தக்காளிக்கு பதில் தக்காளி பொடி மாற்றி யோசித்தால் லாபம் கிடைக்கும்……


 தக்காளி விலை இப்போது கிலோ நூறு ரூபாய். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி கிலோ ஐந்து ரூபாய் விற்பனை ஆனபோது நூறு கிலோ சந்தையில் வாங்கி வந்து இரண்டாக அறுத்து, வெயிலில் காய வைத்தோம். தக்காளி முழுவதும் தண்ணீர் தான். இது நாட்டுத் தக்காளி அல்ல. குண்டுத் தக்காளி தான். சோதனை முயற்சியாக இதைச் செய்தேன். 

Must Read: கருவளையம், தோல் அரிப்பு, படர்தாமரை, முகப்பருவுக்கு தீர்வு தரும் பச்சை மஞ்சள் சாறு…

காய்ந்த பிறகு நான்கு கிலோ வந்துள்ளது. இப்போது நூறு ரூபாய்க்கு விற்கும் போது தேவைப்படும் குழம்புக்கு இதில் ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு சேர்த்தால் போதும். முருங்கை சூப் மிக்ஸ் நூறு கிராம் அளவுக்கு மற்றப் பொருட்களுடன் தக்காளிப் பொடி பத்து கிராம் சேர்த்தேன். 

முருங்கை சூப் மிக்ஸ் ரெசிபி:

சிறுதானியக் கலவை மாவு 80கி

மிளகு 20கி

சீரகம் 20கி

முருங்கை இலைப் பொடி 20கி

தக்காளிப் பொடி 20கி

தக்காளி ஊறுகாய்

தக்காளி ஊறுகாய் விரைவாகக் கெட்டுப் போகிறது என்று சிலர் கூறுகின்றனர். நாம் தயாரிக்கும் தக்காளி ஊறுகாய் ஒரு ஆண்டு ஆனாலும் கெடாது. அந்த அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்க வேண்டும்.  ஆனால் தக்காளிப் பொடி பயன்படுத்தி ஊறுகாய் தயாரித்தால் கெட்டுப் போகாது. ஏனெனில் இதில் நீர்ச்சத்து முழுவதும் நீக்கப் படுவதால் பூஞ்சை வர இயலாது. உங்களின் கற்பனையில் மேலும் ரெசிபிகள் செய்ய முடியும்!

தக்காளிக்கு பதில் தக்காளி பொடி

 

தக்காளி தேவைப்படும் அனைத்து உணவுகளையும் இந்தப் பொடி கொண்டு தயாரிக்கலாம். சமையல் கலைஞர்களின் வேலையும் எளிதாகும்.தக்காளி வெட்டி வதக்கி... அதைவிட இந்தப் பொடியைப் பயன்படுத்தி சமைப்பது எளிது தானே! அனைவரும் நிச்சயம் விரும்புவர். இந்த வைகாசி மாதம் முழுவதும் திருமண நிகழ்வுகள் நிறைய! தக்காளி வாங்கி விருந்து சமைப்பது சாத்தியமா? தக்காளி பயிரிட்ட உழவர்கள் இணைந்து இது போல் மதிப்புக் கூட்டி விற்பனை செய்யலாம். நூறு கிராம் நூறு ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யலாம்.  இவ்வாறு செய்தால் உற்பத்தி மிகுந்து விலை குறைந்த காலங்களில், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச விலை உத்தரவாதம் கிடைக்கும். அதற்கு மேலும் கூடக் கிடைக்க வழி செய்யலாம். எந்த கிராமத்தில் இருந்து கொண்டும் இந்தத் தொழில் செய்யலாம். முகூர்த்தம் மற்றும் சமய விழாக் காலங்களில் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடும்.

Must Read:எளிய மருத்துவம் எல்லோரையும் சென்றடைவதற்கான முயற்சி….

நிறையக் காயவைக்க மின் இயந்திரங்கள் உள்ளன. உழவர்கள் இணைந்தால் அரசின் உதவி கூடப் பெறலாம். ஒவ்வொரு கிராமத்திலும் கதிர் அடிக்கக் களம் உள்ளது போல் காய்கறிகள் மதிப்புக் கூட்ட சோலார் இயந்திரங்கள் கேட்டுப் பெறலாம். நூறு கிலோ சுமந்து செல்வது கடினம். அதையே நான்கு கிலோவாக்கி சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது விற்பனை செய்வது அத்தனை கடினமா? படித்த இளைஞர்கள் குழுவாக இணைந்து விவசாயிகளின் ஆதரவுடன், அவர்களுடன் இணைந்து இதை ஒரு தொழிலாகச் செய்யலாம். ஆலோசனை பெற 9489434551 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் தகவல் அனுப்பலாம். 

-சரோஜா குமார் 

#TomatoPodi  #TomatoPrice  #HowToMarketTomato  #HowToValueAddedTomato


Comments


View More

Leave a Comments