கொரோனாவில் இருந்து விடுபட மூலிகை கசாயங்கள்


ஆண்டுதோறும் மார்கழி மற்றும் தை மாதங்களில் பொதுவாக பனிப்பொழிவு இருக்கும். குளிர்ச்சியான சூழல் காரணமாக மூக்கடைப்பில் தொடங்கி சளித்தொந்தரவுகள் வருவது இயல்பே. ஆனாலும், இன்றைக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுவதால் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். அறிவியலாளர்கள், மருத்துவத்துறை சார்பில் சொல்லப்படும் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும்.

மூலிகை கசாயங்கள்

முகநூல் வழியாகவும், செவிவழி செய்தியாகவும் சில நட்புகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிந்தேன். மேலும் பலருக்கு சளி, ஜலதோஷம், காய்ச்சல் இருப்பதை அறிந்து என்னால் முடிந்த ஆலோசனை கூறி வருகிறேன்.

Must Read: திருப்பத்தூர் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மீண்டும் தொடங்குகிறது

சாதாரண காய்ச்சலோ, கொரோனா காய்ச்சலோ எதுவாக இருந்தாலும் பயப்படத் தேவையில்லை. காலங்காலமாக நம் முன்னோர் எடுத்துவந்த மூலிகைக் கசாயங்கள், மூலிகைத் தேநீர், பூண்டுப்பால், நொச்சி - வேப்பிலை ஆவி (வேது) பிடித்தல், நொச்சி - யூகலிப்டஸ் - மஞ்சணத்தி (நுணா) இலைக்குளியல் மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகள் என பின்பற்றுவதன்மூலம் அவற்றிலிருந்து விடுபட்டுவிடலாம்.

மிளகு கசாயம் செய்வது எப்படி?

அண்மையில் வெளியூர் பயணம் மேற்கொண்டதால் அலைச்சலால் உடல்வலி ஏற்பட்டு காய்ச்சல் வந்தது. மிளகு கசாயம் குடித்ததால் மாலையில் வந்த காய்ச்சலில் இருந்து இரவுக்குள் நிவாரணம் பெற்றேன்.10 மிளகை எண்ணெய் விடாமல் வறுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து நன்றாக வற்ற வைத்து வடிகட்டினால் கிடைப்பதே மிளகு கசாயம். 

காய்ச்சலுக்கு மிகளகு கசாயம் தீர்வு தரும்

இதை அடுத்தமுறையும் நீர் விட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். மூன்றாவதாக புதிதாக 10 மிளகு எடுத்து வறுத்து கசாயம் செய்து குடிக்க வேண்டும். இப்படி காலை, மதியம், மாலை, இரவு என்று குடித்தாலே காய்ச்சல் சரியாகும். 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் உண்ணலாம் என்றொரு பழமொழி உண்டு. நாம் 10 மிளகைக்கொண்டு உயிர்க்கொல்லி நோய் போல பயத்தை ஏற்படுத்தும் கொரோனாவிலிருந்து விடுதலை பெறலாம்.

சளி தொல்லையா பூண்டு பால் சிறந்தது

இரவில் பூண்டுப்பால் குடித்ததில் சளித்தொல்லையிலிருந்து நிவாரணம் பெற்றேன். பூண்டுப் பற்கள் 10 எண்ணிக்கை எடுத்து 50 மில்லி பால், 50 மில்லி நீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பாதி வெந்ததும் இரண்டு சிட்டிகை மிளகுத் தூள், இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிடவும். நான்கில் ஒரு பங்காக வற்றியதும் அதனுடன் பனங்கல்கண்டு சேர்த்து நன்றாகக் கடைந்து குடிக்கவேண்டும்.

மூக்கடைப்பு தீர பூண்டு பால் அருந்துவது நல்லது

பூண்டுப்பாலினை இரவு உணவுக்குப் பிறகு செய்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் வரும். மூக்கடைப்பு நீங்கி சுவாசம் சுத்தமாகும், இருமல் விலகி சளி கரையும் என்பதால் நிம்மதியான தூக்கம் வரும்.  

நொச்சி தலையணை 

இதேபோல் தலையணையில் நொச்சி இலைகளை வைத்துக்கொண்டு தூங்கினால் தலைபாரம் நீங்குவதுடன் சுவாசம் சீராகும். வீட்டில் மூலிகைத் தலையணை இருப்பதால் அதை வைத்து தூங்குவதால் நல்ல நிவாரணம் கிடைக்கிறது. கூடவே, ஓமத்தை லேசாக வறுத்து பொடியாக்கி ஒரு துணியில் கட்டி முகர்ந்து பார்த்ததில் மூக்கடைப்பு விலகி வருகிறது.

Must Read: சிறுநீரக கற்களைக் கரைக்கும் குடசப்பாலை

இதே வைத்தியங்களை உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் சொல்லி குணம்பெற்று வருகின்றனர். விளையாட்டா ஒண்ணு சொல்வாங்க... மூக்குன்னு இருந்தா சளி இருக்கத்தான் செய்யும்னு சொல்வாங்க. அதுமாதிரி  எல்லா பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். அதை எதிர்கொள்வதன்மூலம் நம்மை காத்துக்கொள்ளலாம். ஊரெங்கும் சளி, ஜலதோஷம் இருந்தாலும் நமக்கு தெரிந்தவர்களுக்கு, நம்மிடம் கேட்பவர்களுக்கு சொல்லி வருகிறோம், நலம் பெறுகின்றனர்.

-எம்.மரியபெல்சின்(திரு.பெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்)

#MooligaiKasayam  #MilaguKasayam  #PoonduMilk  #PattiVaithiyam  


Comments


View More

Leave a Comments