பொதிகைச் சோலையில் திணையியல் படிப்புத் தொடங்கியது…


பங்குனி மாதம் 16ஆம் நாள் (30.03,2022) 60 நாள் பண்ணை படிப்பு காலை தொடங்கியது. நீண்ட நாள் முயற்சிக்குப் பின்னர் இது நடைபெற்றுள்ளது. நாம் எதிர்பார்த்ததைவிட மாணவர்களின் எண்ணிக்கை அதிமாகவே ஆகிவிட்டது. குறிப்பாக பெண் மாணவர்கள் பாதியளவாக இருப்பது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. திணை பற்றிய ஆர்வமும், வேளாண்மையின் மீதான பற்றும் பெண்களிடம் அதிகரித்துள்ளததைக் காண முடிகிறது. பெரும்பாலானோர் உயர்கல்வி பெற்றவர்களாகவும் உள்ளனர்.

பயிற்சி மண்டபத்தை அலங்கரிக்கும் பணியை மாணாக்கர்களே செய்தனர். அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டே அலங்காரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்போதுதான் நமது படைப்பாற்றல் வெளிப்படும் என்ற நோக்கில் முடிவு செய்யப்பட்டது. மாவிலைகள், செண்டுப் பூக்கள் இன்னும் அங்குள்ள இலைகள், மலர்களைக் கொண்டு அலங்காரத் தோரணங்கள் செய்யப்பட்டன. முனைவர் நடராசன் ஐயா விளக்கேற்றி, படிப்பைத் தொடங்கிவைத்தார்.

பொதிகை சோலையில் வேளாண்மை பயிற்சி

 

வரிசையாக பெண் மாணவர்கள் விளக்கேற்றினார்கள். அனைவருக்கும் புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் இயற்கைச் சாயம் இயற்கைப் பருத்தியில் தயாரிக்கப்பட்ட, 'துகில்' கைக்குட்டை முதலியவை தோள்பையில் (ஜோல்னா) பையில் வழங்கப்பட்டன. அனைவரது அறிமுகமும் நடைபெற்றது. தன்னார்வலாக அனைத்து மாணவர்களும் பொறுப்புகளை எடுத்துக் கொண்டார்கள். அவர்களது அறிவு வேட்கை நன்றாகத் தெரிந்தது. குழுக்கள் பிரிக்கப்பட்டன. சமையல், காணொளிப் பதிவு, தூய்மைப் பணி என்று ஒவ்வொரு பணிக்கும் தங்களைப் பிரித்துக் கொண்டனர்.

Must Read:புற்றுநோய் செல்களை அழிக்க வேப்பம் பூ சாப்பிடலாம்…

பழங்குடி வேளாண்மை முதல் மரபீனி மாற்ற (ஜெனிடிக் இன்ஞினிரியங்) பொறியியல் வேளாண்மைவரை கேள்விகள் கேட்கப்பட்டன. முதற்கட்ட கலந்துரையாடல் வகுப்புகள் நிறைவுக்குப் பின்னர், பண்ணைப் பார்வையிடல் நடைபெற்றது. காலையில் ஆவரம்பூ தேனீர், இட்லி உணவு என்று தொடங்கப்பட்டது. நண்பகல் பொதிகையில் விளைந்த காய்கறிகளைக் கொண்ட சாம்பார் பரிமாறப்பட்டது. பிற்பகல் தேன், எலுமிச்சை கலந்த வாழைப்பழக் கலவை அனைவருக்கும் பரிமாறப்பட்டது. பின் மாலைப் பொழுதில் இசையும், பாட்டும் தொடங்கலாம் என்று கலைஞர்கள் பாதி வழி வந்துவிட்டார்கள். ஆனால் மழை வந்து எங்களுக்கு அந்த வாய்ப்பைத் தடுத்துவிட்டது.

பொதிகையில் இரண்டாம் நாள் 

நமது பண்ணையப் படிப்பில் அரங்கக்கல்வி (தியரி) வடிவம் மிகக் குறைவாக அதாவது 25 விழுக்காடும், களக்கல்வி (பிராக்டிக்கல்) வடிவம் 75 விழுக்காடும் இருக்கும்படியாக பாடத்திட்டம் (சிலபஸ்) வடிவமைக்கப்ட்டது. அதன்படி மாணவர்கள் காலையில் எழுந்து ஆவரம்பூ தேனீர், கூழ் முதலிய உணவுகளை எடுத்துக் கொண்டு, களை எடுக்கவும், காய் பறிக்கவும், தெளிப்புச் செய்யவும் கிளம்பிவிட்டார்கள். 10 மணியளவில் காலைச் சிற்றுண்டி முடித்து 11 மணிக்கு அரங்கத்தில் அமர்ந்தார்கள். மிக உயரமாகவும் கல்தூண்களால் நிறுவப்பட்டு, ஓடுகளால் நிரப்பப்பட்டுள்ள அரங்கம் அவர்களுக்கு கடும் வெயில் நேரத்திலும் வெப்பத்தைத் தாங்குவதாக இருந்தது. கல்தூண்களில் செதுக்கப்பட்ட மணிமேகலை, பாரி, பேகன், ஐம்பூத வடிவங்கள், குறிஞ்சி, முல்லை முதலிய வடிவங்களைப் பற்றி சில மாணவர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

Must Read:தேரிக்காட்டு முந்திரி, மலைமட்டி பாரம்பர்யத்துடன் இயற்கை விளை பொருட்கள்…

பல்வேறு வகையான இயற்கை வேளாண்மைக் கோட்பாடுகள் விளக்கப்பட்டன. இயற்கை வேளாண்மைக்கும் ரசாயன வேளாண்மைக்கும் உள்ள வேறுபாடுகளை எவ்வாறு அறிவியல் முறையில் புரிந்து கொள்வது பற்றி விளக்கப்பட்டது. ஆல்பர்ட் ஹோவார்டு எப்படி இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு மட்கு செய்யும் முறையைக் கொண்டு சென்றார் என்றும், அதன் பின்னர் ருடால்ஃப் ஸ்டெய்னர் எப்படி உயிரித்துனைமப் பண்ணையம் (பயோடைனமிக் பண்ணையம்) என்ற முறையை 1920களில் உருவாக்கினார் என்றும் அவரும் அவரது சீடர்களும் உருவாக்கிய வேளாண்மைப் பஞ்சாங்கம் பற்றியும் தமிழ்ப் பஞ்சாங்கம் (ஐந்திரம்) பற்றியும் சுருக்கமாக விளக்கப்பட்டது.

பொதிகை சோலையில் வேளாண்மை பயிற்சி

 

மசானபு மகாகோவின் கோட்பாடுகள், உழவில்லா வேளாண்மையில் உள்ள சிக்கல்கள் போன்றவையும், பில்மொலிசன் அவர்களின் பெர்மாசல்சர் பண்ணைய முறையும் பேசப்பட்டது. அதன் பின்னர் தபோல்கர் அவர்களின் இயற்கைத்திணை சாகுபடி (நேச்சுரல் ஈகோ கல்சர்) என்ற வேளாண்மை முறை விளக்கப்பட்டது. அந்த அறிஞர்கள் எழுதிய நூல்களின் இணைய வழி இணைப்புகள் பரிமாறப்பட்டன.

அதன் பின்னர் கோட்பாடுகளை குறிப்பாக வரையறுக்காமல் இயற்கை வேளாண்மை நுட்பங்களைக் கண்டறிந்து கூறிய அறிஞர்கள் பற்றியும் பேசப்பட்டது, தமிழகத்தில் ஐயா நம்மாழ்வார், ஐயா நாராணரெட்டி, ஐயா வெங்கடாசலம், ஐயா சுந்தரராமன், கொடுமுடி நடராசன், சுபாஷ் பாலேகர் முதலியோர் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் குறிப்பாக அமுதக் கரைசல், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் போன்றவை பற்றியும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

அடுத்ததாக தொல்காப்பியம் விளக்கும் திணையியல் பற்றியும் அது பண்ணையத்தின் கோட்பாடுகளாக எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றியும், அதன் இன்றைய பொருத்தப்பாடு பற்றியும் விளக்கப்பட்டது. நண்பகல் உணவுக்குப் பின்னர் பிற்பகல் அமர்வாக நேற்றைய பாடத்திட்டத்தில் விட்டுப்போன தலைப்புகள் பேசப்பட்டன. அதன் பின்னர் கரும்பு ஆய்வு வல்லுநரும், ஐ.நா. மேம்பாட்டுத் திட்டத்தின் கரும்பு ஆராய்ச்சியாருமாகிய நடராசன் அவர்கள் மாணவர்களுக்குக் களத்தில் கரும்பு நடுவதன் நுட்பங்கள் பற்றி விளக்கினார். குறிப்பாக ஒரு பரு நடவு முறையை விளக்கினார்.

மகிழ்மாலைப் பொழுது நிகழ்வாக சங்கர்ராம் குழுவினரின் நல்லிசை நிகழ்வு நடந்தது. வையம்பட்டி முத்துச்சாமி, கவிஞர்கள் பிரளயன், ஏகாதசி போன்றவர்களின் பாடல்களை பாடி மாணவர்களையும் பாட வைத்து அசத்தினார்கள்.இரவு உணவாக ஒவ்வொரு நாளும் ஒரு தோசை என்ற முறையில் இரண்டாம் நாள்  இரவு அனைவருக்கும் முடக்கத்தான்கீரை தோசை பறிமாறப்பட்டது.

கட்டுரை, படங்கள் நன்றி; திரு.பாமயன் முகநூல் பதிவு 

#AgriFieldTraining  #AgriTraining #TrainingWithPamayan  #AgriculturistPamayan #PodhigaiCholai 


Comments


View More

Leave a Comments