![](https://arokyasuvai.com/uploads/5b4c1cde3eab544b3f8459531c2d7c56.jpg)
ரத்த ஓட்டம் சீராவது முதல் மூட்டுவலிக்கு தீர்வு வரை மண்குளியலின் மகத்துவம்
தமிழர்களின் பாரம்பர்யத்தில் குலதெய்வ கோயில்களில் சேத்தாண்டி வேஷம் போட்டுக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமான ஒன்று. குறிப்பாக தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலுக்கு அடிக்கடி செல்பவர்களுக்கு இது தெரிந்திருக்கலாம். அந்த திருவிழாவில் சேத்தாண்டி வேஷத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவது மிகவும் விஷேஷமான ஒன்று. அதே போல கமுதி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலிலும் சேத்தாண்டி வேஷம் போட்டுக்கொண்டு நேர்த்திகடன் செலுத்துவது வழக்கமாக இருக்கிறது.
சேத்தாண்டி வேஷம் என்பதைத்தான் வெளிநாடுகளில் மண்குளியல் என்று செய்கின்றனர். மண்குளியல் எடுத்துக் கொள்வதால் நம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என்பது உண்மை. இங்கே சித்தமருத்துவர் திரு.விக்ரம் குமார் மண் குளியல் பற்றி எழுதியுள்ள கட்டுரையைப் பார்க்கலாம்.
கிராமத்து மண் குளியல்
புகைப்படத்தில் உள்ளவர்களை பார்க்கும்போது ”யார் இவர்கள்… இத்தனை முதல்வன் அர்ஜுன்கள்?” என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா… எக்கூர் கிராமம்… சவ்வாது மலை அடிவாரம். இயற்கை ஆர்வலரின் அறிவுறுத்தலின் பேரில் 2019ம் ஆண்டில் ஒரு நாள் எக்கூர் கிராமம் சென்றிருந்தோம். அதில் சிறப்பு, மண் குளியல் எடுத்துக்கொள்வது. பதினொறு மணி அளவில் அங்கு சென்று சேரும் போது, சுமார் பத்து பேர் முதல்வன் அர்ஜுன்களாக காட்சியளித்தனர்.
இனிமையான வரவேற்புடன் எங்களுக்கான புற்று மண் கலவைத் தயாராகவிருந்தது. உடல் முழுவதும் பூசிக்கொண்டு வெயிலில் மண்ணையும் உடலையும் உலரவிட்டுக் கொண்டிருந்தோம்! மண் உடலோடு அங்கிருந்த சாமந்தி தோட்டம், வெட்பாலை மரங்கள்… கருவேல மரங்களையும் இயற்கை சூழலையும் பார்வையிட்டோம். ’என்னடா இது… வித்தியாசமான இத்தனை உடல்கள் நடமாடுகின்றனவே’ என்று அங்கிருந்த பறவைகள் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தன.
Must Read: இயற்கையாக பழுத்த மாம்பழங்கள், கருப்பு கவுனி அரிசி விற்பனைக்கு…
வெயில் சுட்டெரித்தாலும் மண் பூசிய உடல், நீருக்குள் இருப்பது போல குளிர்மையை உணர்த்தியது. சுமார் ஒரு மணிநேரம் கடந்த பிறகு பம்பு செட் குளியல், புற்று மண்ணை நிலம் கடத்த!... அடுத்த ஒரு மணி நேரம் செட் குளியல் தான் (வெளியேற மனம் விடுமா என்ன!)...
முடித்ததும் அங்கிருந்த நீர்தொட்டிக்குள் குதித்தேன்!... இந்த பெரிய பெரிய ஹோட்டல்களில் எல்லாம் இருக்குமே, வியு நீச்சல் குளம் (View Swimming pool)! அதாவது நீந்திக்கொண்டே மலையையோ… கடலையோ ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்… அதைப் போல செலவில்லாமலே நானும் அந்த நீர்த்தொட்டியின் முனையில் நின்றுக்கொண்டு சவ்வாது மலையின் மரங்களையும்… தொட்டிக்கு கீழே இருந்த வயலையும் நோட்டமிட்டேன்! ஆஹா இயற்கை எவ்வளவு அழகு!... வியூ நீச்சல்குளங்கள் எல்லாம் தோற்றுப் போகும்.
மண் குளியலின் மருத்துவ குணத்தை விளக்க தனிக் கட்டுரையை வடிக்கலாம். இரத்த ஓட்டத்தை சீராக்குவது… உடல் வெப்பத்தைக் குறைப்பது… தோல் நோய்கள்… மூட்டுவலியைக் கட்டுப்படுத்துவது என அதன் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.மண் குளியலைத் தாண்டி இன்று நான் ரசித்த விஷயம், அக்கிராமத்து மக்களின் விருந்தோம்பல்!... இன்று தான் என்னை முதன் முதலில் பார்க்கிறார்கள்… ஆனால் நீண்ட நாள் பழக்கம் போன்றதொரு ஒரு உணர்வை வெளிப்படுத்தினார்கள்.
ஒவ்வொரு வீடு தோறும் அவர்கள் கொடுத்த இயற்கை விருந்தோம்பல் அற்புதம்! மாங்காயை சிறிது சிறியதாய் சீவி மிளகாய்த் தூள் மற்றும் வெல்லம் சேர்த்துப் பிரட்டி, கேழ்வரகு கூழுக்கு தொட்டுக்கொள்ளும் துணை உணவாக வழங்கினார்கள்… பிரதான உணவான கேழ்வரகு கூழைவிட துணை உணவு தான் என் இரைப்பையில் தஞ்சமடைந்தன. அவ்வளவு சுவை…கேரட், தேங்காய், வெல்லம், ஏலக்காய் சேர்த்து தயாரித்த பானம் அற்புத சுவை... விளாம் பழம்… வாழைப்பழம், அகத்திக்கீரை… மூக்கிரட்டைக்கீரை…. என அவர்கள் கொடுத்தனுப்பிய ஆரோக்கியமான பொருட்களோடு மனமும் உடலும் ஆரோக்கியமானது!
இயற்கை மருத்துவர் ஆலோசனைபடி எடுப்பது நல்லது
மண் குளியல் குறித்து விகடன் இணையதளத்துக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர் .தீபா அளித்த பேட்டியில் சில கருத்துகளை கூறியிருக்கிறார். அதில் இருந்து சுருக்கமாக சில கருத்துகளை பார்க்கலாம். “கழிவுகளை வெளியேற்றும் முக்கியப் பணியைத் தோல் செய்கிறது. வியர்வை வழியாக வெளியேறும் கழிவுகள் தோலில் தங்குவதால் அரிப்பு போன்ற சருமப் பிரச்னைகள் உண்டாகும். கோடை வெயிலும் சேர்ந்துகொள்வதால் சருமப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
உடலில் கழிவுகள் தேங்கினால் உடல் சூடு அதிகரிக்கும். இந்த நிலையில் மண் குளியல் சிகிச்சை எடுத்தால் ஈரப்பதத்தைத் தக்கவைத்து உடலுக்குக் குளிர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டைச் சீராக்கும்; மலச்சிக்கல் பிரச்னைகளைப் போக்கும்; சிறுநீரகப் பாதிப்பைக் குறைக்கும். தோலில் அதிக எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் மண் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்குப் பாத எரிச்சல் குறைக்க உதவும். உடல் பருமன், வெரிக்கோஸ் வெயின், கால் வலி, சிறுநீரகப் பிரச்னை, நரம்புக் கோளாறுகள், முடக்கு வாதம் எனப் பல்வேறு நோய்களுக்கும் மண் சிகிச்சை சிறந்தது. குறிப்பாக, மண் சிகிச்சை பக்கவிளைவுகள் இல்லாமல் நோயைக் குணப்படுத்த உதவும்.
Must Read: ஏழை, எளியவர்களின் பசியைப் போக்கும்…இட்லி பாட்டிக்கு பரிசாக கிடைத்த வீடு!..
மண் குளியல் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் சிலவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். சுயமாக இந்தக் குளியல் சிகிச்சை எடுப்பதைத் தவிர்க்கவேண்டும். ஆரோக்கியமான ஒருவர் முதல் முறையாவது இயற்கை மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது” என தீபா கூறியிருக்கிறார்.
அரசு மருத்துவகல்லூரியில் மண் குளியல் இலவசம்
அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்குளியல் இலவசமாக அளிக்கப்படுகிறது. 10 வயதுக்கும் மேற்பட்ட ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். விவரங்களுக்கு 044 26143621 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 36G9+6Q2, அறிஞர் அண்ணா இந்திய மருத்துவ வளாகம், பிபி கார்டன், அரும்பாக்கம், சென்னை-106 என்ற முகவரியில் நேரிலோ அணுகவும்.
மருத்துவர் தீபா பேட்டி; நன்றி விகடன் குழுமம்
.#MudBath #SoilBath #NaturalBath #CureForSkinDeases
.
.
Comments