எளியவரின் பசியை போக்கிய எளியவர்


ஆட்டோ ஓட்டுநரின் மனித நேயம் 

எளிய மனிதரின் பசி போக்கிய உதவி 

எளியவரின் பசியை போக்கிய ஆட்டோ ஓட்டுநர்

கருணை நிறைந்த எளியவர்கள் 

வாழ்வாதாரத்துக்காக தேடி வரும் மக்களை சென்னை பெருநகரம் எப்போதுமே அரவணைத்தே வந்திருக்கிறது. இந்த பெருநகரின் சாலைகளின் ஓரத்தில், பிளாட்பாரங்களில் வானமே கூரையாக எண்ணற்றவர்கள் வாழ்கின்றனர். 

சென்னையின் எந்த ஒரு பகுதியிலும் இத்தகையவர்களை நாம் காணமுடியும். நாம் சிந்திக்க ஏதுமற்று அவர்களைப் பார்க்கும்போது அவர்களின் இருப்பு நம் சிந்தனையை கவ்விக்கொள்ளும். யார் இவரை பெற்றெடுத்திருப்பார். ஏன் இப்படி இந்த பெருநகரில் வீதியோரத்தில் வாழ்கிறார். எப்படி பசியாறுகிறார். உடைக்கு,உணவுக்கு என வாழ்வாதாரதுக்கு என்ன செய்கிறார் என்ற கேள்வி நம்முள் எழும். மீண்டும் ஏதோ ஒரு சிந்தனை நம்முள் தோன்றி நம்மை திசைமாற்றி விடும்.

Also see: ஆரோக்கிய சுவை இன்றைய தலைப்பு செய்திகள்

இத்தகைய மனிதர்களுக்கு இந்த பெருநகரில் சாதாரண மனிதர்களே உதவுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அண்மையில் மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான ஜி.குப்புசாமி சென்னையில் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். ஓரு ஆட்டோ ஓட்டுநரின் கருணையை அவரின் பயணத்தருணம் பதிவு செய்திருக்கிறது. நம் மனதின் அடி ஆழத்தை அசைக்கிறது. 

 

பாரிமுனையிலிருந்து ராயப்பேட்டை செல்வதற்கு அந்த ஆட்டோக்காரர் ₹150 கேட்டார். நான் ₹100ல் இருந்தேன். பிறகு ₹120க்கு உடன்பட்டு, கிளம்பி மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த போது அவர் சட்டென்று வேகத்தைக் குறைத்து நடைபாதையோரத்தில் ஆட்டோவை நிறுத்தியபோதுதான் அங்கே வெயில் சூடு உறைக்காமல் ஒருவன் விழுந்து கிடப்பதை கவனித்தேன். குடித்துவிட்டு விழுந்திருக்கிறான் என்று நினைத்தேன். இல்லையென்று பிறகு தெரிந்தது.

ஆட்டோ டிரைவர் என்னிடம் "உங்க பின்னால மீல்ஸ் பாக்கெட் இருக்கும், அதை எடுங்க சார்" என்றார்.

எளிய மனிதருக்கு உதவி எளியவர்

சீட்டுக்குப் பின்னால் இருந்த  அந்த சாப்பாட்டு பொட்டலத்தை வாங்கிக்கொண்டு அவனிடம் சென்று தட்டி எழுப்பினார். அவன் எழவில்லை. மீண்டும் ஆட்டோவுக்கு வந்து அவருடைய இருக்கைக்கு பின்னாலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து அவன் முகத்தில் தெளித்து அவனை எழுப்பி உட்கார வைத்தார். 

Also Read: இயற்கை வேளாண்மை, வரவும் செலவும்… விவசாயியின் அனுபவ கட்டுரை...

கடந்து சென்று கொண்டிருந்த வேறு எவனோ ஒருவன் அருகில் வந்து "நீ போ அண்ணா. நான் பாத்துக்கிறேன்" என்றவனை விரட்டினார்.

அந்த கப்புகளைப் பிரித்து சோற்றில் சாம்பாரை ஊற்றிப் பிசைந்தார். அவன் இலையை தன்னிடம் இழுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்ததும்தான் எழுந்து வந்தார்.

ஆட்டோவைக் கிளப்பியவரிடம் "உங்களுக்கு தெரிஞ்சவரா?" என்று கேட்டேன். "யாரோ எவனோ... யாரு கண்டா...கொஞ்சம் புத்தி மாறாட்டம் போலத் தெரியுது. பசியில உயுந்து கிடக்கிறான். நான் தினமும் மதியம் எங்கியாவது நிறுத்தி  சாப்பிடறப்போ  மூணு பேருக்கு பொட்டலம் வாங்கிடுவேன் சார். இந்த மாரி ரோட்ல உயுந்திருக்கவன் உட்கார்ந்திருக்கவனா பாத்து குட்த்துருவேன். இன்னிக்கு ரெண்டு பேருக்கு குட்த்துட்டேன். இவன் மூணாவது. நம்மால முடிஞ்சது அவ்ளோதான்..." என்றார்.

இந்த மனிதரிடம்தான் முப்பது ரூபாய்க்கு பேரம் பேசியிருக்கிறேன். வெட்கமாக இருந்தது.

நன்றி; திரு. ஜி.குப்பு சாமியின் முகநூல் பதிவு 

#HelpingHand  #AAutoManHelpPoor   #ChennaiPoor 
 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai


Comments


View More

Leave a Comments