சாப்பிடுகின்றவர்களின் திருப்தி முக்கியம்…. 50 ரூபாய்க்கு அளவற்ற உணவு வழங்கும் செந்தில்குமார்..


சென்னைக்கு பிழைக்க வருவோர் தங்குவதற்கு ஒரு இடமும், சாப்பிடுவதற்கு குறைவான விலையில் உணவும் கிடைத்துவிட்டால், மூன்று ஆண்டுகளுக்குள் ஏதோ ஒரு வேலையில் நிலைத்திருக்க முடியும். 

தங்குவதற்கு இடமும், சாப்பிடுவதற்கு சரியான உணவும் இல்லாவிட்டால், அதுவே நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்கி நம்மை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல இயலாமல்  மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வேண்டியது இருக்கும். 

அந்த வகையில் சென்னையில் திருவல்லிக்கேணி பகுதி பேச்சிலர்களின் சொர்க்கமாக, குறைந்த விலை ரூம், குறைந்தவிலையில் தரமான உணவுகளுக்கு பெயர்பெற்ற ஏரியாவாக இன்றளவும் திகழ்கிறது. 

சென்னையின் பேச்சிலர்களுக்கு இன்னும் ஒரு பகுதியும் பிடித்தமான ஒன்று. ஆம் சூளைமேடு பகுதியிலும் அதிக அளவுக்கு பேச்சிலர்கள் வசிக்கின்றனர். ஆனால், திருவல்லிக்கேணியைப் போல நல்ல உணவகங்கள் கிடைப்பது இங்கு குதிரைக்கொம்பு. ஒரு சில உணவகங்கள் மட்டுமே பேச்சிலர்களின் வரபிரசாதமாக திகழ்கின்றன. 

அப்படியான வரபிரசாதம்தான் சென்னை சூளை மேட்டில் இயங்கி வரும் ஸ்ரீ தேவர் மெஸ். தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட செந்தில்குமார்தான் 12 ஆண்டுகளுக்கு  முன்பு இந்த மெஸ்ஸை ஆரம்பித்தார். அவரது வெற்றியின் ரகசியம் குறித்து ஆரோக்கிய சுவை இணையதளத்தின் சார்பில் பேசினோம். 

“எங்க கிராமத்துல என்னோட பாட்டி இட்லி கடை வச்சிருந்தாங்க. அந்த இட்லி கடைதான் ஒட்டு மொத்த கிராமத்துக்கும் ஹோட்டலா இருந்துச்சு. தரமான இட்லி, விலை குறைவு என்பதால் பலர் கிராமத்தினர் மத்தியில் என் பாட்டிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏன் பாட்டி இவ்வளவு கம்மியான விலையில கொடுக்கிறீங்கன்னு நான் கேட்டப்போ, வயிறார சாப்பிடறதுதான்யா முக்கியம். காசு முக்கியமில்லைன்னு என் பாட்டி சொன்னது என் காதில இன்னைக்கும் ஒலிச்சிக்கிட்டு இருக்கு. இன்னைக்கு என்னோட மெஸ்ஸுக்கும் இதுதான் தாரக மந்திரமா இருக்கு.

இதையும் படியுங்கள்; உடல் எடையை குறைக்கும் இந்த வழிமுறைகள் மிகவும் முக்கியம்…

பாட்டியின் குறைந்தவிலை, தரமான உணவு என்ற அந்த சேவையைத்தான் சென்னையில் நான் கொடுத்து வருகின்றேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மெஸ்ஸை ஆரம்பித்தேன். சூளை மேடு சுற்றுவட்டாரப் பகுதியில் எங்கள் மெஸ், பேமஸ் ஆக ஆரம்பித்தது. 

 

வீட்டில் எப்படி சமைத்து சாப்பிடுவோமோ அதே போன்ற சமையல்தான் இன்றளவும் என்னுடைய மெஸ்ஸில் கிடைக்கும். இன்றளவும் அந்த தரத்தில் இருந்து தடமாறவில்லை. உணவுக்கான மசாலா பொருட்களை அனைத்தையும் வீட்டிலேயே தயாரிக்கின்றோம். என் மனைவி சுதா, மசாலா பொருட்களை வீட்டிலேயே தயாரிக்கிறார்.உடலுக்கு கேடானா எந்த பொருளையும் சுவை என்றபெயரில் உணவில் சேர்ப்பதில்லை. 

பெரும்பாலும் ஹோட்டலில் சாப்பிடுவோர், சாப்பிட்டு முடித்து விட்டு, காசைக் கொடுத்து போய்விடுவார்கள். அந்த அளவுக்குத்தான் வாடிக்கையாளருக்கும், ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் இடையேயான தொடர்பு இருக்கும். 

நான் இதில் இருந்து வித்தியாசமாகவே இருக்கின்றேன். சாப்பிடும் வாடிக்கையாளர்களின் திருப்தி முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். 

சாப்பிட்டு முடித்து விட்டு பணம் கொடுப்பவர்கள் உணவின் தரம் குறித்து கூறினால், உடனே அதை நிவர்த்தி செய்கின்றேன். உதாரணத்துக்கு இட்லி கல் போல இருக்கு என்று சொன்னால், சாப்பிடும்போதே சொல்லி இருந்தால்  மாற்றிக் கொடுத்திருப்பேனே என்று சொல்லுவேன். சாப்பாடு நன்றாக இல்லை என்று சொல்பவர்களிடம் பணம் வாங்க மாட்டேன். 

நாம் வேறு கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு தரமாக இல்லை என்று திருப்பிக் கொடுத்தால், வேறு நல்ல பொருட்கள் கொடுப்பார்கள் அல்லது பணத்தைத் திருப்பிக் கொடுப்பார்கள். அதே போல இந்த மெஸ்ஸில் சாப்பிடுபவர்களின் திருப்தி முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். அதுதான் என்னை இந்த 12 ஆண்டுகளாக இந்த மெஸ் தொழிலில் என்னை இருக்க வைத்திருக்கின்றது. 

இன்றைக்கு எத்தனை இட்லி விற்றது. எவ்வளவு லாபம் கிடைத்தது என்று எண்ணிக்கையை கணக்கு பார்ப்பவன் நான்இல்லை. என்னைப் பொறுத்தவரை மெஸ் என்பது நமது குடும்பம் போல, நம் குடும்பத்தில் இருப்பவர்கள் சாப்பிடுபவர்கள் திருப்தியோடு சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். அதே முறையைத்தான் நான் இங்கு கடைபிடிக்கின்றேன். 

வாடிக்கையாளர்களின் திருப்தியை மனதில் வைத்துத்தான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 50ரூபாயில் அளவற்ற இரவு உணவு என்ற திட்டத்தை அமல்படுத்தினேன். வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அதைத் தொடர முடியவில்லை. 

இப்போது பார்சல் மட்டும் வழங்குகின்றோம். மீண்டும் முழு நேரமாக செயல்படத் தொடங்கும்போது அளவற்ற இரவு உணவு திட்டம் தொடரும். இதனால் எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்று பலரும் கேட்கின்றனர். எனக்கு லாபம் ஒரு பொருட்டல்ல. அளவற்ற உணவில் குறைந்த பட்சமாக 5 ரூபாய் மட்டும் கிடைத்தால் போதும் என்றுதான் இந்த திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தோம். அதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் திருப்தியாக சாப்பிடுகின்றனர்.அதுதான் எங்களுக்கு முக்கியம்” என்றார். 

-பா.கனீஸ்வரி 

#SriDevarMess  #ChennaiMess #ChoolaimeduMess   


Comments


View More

Leave a Comments