இலங்கை விவசாயிகளுக்கு சாகுபடி செலவைக் குறைக்க அறிவுறுத்தல்
புதிய வெளிச்சம் அமைப்பின் நிறுவனரும் எனது நெருக்கமான இனிய நண்பருமான நவஜீவன் அவர்கள் 2018 ஆம் ஆண்டு நடத்திய இயற்கை வழி வேளாண்மை வாரம் போன்ற நிகழ்வை இந்த ஆண்டும் நடத்திட வேண்டும் என்று விரும்பினார்.
இலங்கையில் உணவுத் தற்சார்பை உறுதி செய்திட மக்களிடம் தற்சார்பு வோண்மையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே நோக்கம். ஏனெனில் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளன.
ஒரு முட்டை விலை 55 ரூபாய். ஒரு தேநீர் 150 ரூபாய். செலவில்லாத தற்சார்பு வேளாண்மை பற்றிய பயிற்சி தரும் திட்டத்துடன் 2022 டிசம்பர் 29ஆம் நாள் கொழும்பு நகருக்கு நான், திரு சுந்தர ராமன், காணொளியாளர் ராஜசேகர் ஆகியோர் வந்திறங்கினோம்.
Must Read: முட்டை , மாமிசம், மீன் சாப்பிட்டால் ரத்தத்தில் க்ளூகோஸ் ஏறுமா?
முதல் கூட்டம் 31.12.22 ஆம் நாள் அட்டன் என்ற ஊரில் நடத்தினோம். இப் பகுதி கிட்டத்தட்ட ஐரோப்பா மாதிரியான இடம். கடும் குளிர் நிலவுகின்றது. எங்கு பார்த்தாலும் மலையும் அருவிகளும் உள்ளன. நீர் வளம் மிகுந்து காணப்படுகிறது. ஆனால் முழுமையாக ரசாயனம் பயன்படுத்துகிறார்கள். தேயிலைத் தோட்டங்கள் மிகுதியும் உள்ளன. இதை மலையகப் பகுதி என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலைத் தோட்டம் உருவாக்க குடியமர்த்தப்பட்ட மக்கள். மக்களுக்கு சொந்த நிலம் இல்லை. ஆங்காங்கே நிலங்களை துண்டு துண்டாக எடுத்து அதில் காய்கறி சாகுபடி செய்கின்றனர்.
இதை இங்கு பேட்ச் என்று கூறுகின்றனர். இந்த துண்டுக் காணியில் தான் வேளாண்மை நடக்கின்றது. பெரும்பாலும் பெண் உழவர்கள் உள்ளனர். நாங்கள் பயிற்சிக் கூட்டத்திற்கு 100 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வந்ததோ 700 பேர் . அரங்கம் கொள்ளவில்லை.
மிக அதிகமாக இடுபொருள் செலவு செய்கின்றனர். ஐம்பதாயிரம் ரூ. கடன் வாங்கி 35000 ரூ. க்கு உரம் வாங்குவதாக ஒரு பெண்மணி கூறினார். சாகுபடியில் செலவைக் குறைக்கும் வழிகளைச் சொன்னோம். மாலை 5 மணி ஆன பின்னரும் பெண்கள் அமர்ந்து கேட்டார்கள். எங்களை விடவே இல்லை. பிரியாவிடை பெற்று 'நுவரேலியா என்ற ஊருக்குப் பயணமானாம். அங்கு அடுத்த கூட்டம் ஒழுங்கு செய்யப்படவுள்ளது.
#SrilankaAgricultureEvent #OrganicAgriculture #AgricultureInSrilanka
Comments