் சட்னி எல்லாம் பொருத்தமாக அற்புதமான சுவையோடு இருக்கும். 

மேற்கு மாம்பலம் காமேஸ்வரி உணவகம்

மேற்கு மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ளது இந்த உணவகம். காலையிலும் மாலையிலும் இட்லி சுடசுட கிடைக்கும், இட்லிக்கு தொட்டுக்கொள்ள பூசணி சாம்பார், பொட்டுக்கடலை சட்னி இரண்டும் உண்டு. பொட்டுக்கடலை சட்னி மதுரையில் உணவகங்களில் கொடுப்பது போன்ற சட்னியை நினைவுபடுத்தும். இட்லி அளவில் பெரியதாக இருக்கும். இந்த உணவகத்தில் இட்லிக்கு சாம்பாரை விடவும் சட்னி சூப்பர் சைட் டிஷ் ஆக இருக்கும். இரண்டு இட்லி சாப்பிட்டால் நான்கு இட்லி சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அளவில் பெரிய ஆனால் விலை குறைவான சூப்பரான இட்லி இந்த கடையின் சிறப்பு அம்சம். 

ராயப்பேட்டை கோழி இட்லி 

ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எதிரே உள்ள வீதியில் அமைந்திருக்கும் கோழி இட்லி மிகவும் பிரபலம். கொரோனா கால ஊரடங்குக்கு முன்னதாக மதியம் முதல் இரவு வரை இட்லி சாப்பிட இங்கே கூட்டம் அள்ளும். 

இட்லிக்கு எப்போதும் சிக்கன் குழம்பு பொருத்தமான ஒன்று. சூடான இட்லியுடன், சூடான சிக்கன் குழம்பை கலந்து கட்டி அடித்தால் அதன் சுவைக்கு ஈடு இணையே இல்லை. அதிலும் இந்த கோழி இட்லி கடையில் பெப்பர் சிக்கன் , சில்லி சிக்கன் என்று விதவிதமான சிக்கன் ரெசிபி யுடன் சேர்த்து இட்லி சாப்பிட்டால் நீங்கள் சாப்பிட நினைத்த இட்லியை விடவும் கூடுதலாக இட்லியை வயிற்றுக்குள் தள்ளுவீர்கள். அவ்வளவு சுவை கொண்டது இந்த உணவகத்தின் இட்லியும் சைட்டிஷ்ஷும். இட்லியுடன் பூண்டு குழம்பு தனியாக ஒரு காம்பினேஷன் இங்கே இருக்கிறது. அதுவும் சுவையில் அள்ளும். இட்லியுடன் காரமான பூண்டு குழம்பு, கார சட்னி காம்பினேஷன் கொண்ட டிஷ் மிகவும் அற்புதம், அசைவம் விரும்பாதவர்கள் இந்த காம்பினேஷனை இங்கே முயற்சி செய்யலாம். 

தியாகராயநகர் பாலாஜி பவன் 

தியாகராயநகர் பாண்டி பஜாரில் உள்ள இந்த உணவகத்தில் காலையில் , மாலையில் இட்லி மிகவும் சுவையாக, சூடாக கிடைக்கும். இட்லிக்கு சைட் டிஷ் ஆக சாம்பார், சில நேரங்களில் ஆந்திர ஸ்டைலில் கடப்பாவும் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் இட்லி, வடகறியும் இந்த உணவகத்தின் காப்பினேஷன்களில் சிறப்பாக இருக்கும். இட்லிக்கு தொட்டுக்கொள்ள இட்லி பொடியும் இந்த உணவகத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. இலையில் பரிமாறப்படும் இட்லி, சைட்டிஷ் எல்லாமே கூடுதல் சிறப்பை சுவையை கூட்டுவதாக இருக்கிறது. சூடாக இட்லி சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இங்கே போவது சிறப்பு. 

தி.நகர்  கிரீன் கஃபே

இது ஒரு இயற்கை உணவகம். இங்கு மாலை வேளையில் மட்டும் இட்லி கிடைக்கும். இட்லிக்கு புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி அதி அற்புதமாக இருக்கும். சாம்பாரும் சொல்ல வேண்டியதில்லை. வயிற்றுக்கு கெடுதல் விளைவிக்காத இயற்கை பொருட்களை கொண்டு வைக்கப்பட்ட சாம்பார் வீட்டில் சாப்பிடுவது போன்ற சுவையை தரும். சூடாக இட்லியை சாப்பிட்டால் இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று எண்ணத்தோன்றும் சுவையையும், திருப்தியையும் தரக்கூடியது. 

 பா.கனீஸ்வரி


#GoodTastyIdli  #Idli Food #TastyIdliInChennai #ChennaiFoods #FoodReview #FoodNewsTamil

  





 


Comments


View More

Leave a Comments