மூலிகைப் பாட்டியின் வழிகாட்டலில் உருவான தோட்டம்
மூலிகை தோட்டம் உருவாக உதவிய பாட்டி
மூலிகை பாட்டி தங்கம்மா
முதிய வயதிலும் மூலிகைகளை அறிவதில் ஆர்வம்
ஒரு அழகிய மூலிகைத் தோட்டம் அமைக்க வேண்டும், என்பது என் நீண்ட நாள் கனவு!...அதற்கான சூழல், நான் பணிபுரியும் ஆண்டியப்பனூர் (திருப்பத்தூர் மா.) அரசு மருத்துவமனை வளாகத்திலே அமைந்தது!...ஆனால் தனி மனிதனாக அதை செய்து முடிப்பது இயலாத காரியமாக தெரிந்தது. இருப்பினும் பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியுற்று, மனதளவில் சோர்ந்து தத்தளித்த போது, எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் தங்கம்மா பாட்டி!...
இரேகைகள் பதிந்த உடல்! அவ்வளவு சுருக்கங்கள், பாட்டியின் தேகத்தில்!...எப்போதுமே புன்னகை ததும்பும் பேரழகு! அழகாய் குவிந்த சிறிய கூன் உடைய உடலமைப்பு! கைகளில் நடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், தாவரங்களின் மீது தங்கம்மா பாட்டிக்கு அப்படி ஒரு இணக்கம்!...
Also Read: ஜீ தமிழ் தொலைகாட்சியில் பெண் விவசாயிகள் பங்கேற்கும் விவாதம்
அருணாச்சலம் அடுப்பு பத்த வக்கிற ஸ்டைலே தனி தான்’ என்ற தலைவரின் முத்திரைப் போல, ‘தங்கம்மா பாட்டி, மண்வெட்டியால மண்ண தோண்டுற ஸ்டைலே தனி தான்’. அப்படி ஒரு கலைத்திறன்!......பாட்டி, சொந்தமாக வைத்திருக்கும் சிறிய மண்வெட்டியை சுழட்டி சுழட்டி பூமியை செதுக்கும் போது, பாட்டியை ரசிப்பதற்காகவே, புதைந்துள்ள மண் துகள்கள், ஒட்டு மொத்தமாக வெளியறி பாட்டியை பார்த்து கண் அடித்து விட்டு, மடிந்துவிடும் மண்ணோடு மண்ணாக!...
வெறுமையாக இருந்த இடத்தில், இப்போது ஏறக்குறைய 150 மூலிகைகள் என்னையும் பாட்டியையும் பார்த்து தலை அசைக்கின்றன! தோட்டத்தில் உள்ள அனைத்து தாவரங்களும் ஏறக்குறைய தங்கம்மா பாட்டியின் பொன்னான கரங்களால் நிலைநிறுத்தப்பட்டவை!, சில விதைக்கப்பட்டவை!....
பாட்டி பூமியில் வைத்த எந்த ஒரு தாவரமும், இது வரை உயிர் பெறாமல் இருந்ததே இல்லை! தாவரங்கள் மறுபிறப்பு எடுக்காமல், ’முக்தி நிலை’ அடைவதற்கு மூதாட்டி அனுமதிப்பதே இல்லை!... என் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் பாட்டியின் கைப்பக்குவம் அற்புதம்! சமையலில் அம்மாவின் கைப்பக்குவம் போல!..
தாவரங்களில், புதிதாக தோன்றும் மலர்களைப் பார்த்தவுடன், என்னை ஆசையாய் அழைத்து காண்பிக்கும் போது, என் பார்வை முழுவதுமாக மலரை மறந்து பாட்டியின் முகம் மீது மாறிவிடும்! ஏனெனில், புதிதாய் பூத்த மலரை விட, பாட்டியின் முகத்தில் பூத்த பிரகாசம் அவ்வளவு அழகு!..’மலரினும் அழகிய!...’
பண்பான பாட்டிக்கு செவித்திறன் சிறிது குறைவுதான் எனினும், உச்சத்தில் வாசனைத்திறன்! சர்வசாதரணமாக, வாசனையின் மூலம் மூலிகைகளின் இனத்தை கண்டறியும் திறன் பாட்டிக்கு! நல்ல ஆரோக்கியம்! பாட்டிக்கு இல்லை எனக்கு!...இப்படி ஒரு அறிவு நிறைந்த பாட்டி கிடைத்ததால்!..
மண்வெட்டியின் மூலம், நிலத்தை தோண்ட பல முறை முயன்றிருக்கிறேன், பாட்டியின் மேற்பார்வையில்!…..கடுமையான போராட்டம் தான் மிச்சம்! ஆனால் பாட்டி கற்றுக்கொடுத்த நுணுக்கங்களால், இப்போது அதில் நான் அத்துப்பிடி!......
’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் அலைவரிசை கொண்ட பாட்டி, தினந்தோறும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற தவறுவதேயில்லை!..‘இன்னக்கி மழ பெய்யும்’ என கூறும் பாட்டியின் வானிலை அறிக்கை பெரும்பாலும் சரியாகவே இருக்கும்!... சில நேரங்களில், மழை பெய்யாமல் பொய்த்துவிட்டால், ‘இன்னா பண்றது, எல்லா மரத்தையும் வெட்டிபுட்டா, எப்புடி மழ பெய்யும்!, என்று அம்பி ஸ்டைலில் சமாளித்துவிட்டு, கலகலவென சிரிக்கும் போது, பாட்டியின் பற்கள் இல்லா பொக்கை வாயும் அழகோ அழகு!...
Also Read: குதிகால் வலி தீர ஏற்ற உணவு முறைகளும், தீர்வுகளும்
அவ்வப்போது சித்த மருந்துகளை என்னிடம் வாங்கிக்கொள்ளும் பாட்டி, மருத்துவக் குறிப்புகளிலும் கில்லாடி!....ஒரே ஒரு முறை வாய்ப்புக் கொடுத்தால் ‘ஜி தமிழ்’ தாத்தாவை பிண்ணுக்குத் தள்ளி ‘ஜி தமிழ்’ பாட்டி எனும் அடைமொழியை பெற்றுவிடும் தங்கமான பாட்டி!...
‘தங்கம்மா’- பெயருக்கு தகுந்த குணம்! ஆனால்,
‘பாட்டி’- பெயருக்கு தகாத குணம்!..
ஏனெனில், இப்போது கூட பாட்டியை, ஒரு ’பார்ட்டியில்’ அனுமதித்தால் நச்சுனு ஒரு குத்தாட்டம் போட்டு அசத்திவிடும்! அவ்வளவு இளமை மனதளவில்!...
அரசு வேலைகளில் பணிபுரிவோர், புதிதாக எதையும் செய்வதில்லை என்ற பெரும்பாலோரின் சிந்தனையை மாற்றுவதே என் எண்ணம்! அது மாறும் என்பது திண்ணம்!... அதற்கான முதற் படி தான் என் மூலிகைத் தோட்டம்!... ..
இந்த மூலிகைத் தோட்ட முயற்சியில் வெற்றி பெறுவேன் என்று உறுதியுடன் நம்புகிறேன்!....காரணம், ’ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் உண்டு’ என்பது பழமொழி!....நான் பெறவிருக்கும் வெற்றிக்கு பின்னும் நிச்சயம் ஒரு பெண் உண்டு!........அது தங்கம்மா பாட்டியின் வடிவில்!...
#MooligaiPatti #DRVikaramKumar #SiddhaDRVikaramKumar #Mooligai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments