சென்னையின் ருசிமிக்க உணவுகள் எது என்று தெரியுமா?
சென்னை மாநகரம் பன்முக கலாசார தன்மை கொண்டது. சென்னை பூர்வகுடிகளை அடிப்படையாக கொண்டமாநகரம், பிற்காலத்தில் தெலுங்குமொழி பேசுவோர், தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பிழைக்க வந்த மாநகராகவும் இது அறியப்படுகிறது. சென்னை நகரின் பிறந்த தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில் சென்னையில் மிகவும் ருசி மிகுந்த உணவு வகைகளின் பட்டியலில் உள்ளவை பற்றி பார்க்கலாம்.
சென்னையின் ருசி மிகுந்த உணவு வகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஃபில்டர் காஃபி
சென்னையில் ருசியான ஃபில்டர் காஃபி 10 ரூபாய்க்கும் கிடைக்கும் 200 ரூபாய்க்கும் அதிகமாக தாஜ் ஹோட்டல் ரெஸ்டாரெண்டிலும் கிடைக்கும். ஃபில்டர் காஃபி புகழ்பெற்றது கும்பகோணம் மட்டும் அல்ல. சென்னையும் கூடத்தான். கும்பகோணத்து காப்பியை டிகிரி காஃபி என்பார்கள். சென்னையில் ருசியான ஃபில்டர் காஃபி என்பது சரவணபவன் கிளைகளில் கிடைக்கிறது. இடையில் கொஞ்சம் சுவை குறைந்தது. மீண்டும் இப்போது சுவையை நிலை நிறுத்தி இருக்கிறார்கள். அடுத்தாக சொல்ல வேண்டும் என்றால் மயிலாப்பூரில் உள்ள சங்கீதா உணவகத்தில் ஃபில்டர் காஃபியின் சுவை அபாரமாக இருக்கிறது. தியாகராய நகரில் பாண்டிபஜாரில் உள்ள பாலாஜி பவன் காஃபியும் சென்னையின் சுவைகளின் வரிசையில் இடம் பிடிக்கிறது.
சென்னையின் சுவை மிக்க உணவில் அடுத்த இடத்தில் இருப்பது மிளகு ரசம். இதனை ஆங்கிலேயர்கள் முல்லிகடவ்னி சூப் என்று அழைத்தனர். தமிழர்களின் உணவு முறைகளில் முதலில் சாம்பார் அல்லது குழம்பு அதற்கு அடுத்து வயிற்றின் செரிமானத்துக்கு உதவும் மிளகு சீரகம் ,பூண்டு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்கள் கலந்த சூப் போன்ற மிளகு ரசம்தான் முக்கிய இடம் பெறுகிறது. இதனை சிலர் ராசம் என்றும் சொல்கின்றனர். இருமல், சளிக்கு வீட்டு மருந்தாகவும் வழங்கப்படுகிறது.
சென்னையின் சுவையான உணவு வகைகளில் சுண்டல் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
சென்னையின் பெரும்பாலான டீக்கடைகளில் மாலை நேரங்களில் சுண்டல் விற்பனை நடக்கிறது. குறிப்பாக மெரினா கடற்கரையில் இருக்கும் டீ கடைகளில் சுண்டலை பார்க்கலாம். மெரினாவில் தகர டின்னைத் தூக்கிக் கொண்டு அக்கா சுண்டல் சாப்ட்ரிங்களா என்று கேட்கும் சிறார்களை நீங்கள் பார்த்திருக்கலாம். மெரினாவில் அலையடிக்கும் கடலில் கால் நனைத்தபடி சுண்டல் சாப்பிடுவது ஒரு தனி சுகம். தேங்காய், மாங்காய் போட்ட மெரினா சுண்டல் என்றுமே சுவையின் அலாதியான ஒன்று.
நெத்தி ஃபிரை மீன் உணவு சென்னையின் சுவை பட்டியலில் அடுத்ததாக இடம் பெறுகிறது. நெத்திலி மீன் என்று பெயரே சிலருக்கு வாயில் எச்சிலை ஊறவைக்கும். நெத்தி மீன் வறுவல் என்றால் சொல்லவே வேண்டாம். நெத்திலி மீன் குழம்பு , வறுவல் எல்லாமே சுவையை அளிக்கக் கூடியது.
சென்னையின் முதல் டாப்டென் வரிசையில் ஐந்தாவதாக இடம் பெறுவது மசாலா தோசை. ஒரு கரண்டி மாவை எடுத்து குழிபோன்ற பாத்திரத்தில் ஊத்தினால் இட்லி என்றும், அதையே சூடான ஒரு கல்லில் ஊற்றினால் தோசை என்றும் கண்டுபிடித்தது தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும். இப்படியான தோசையில் உருளைக்கிழங்கு மசாலாவை சேர்த்து அதனை மசாலாதோசை என்றும் அழைத்தனர் நம் முன்னோர்கள். புளிக்காத மாவில் சுடப்பட்ட முறுகலான மசாலாதோசையின் நடுவே மசாலா வைத்து சாப்பிட்டால் அதை மீண்டும், மீண்டும் சாப்பிட தூண்டும் வகையில்தான் இருக்கும். நான்கு இட்லி சாப்பிடுவதற்கு பதில் ஒரு மசாலா தோசை சாப்பிட்டாலே போதுமானது என்று சொல்லும் அளவுக்கு இருக்கும்.
சரி அடுத்த ஐந்து உணவு வகைகள் என்னென்ன என்பதை நாளை பார்க்கலாம்.
Comments