டாடி ஆறுமுகத்தின் ரெஸ்டாரெண்ட் ரிவ்யூவில் வரிசை கட்டும் விமர்சனங்கள்...
யு டியூப் சமையல் வீடியோ, சன்டிவி சமையல் நிகழ்ச்சி என்று எப்போதுமே பிஸியாக இருப்பவர் டாடி ஆறுமுகம். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பிறந்தவர் ஆறுமுகம். சிறுவயதில் ஏலக்காய் தோட்டத்தில் வேலை பார்த்திருக்கிறார். அப்போது ஒருவர் இவருக்கு சமையல் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரது பெயர் சுப்பம்மா.
தமது சமையலை பரிசோதித்து பார்க்கும் விதமாக போடிநாயக்கனூரில் ஒரு ரெஸ்டாரெண்ட் தொடங்கினார். ஆனால், அது அவ்வளவாக வெற்றி பெறவில்லை.
பெயிண்ட் அடிக்கும் வேலைக்குப் போனார். அதுதான் இனி நமது முழு நேரத் தொழில் என்றும் முடிவு செய்திருந்தார். அந்த தருணத்தில்தான் அவரது மகன் கோபிநாத் வழியே ஆறுமுகத்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஆம். கோபிநாத் ஒரு யு டியூப் சேனல் ஆரம்பித்து அதில் அவரது தந்தையை சமைக்கச் சொல்லி படம் பிடித்து யு டியூப்பில் போட்டார். செம ஹிட் அடித்தது. வருவாய் குவிந்தது.
பிறகு சன்டிவியில் சமையல் கலை நிகழ்ச்சியில் இடம் பெற்றார். டாடி ஆறுமுகத்தின் புகழ் கொடிகட்டிப்பறக்க ஆரம்பித்தது. 65 வயதுக்குப் பின்னர் முதிய வயதில் அவர் பக்கம் அதிர்ஷ்டகாற்று வீசத் தொடங்கியது. இன்றைக்கு மதுரையில் அசைவ உணவகம் தொடங்கி இருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த உணவகத்துக்கு டாடி ஆறுமுகத்தின் புகழால் கூட்டம் சேர்கிறது. சாப்பிடுவதற்கு இடம் கிடைக்காமல் நெருக்கடியடித்து உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள்.
டாடி ஆறுமுகம் பிரியாணி என்ற பெயரில் மதுரை ரயில் நிலையம் அருகே ரெஸ்டாரெண்ட் திறந்திருக்கிறார். கூட்டம் அள்ளுகிறது. சுவையாக இருக்கிறது. நன்றாக இருக்கிறது என்று கூகுள் ரிவ்யூவில் கமெண்ட்கள் ஒருபுறம் குவிகின்றன. இன்னொருபுறம் விலை அதிகம். தரம் இன்னும் கூட்ட வேண்டும். சப்பளையர்கள் கணிவாகப் பேச வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படும் விமர்சனங்களும் ரிவ்யூவில் நிறைய இருக்கின்றன.
உயரப்பறக்கும் ஆறுமுகம், இந்த ரிவ்யூக்களை கவனித்து, ரெஸ்டாரெண்ட் தரத்தை உயர்த்த வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சிரித்த முகத்துடன் பெரிய மீசையுடன், அக்கறையான வார்த்தைகளுடன் சமையல் கற்றுத்தரும் இந்த கிராமத்து மனிதர் இன்னும் பல உச்சங்களை தொட வேண்டும். அவரது வழியே கிராமத்து சமையலின் மணமும், ருசியும் உலகம் முழுவதும் பரவட்டும்.
-ருசிபிரியன்
#DaddyArumugam' #DaddyArumugamRestaurant #DaddyArumugamRestaurantReview #TamilFoodNews #DaddyArumugamNonVegRestaurant
Comments