சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி நல்லதா கெட்டதா?
ஒரு நீரிழிவு நோயாளிக்கு நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் அறிந்தால் இன்சுலின் ஊசி ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை விளங்க முடியும்.நீரிழிவு என்பது நோய் என்ற நிலையில் இருந்து அது ஒரு பன்முக காரணிகள் கொண்ட குறைபாடு என்ற நிலையில் வைத்துப்பார்க்கப்படுகிறது.
அதாவது நம் உடல் ஊட்டச்சத்துகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையில் ஏற்படும் குளறுபடி அல்லது குறைபாட்டை நாம் பொதுப்பெயராக "நீரிழிவு" என்று அழைக்கிறோம்
"இன்சுலின்" என்பது நமக்கு மிகவும் தேவையான அத்தியாவசியமான ஹார்மோன் . இந்த ஹார்மோன் பிறப்பில் இருந்தே சிலருக்கு முற்றிலுமாக அல்லது போதுமான அளவு சுரக்காது .இவர்கள் டைப் ஒன்று நீரிழிவு (TYPE I) உள்ளவர்கள் என்று அறியப்படுகிறார்கள்
இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு சுத்தமாக இல்லாததால் நாம் கட்டாயம் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் யார் கூறினாலும் இன்சுலின் ஊசியை டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள் நிறுத்திவிடக்கூடாது.
டைப் டூ நீரிழிவு எப்படி வருகிறது ?
பொதுவாக முப்பது வயது முதல் ஐம்பது வயதிற்குட்பட்ட காலத்தில் தான் அதிகபட்சமான டைப் டூ நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகின்றன. மருத்துவ விஞ்ஞானம் டைப் டூ டயாபடிஸ்க்கு முதல் காரணமாக "ஜீன்கள்" எனும் பிறவிக்குறைபாட்டை குறிக்கிறது. அடுத்த காரணங்களாக அதிக கலோரி உணவு அதிக உடல் எடை குறைந்த உடல் பயிற்சி,அதீத மன அழுத்தம்/உளைச்சல் போன்றவற்றை கூறுகிறது.
டைப் டூ நீரிழிவு நோயாளிக்கு ஏன் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாகின்றன? அவரது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சரிவர ரத்த க்ளூகோஸ் அளவுகளை கிரகிக்க முடியாமல் போவது. இதனால் உணவு சாப்பிட்டபின் ஏறும் சர்க்கரைக்கு ஏற்றாற் போல் இன்சுலின் சுரப்பு இருக்காது.
நமது உடலில் உள்ள அத்தனை செல்களிலும் இன்சுலினை இணங்கண்டு கொள்ள ஏதுவாக Insulin receptor கள் இருக்கும். இவற்றின் அளவுகள் செயல்களில் குறைவதால் கணையத்தால் சுரக்கப்பட்ட இன்சுலின் செல்களில் சரியாக வேலை செய்யாது இதை Insulin resistance என்போம்.
எனவே ஒரு சமயத்தில் இன்சுலினும் குறைவாக சுரந்து , சுரக்கப்பட்ட கொஞ்சூண்டு இன்சுலினும் சரியாக வேலை செய்யாமல் போவதால் ஏற்படுவதே டைப் டூ டயாபடிஸ்
இப்போது இன்சுலின் ஊசி ஏன் பரிந்துரை செய்யப்படுகிறது? என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம். ஒரு சராசரி தமிழருக்கு 40 வயதில் நீரிழிவு கண்டறியப்படுகிறது அவருக்கு பீட்டா செல்கள் நன்றாக வேலை செய்கின்றன. இன்சுலின் சுரப்பு அளவும் நன்றாக இருக்கிறது. ஆனால் சுரக்கப்பட்ட இன்சுலின் மட்டும் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது.
ஆகவே முதலில் இன்சுலினை முறையாக வேலை செய்ய வைக்கும் மாத்திரை மட்டும் தரப்படும்.ஆனால் நம்மவர் அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளை தினமும் சாப்பிடுகிறார். டீயில் சீனியை நிறுத்தவில்லை.ஆகவே சுகர் கண்ட்ரோல் ஆகவில்லை.
காரணம் இப்போது பீட்டா செல்கள் வேலை செய்வதில் சுணக்கம் காட்டுவதால் உணவு சாப்பிட்டவுடனேயே சுரக்க வேண்டிய இன்சுலின் அளவுகள் குறைகின்றன. இதை சரி செய்ய பீட்டா செல்களை தூண்டி இன்சுலினை சுரக்கச்செய்யும் மாத்திரைகள் சேர்க்கப்படுகின்றன. கொஞ்ச காலம் சுகர் கண்ட்ரோல் ஆகிறது.
ஆனால் சில வருடங்கள் கழித்து மீண்டும் ரத்த சர்க்கரை அளவுகள் சரியாக இல்லை.காரணம் இப்போது பீட்டா செல்கள் கிட்டத்தட்ட தங்களது இன்சுலின் சுரப்பை நிறுத்தி விட்டன.பீட்டா செல்கள் முழுவதும் அழிந்தும் போய் விடும் நிலையும் உண்டு.இதை Type 2 ->TYPE 1 என்று அழைக்கிறோம்.
அதாவது டைப் டூ நீரிழிவில் இருந்து டைப் ஒன்று நோயாளியாக மாறிவிட்டார் என்று அர்த்தம் .இப்போது இவருக்கு கணையத்தில் இருந்து இன்சுலினே சுரக்காது.ஆகவே இன்சுலினை வேலை செய்ய வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது. இன்சுலினை சுரக்க வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது.இந்த நிலையில் தான் நம் அருமருந்தான இன்சுலின் ஊசிகள் போடப்படுகின்றன.
இன்சுலின் ஏன் மாத்திரையாக இல்லாமல் ஊசியாக இருக்கிறது?
இன்சுலின் என்பது புரதமாக இருப்பதால் மாத்திரையாக போட்டால் நமது ஜீரண மண்டலம் அதை செரிமானம் செய்து விடும். பலன் இருக்காது. ஆகவே தான் தோலுக்கு அடியில் போடும் ஊசியாக இன்சுலின் கிடைக்கிறது.
ஆகவே, இன்சுலின் ஒருவருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்றால் இனிமேல் அவருக்கு உடலில் சுரக்க இன்சுலின் இல்லை என்று அர்த்தம். மாவுச்சத்து அதிகமாக உண்டதால் நீரிழிவு வந்தது. உடனே மாவுச்சத்தை குறைக்கவில்லை. மாறாக அதிக மாவுச்சத்து உண்ணும் பழக்கத்திலேயே இருந்தோம். நாளாக நாளாக மாத்திரைகள் வேலை செய்யாமல் இன்சுலின் தேவைப்படும் சூழலுக்கு ஆளாகிறோம்
இதுவன்றியும் சில அசாதாரண சூழ்நிலைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படும்.அவை
1. கடும் நோய் தொற்று
2. விபத்தில் மோசமான காயம்
3. அறுவை சிகிச்சை
4. ஸ்டிராய்டு மருந்து உபயோகிக்கும் போது
5. கர்ப்பிணிகள்
மேற்சொன்ன இடங்களில் நீரிழிவு மாத்திரைகளுடனோ அல்லது தனியாகவோ இன்சுலின் ஊசி உபயோகிக்கப்படும். மேற்சொன்ன இடங்கள் அனைத்திலும் நம் உடலால் முறையாக இன்சுலின் சுரந்து சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க இயலாது அல்லது உடல் கட்டுமானப் பணிகளை சரி வர செய்ய இயலாது. எனவே இன்சுலின் கட்டாயம் தேவைப்படுகிறது
ஒருமுறை போட ஆரம்பித்த இன்சுலின் ஊசியை டைப் டூ டயாபடிஸ் நோயாளி வாழ்நாள் முழுவதும் நிறுத்த முடியாதா. இன்சுலின் உங்களுக்கு எதனால் பரிந்துரை செய்யப்பட்டது என்பதை அறிந்துமா இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை. நீங்கள் உங்கள் உணவில் மாவுச்சத்தின் அளவை தினமும் 40 கிராமிற்கு உள்ளாக குறைத்தால் உங்கள் கணையம் சுரக்கும் குறைந்த இன்சுலினே போதுமானதாக இருக்கும் நிலை ஏற்படலாம்.
சில நேரங்களில் முற்றிலும் பீட்டா செல்கள் இறந்து விட்டிருந்தால், ஏற்கனவே போடப்பட்டு வந்த இன்சுலின் அளவுகளை விடவும் குறைந்த அளவே போதும் என்ற நிலை வரலாம். எனது அனுபவத்தில் பல டைப் டூ நீரிழிவு நோயாளிகள், குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மாறி இன்சுலினை நிறுத்தி மாத்திரைகளுக்கு மாறிய கதைகளை கண்டுள்ளேன்.
பலருக்கு பேலியோ உணவு முறைக்கு மாறியும் கூட இன்சுலின் தொடர்ந்து தேவைப்படுகிறது அதையும் காண்கிறோம். தேவைக்கு ஏற்ப இன்சுலின் வழங்கப்படும். குறைக்கப்படும். நிறுத்தப்படும் அந்த முடிவை மருத்துவரிடம் விட்டு விடுங்கள் இன்சுலின் ஊசி நல்லதா ? கெட்டதா ? என்ற கேள்விக்கான பதில் நிச்சயம் அது நன்மை செய்வது தான்.
அதிக மாவுச்சத்து அதனால் டைப் டூ நீரிழிவை பெற்று இன்சுலின் சுரக்காத நிலைக்கு சென்ற மக்களுக்கும் , பிறவி குறைபாடாக டைப் ஒன்று நீரிழிவை பெற்ற மக்களுக்கும் நிச்சயம் இன்சுலின் நிச்சயம் அமிர்தம் தான். இன்சுலினால் தினமும் பல கோடி உயிர்கள் காக்கப்படுகின்றன.
-Dr.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை
Comments