இது தெரிந்தால் நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலை வீணாக்க மாட்டீர்கள்…
பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை பயனற்றது என்று நினைத்து நாம் அவற்றை தூக்கி எறிகின்றோம். ஆனால், அறியாமையால் அவ்வாறு செய்கின்றோம். வீணாக தூக்கி வீசப்படும் பழங்கள், காய்கறிகளில் தோல்களைக் கொண்டு நமது உடலின் சரும ம் மற்றும் முடியை பளபளபாக்க முடியும். முதலில் காய்கறிகள், பழங்களின் தோல்களில் உள்ள சத்துகள் என்னென்ன என்பதை பார்த்து விடலாம்
ஆரஞ்சு: ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி உள்ளது இது சருமத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், கருவளையங்கள் மற்றும் வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஏற்றது. இது சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்யவும் உதவுகிறது. ஆரஞ்சு தோல் பொடியை பாலுடன் கலந்து பேஸ்ட் போல செய்து சருமத்தில் தடவும்போது இத்தகைய பலன்களை நீங்கள் பெறலாம்.
எலுமிச்சை: எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது பற்களுக்கு உதவுகிறது. எலுமிச்சையின் தோலை பற்களில் தேய்த்தால் அவை பளிச்சென்று வெண்மையாக இருக்கும். சருமத்தில் பயன்படுத்துவதால் வயதான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எலுமிச்சை குறைந்த pH அளவைக் கொண்டிருப்பதால், அவை சருமத்திற்கு டோனராகவும் செயல்படுகின்றன.
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கின் தோலில் கார்போஹைட்ரேட், வைட்டமின் சி உள்ளது, ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது. உருளைக்கிழங்கு தோல்களும் முடிக்கு நல்லது. உருளைக்கிழங்கு தோலை எடுத்துக் கொண்டு , அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல முடியில் தடவவும். இது முடியை நீளமாக்கும். உருளைக்கிழங்கின் தோலைக் கண்களுக்குக் கீழே தேய்ப்பதால் உடனடியாக வீக்கம் குறையும்.
மாதுளை: மாதுளம்பழத் தோல்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளன, வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. மாதுளை தோலை உலர்த்தி, அதில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பேஸ்ட் போல செய்யவும். இப்போது அதை சருமத்தில் தடவவும். இது கரும்புள்ளிகளை குறைப்பதுடன், சருமத்தை ஈரப்பதமாக்கி பிரகாசமாக வைத்திருக்கும்.
பப்பாளி: பப்பாளியின் தோலில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது. இதில் பப்பைன் என்ற என்சைம் உள்ளது, பப்பாளி தோலை கணுக்கால் மற்றும் பாதங்களில் தேய்த்தால் அவை மிருதுவாகும். பப்பாளி தோலை சிறு துண்டுகளாக நறுக்கி வினிகரில் கலந்து ஒரு பாத்திரத்தில் ஓரிரு மாதங்கள் வைத்திருக்கவும். பப்பாளி கலந்த வினிகர் கரைசலை தோல் பராமரிப்பு பொருட்களுடன் கலந்தும் உபயோகிக்கலாம்.
Comments