கைப்பக்குவத்தின் ருசியில் சமையல் தொழிலில் சாதித்த பெண்


கைப்பக்குவத்தின் ருசியில் சமையல் தொழிலில் சாதித்த பெண்

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ராணிதா என்ற பெண் தமது கணவர், மகன் உள்ளிட்டோருக்கு சுவையான உணவு வழங்கும் ஒரு குடும்ப பெண்ணாகத்தான் இருந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியின் சார்பில் குழந்தைகளை பிக்னிக் அழைத்து செல்வதற்காக 100 இட்லிகள் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அவர்களுக்காக இட்லி, சாம்பார், சட்னி ஆகியவற்றையும் வைத்துக் கொடுத்தார். இதை அவர் இலவசமாக  செய்து கொடுத்தார். இதற்கு அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைத்தன. தமது சமைக்கும் திறன் வாயிலாக வருவாய் ஈட்ட முடியும் என்ற த ன்னம்பிக்கையை ராணிதா பெற்றார்.

தமது கணவருடன் ஆலோசனை செய்து கோகுல்சன் ஃபுட் மற்றும் பிராசஸிங் பிரிவை தொடங்கினார். ராணிதா உணவு வகைகளை தயாரிப்பது என்றும், டெலிவரி உள்ளிட்டவைகளை கணவர் பார்த்துக் கொள்வது என்றும் முடிவானது. அதன்படி அவர்களது உணவு நிறுவனம் கொஞ்சம், கொஞ்சமாக வளரத் தொடங்கியது. விரைவிலேயே ஆயிரம் இட்லிகள் தயாரித்துத் தரும்படி ஒரு உணவகத்தில் இருந்து ஆர்டர் கிடைத்தது.

ஆரம்பத்தில் இட்லி மட்டும் தயாரித்து வந்த அவர்கள், இடியாப்பம், வடயப்பம், கொழுக்கட்டை, நெய்யப்பம் உள்ளிட்ட கேரள வகை உணவுகள் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இப்போது ராணிதாவின் மகன் கோகுல், உணவை பேக்கிங் செய்வதற்கு உதவுகிறார். சில நேரம் உணவை விநியோகிப்பதற்கும் செல்கிறார்.

உணவு விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த தை அடுத்து இந்த தம்பதி இருவரும் தாங்கள் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு, முழு நேரமாக உணவு விற்பனையைத் தொடங்கினர்.

வங்கி கடன் வாயிலாகவும், பிரதான்மந்திரி யோஜனா திட்டத்தின் மூலமும் கடன் பெற்று வணிகத்தை விரிவுபடுத்தி உள்ளனர். கொரோனா தொற்றுக்கு முன்பு மாதம் தோறும் ஒரு லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டினர். அதன் பின்னர் கொரோனா காலகட்டத்தில் வருவாய் 60 ஆயிரம் ரூபாயாக குறைந்திருக்கிறது. மீண்டும் விற்பனை சூடுபிடிக்கும் என்று நம்புகின்றனர். இப்போது ராணிதாவின் நிறுவனத்தில் ஏழு  பெண்களும் பணியாற்றுகின்றனர். தமது சமைக்கும் கைபக்குவத்தை இன்று ஒரு தொழிலாக ராணிதா மாற்றி இருக்கிறார் என்றால் அதுமிகையல்ல.


Comments


View More

Leave a Comments