இயற்கையோடு இணைந்த தற்சார்பு வாழ்வியலின் அனுபவம்…
சரவணன் கிருஷ்ணன் அவர்களின் தற்சார்பு வாழ்வியல் அனுபவத்தை அண்மையில் நேரில் கண்டேன். அண்மையில்தான் அவர் அந்த தென்னந்தோப்புக்குக் குடிபெயர்ந்திருந்தனர். களிமண்ணில் அடுப்பு அமைத்து சாணி கொண்டு பூசி மண்சட்டியில் பருப்பும் களியும் சமைத்து அவர்கள் எனக்குப் பரிமாறினர். அவர்களின் அன்பு அளவிடமுடியாத அளவுக்கு இருந்தது.!
ஒரே நாளில் தூங்குவதற்கு இரண்டு கயிற்றுக் கட்டில்களுக்கு சரவணன் கிருஷ்ணன் கயிறு பின்னி முடித்திருந்தார் (நண்பர் ரவியின் துணையுடன்). மழை பெய்யப் போகிறது என்று அடுப்புக்கு மேல் கூரை வேய்ந்து கொண்டிருந்தனர். பார்த்ததும் ஐம்பது ஆண்டுகள் முன்பு சென்று விட்டேன்.
புழக்கத்துக்கு நான்கைந்து மண்பாண்டங்கள் மட்டுமே. மிக அருகில் தண்ணீர்த் தொட்டி. வீட்டில் மின் வசதி உள்ளது. ஆனால் இரு சிறிய மின்விளக்குகள் தவிர எந்த நவீன மின் இயந்திரங்களும் இல்லை. இரண்டு குழந்தைகளுடன் இணையர் மகேஸ்வரி இன்முகத்துடன் இந்த வாழ்வியலில் மகிழ்ச்சியாகவே இருப்பது பார்த்து வியப்பு மேலிடுகிறது. இத்தனைக்கும் அந்த பெண் MSc B.Ed Physics படித்தவர் என்று அறிந்தேன்.
மகேஸ் சமைக்க உலை வைத்து அடுப்பு எரித்தால் சரவணன் மாவைப் போட்டுக் கிளறி இறக்கி விட்டார். அவர் தேநீர் தயாரிக்க இன்னொரு சொப்பில் தண்ணீர் காய வைத்தார். இவர் அதில் மல்லி, கருப்பட்டி சேர்த்துத் தேநீர் தயாரித்தார். எல்லாம் நம்முடன் பேசிக் கொண்டே நம் கண் முன்னே நடந்தது. இதுவே வாழ்க்கை என்று தோன்றியது!
Must Read: இயற்கையாக பழுத்த மாம்பழங்கள், கருப்பு கவுனி அரிசி விற்பனைக்கு…
களி உணவு முடிந்து இவர்கள் அளித்த இனிப்பு (dessert) இதுவரை வாழ்வில் நான் அறியாத சுவை. தேனில் ஊறிய உலர் சப்போட்டா, தேனில் ஊறிய நெல்லித் துருவல் மற்றும் கருப்பட்டி சேர்த்துத் தயாரித்த எள்ளுருண்டை. எல்லாம் சொந்தத் தயாரிப்பு! இதை முதலில் தந்திருந்தால் நான் களி உணவு கேட்டிருக்க மாட்டேன் என்றேன்.
இத்தகைய வாழ்வுக்கு அனைவரும் முயன்றால் பணவீக்கமாவது, உணவுப் பற்றாக்குறையாவது...! புவி வெப்பமயமாதல் தான் ஏது!
இது போதும்!
#NaturalLife #LifeStyle #HealthyLife
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments