தமிழகத்தின் சமையல் கலையை உலகறிய செய்த வில்லேஜ் குக்கிங் சேனல்


பெரிய தம்பி என்ற அனுபவத்திலும், வயதிலும் மூத்த சமையல் கலைஞருக்கு அவரது பேரன்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றனர் தங்களது வில்லேஜ் குக்கிங் சேனல் வாயிலாக.

தாத்தாவும் பேரன்களும்

புதுக்கோட்டை மாவட்டம் சின்னவீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த 75 வயதான பெரிய தம்பி அக்கம் பக்கத்துக்கு கிராமத்தில் நடைபெறும் விஷேஷங்களுக்கு சமையல் செய்யும் சமையல் கலைஞர்.  கிராமத்தினர் மத்தியில் புகழ்பெற்ற அவரது சமையல்  விருந்துடன் பல ஆயிரம் திருமணங்கள் நடந்துள்ளன, பல ஆயிரம் சடங்கு, காது குத்து விழாக்களில் அவரது விருந்துகள் கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்; ஆரோக்கியமான காலை உணவு குறித்து சைலேந்திரபாபுஐபிஎஸ் என்ன சொல்கிறார் தெரியுமா?

தாத்தா பெரிய தம்பியும், பேரன்கள் வி.சுப்பிரமணியன், வி.முருகேசன், வி.அய்யனார், டி.முத்துமாணிக்கம், ஜி.தமிழ்செல்வன் ஆகியோர் தங்களது 10 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்வது, விளை நிலத்தில் பணிகளை மேற்கொள்வது என்ற பணிகளில் இருந்திருக்கின்றனர்.

பொழுதுபோக்காக உருவான சேனல்

நிலத்தில் உழைத்த நேரம் போக மீதி நேரத்தில் என்ன செய்யலாம் என்று அவர்கள் சிந்தித்த போதுதான், யூடியூப் சேனல் யோசனை அவர்களுக்கு உதித்தது. யூடியூப்களில் சமையல் கலைஞர்கள் கலக்கி கொண்டிருப்பதை கண்டனர்.  தங்களது தாத்தாவை வைத்து சேனல் தொடங்கலாம் என்று முடிவெடுத்தனர். அதன் விளைவாக 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வில்லேஜ் குக்கிங் சேனல் உருவானது.

அசத்தும் வில்லேஜ் குக்கிங் சேனல்

மற்ற யூடியூப் சேனல்கள் போலவே என்னென்ன ரெசிபிகள் செய்வது, எப்படி வதக்குவது, எப்படி பொறிப்பது, எப்படி மசாலா சேர்ப்பது என்று விளக்கும் வீடியோவாகவே அவர்ளது சேனலும் இருந்தது. ஆரம்ப கட்டத்தில் வில்லேஜ் குக்கிங் சேனலின் பார்வையாளர்கள் எண்ணிக்கை போதுமான அளவு கிடைக்கவில்லை. ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் யூடியூப் சேனல் கவனிக்கப்படாத சூழல் இருந்தது. 

இதையும் படியுங்கள்: வாய்ப்புண் வந்தால் இதை மட்டும் செய்யுங்க போதும்

லைவ் சமையல் சேனல்

பின்னர் என்ன செய்வது என்று யோசனை செய்தபோது வித்தியாசமான முயற்சிகள்தான் வெற்றி பெறும் என்று சிந்தித்து உள்ளடக்கத்தை வழங்கும் முறையை மாற்றினர். லைவ் ஆக மீன் பிடிப்பது, அதனை எடுத்து வருவது, அதை வயல்வெளியில் வைத்து துண்டாக்கி, மசாலா சேர்த்து எண்ணைய் சட்டியில் பொறித்தெடுப்பது என்று வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கினர்.

ஒ்வ்வொரு சமையல் வீடியோவுக்கும் அதனை எப்படி வீடியோ ஆக்குவது என மூன்று நாட்கள் செலவழித்து முன்னேற்பாடுகள் செய்து கற்பனை திறனுடன் கூடிய உழைப்பை கொடுத்தனர். அதற்கு நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்தது. 2019ம் ஆண்டில் இருந்து பார்வையாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் அவர்களுக்கு யூடியூப்பில் இருந்து விளம்பர வருவாயாக ரூ.37 ஆயிரம் கிடைத்தது.இப்போது யூடியூப்பில் இருந்து மாதம் 7 லட்சம் ரூபாய் இவர்களுக்கு கிடைக்கிறது.

ராகுல் காந்தியால் கூடுதல் பிரபலம் 

யூடியூப் தரும் பணத்தில் நான்கில் ஒரு பகுதியை புதிய புதிய சமையல் யோசனைகளை செயல் வடிவமாக்க செலவு செய்து வருகின்றனர். உணவுப் பொருட்களை வாங்குவது, மசாலா பொருட்கள் வாங்குவது, வீடியோ எடிப்பது, அதனை எடிட் செய்வது என மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை செலவு செய்கின்றனர்.

சமைக்கும் உணவுப் பொருட்களை அனாதை இல்லங்கள், ஏழைகள், ஏதுமற்றவர்கள் ஆகியோருக்கு வழங்கி வருகின்றனர். வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக கடந்த சட்ட‍ப்பேரவைத் தேர்தலின் போது பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இவர்களைப் பற்றி கேள்விப்ப‍ட்டு வில்லேஜ் குக்கிங் சேனல் கிராமத்துக்கு வந்தார். முதலில் 20 நிமிடம் மட்டுமே அவர்களுடன் ராகுல் இருப்பார் என்று கூறப்ப‍ட்ட‍து. ஆனால், அவர்களின் வித்தியாசமான சமையல் முயற்சியைப் பார்த்த‍ ராகுல் காந்தி, அவர்களுடன் ஒருமணி நேரம் செலவழித்தார். திடீரென அவரே சமையலிலும் இறங்கினார். ஆனியன் ரைத்தாவை தயாரித்தும் அசத்தினார். 

அன்றைக்கு தலைவாழை இலையில் காளான் பிரியாணியை ராகுலுக்கு விருந்தாக்கினர். ராகுல் வந்து விட்டுப் போனபின்ன‍ர் வில்லேஜ் குக்கிங் சேனல் இந்தியாவை கடந்து சர்வதேச எல்லைகளைகத் தொட ஆரம்பித்த‍து. இதன் பின்ன‍ர் படிப்ப‍டியாக உயர்ந்து ஒரு கோடி பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. தென்னிந்தியாவில் இது போல எந்த ஒரு யூடியூப் சேனலும் இதுபோல ஒரு கோடி பார்வையாளர்களைத் தொட்ட‍தில்லை. 

இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்ச‍ரின் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்தை வழங்கி வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் அசத்தி உள்ள‍னர். இந்த சமயத்தில்தான் அவர்களின் சேனல் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த செய்தியும் வெளி வந்திருக்கிறது. குக்கிராமத்தில் இருந்து ஒரு சர்வதேச சாதனையை படைத்த‍ இந்த தமிழர்களுக்கு ஆரோக்கிய சமையல் வாழ்த்து சொல்வதில் பெருமை கொள்கிறது. 

-பா.கனீஸ்வரி 

#VVC #VillageCookingChannel #PeriyaThambi #ChinaVeraMangalam #TamiCookingChannel

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 



 


Comments


View More

Leave a Comments