2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8500 பேருக்கு கருப்பைவாய் புற்றுநோய்..
கருப்பைவாய் புற்றுநோய்..
கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறிகள்
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பாதிப்பு
தடுப்பூசி, சிகிச்சை முறைகள்
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், 2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8,534 பேருக்கு தோராயமாக கருப்பைவாய் புற்றுநோய் இருப்பது உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், வாய்ப்புற்று நோய் ஆகியவை இருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என்ற இயக்கத்தின் ்கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி தமிழ்நாட்டில் தோராயமாக 36,014 பேருக்கு கருப்பைவாய் புற்றுநோய் பரவல் என்று கண்டறியப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் இந்த பரவல் 45682 பேர், மகாராஷ்டிராவில் 30,414 பேர், மேற்கு வங்கத்தில் 25,822 பேருக்கு என கருப்பைவாய் புற்று நோய் பரவலாக இருப்பதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவலில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கேன்சர் பதிவு திட்டத்தின் கீழ் மக்கள் தொகை அடிப்படையிலான கேன்சர் பதிவில் சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு 14.8 பேருக்கு கருப்பைவாய் புற்றுநோய் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து சென்னை அடையாறு கேன்சர் மையத்தை சேர்ந்த அசோசியேட் பேராசிரியர் ஜெயஸ்ரீநடராஜன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 35 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட பெண்களிடம் இரண்டாவது மிக அதிக புற்றுநோய் அறிகுறிகளில் ஒன்றாக கருப்பைவாய் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
கருப்பைவாய் புற்றுநோயை முன்கூட்டியே தடுக்க முடியும் என்றும், முன்கூட்டியே பரிசோதனைகளில் கண்டுபிடிப்பதன் மூலம் இதனை தடுக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கருப்பைவாய் புற்றுநோய்க்கு மூலகாரணமாக உள்ள பாப்பிலோமா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த நோயை மூன்கூட்டியே கட்டுப்படுத்தலாம் என்று ஜெயஸ்ரீநடராஜன் கூறுகிறார்.
Must Read: புற்றுநோய் குறித்த 15 முக்கிய கேள்விகளும், பதில்களும்…
15 வயதுக்கு முன்பு சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் 90 சதவிகித பெண்களை கருப்பைவாய் புற்றுநோயில் இருந்து பாதுகாக்க முடியும் என்று உலகசுகாதார நிறுவனம் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
விகடன் இணையதளத்துக்கு சென்னையில் உள்ள பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நந்தினி அளித்துள்ள பேட்டியில், புற்றுநோய் பாதிப்புகளில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 4வது இடத்தில் இருக்கிறது. கர்ப்பப்பை புற்றுநோய் (uterus cancer) வேறு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வேறு. கர்ப்பப்பை வாயின் உள் அடுக்கும், வெளி அடுக்கும் சந்திக்கும் இடத்தை Transformation zone என்று குறிப்பிடுகிறோம். அப்பகுதியில் ஏற்படும் வைரஸ் தொற்றின் விளைவாகத்தான் இப்புற்றுநோய் ஏற்படுகிறது. Human papillomavirus (hpv) என்கிற பால்வினைத் தொற்றுதான் இப்புற்றுநோய்க்கு மூல காரணியாக இருக்கிறது. 150 விதமான Human papillomavirus இருக்கின்றன. அவற்றுள் Hpv 14 மற்றும் Hpv 18 ஆகிய வைரஸ்கள்தான் இப்புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
இந்த இரு வகையான வைரஸ்களில் மட்டும் அவற்றைச் சுற்றித் தடுப்புச்சுவர் இருக்காது. இதன் காரணமாக அவை எளிதாக கர்ப்பப்பை வாயில் தொற்றிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. பாலியல் செயல்பாட்டின் தொடர்ச்சியாகவே இத்தொற்று ஏற்பட்டு அது 10 - 15 ஆண்டுகளில் புற்றுநோயாக மாறுகிறது.
எனவேதான், 40 வயதைக் கடந்த பெண்களே அதிக அளவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பிரசவிப்பவர்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான சாத்தியங்கள் அதிக அளவில் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறவர்களுக்கும் இப்புற்றுநோய்க்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Human papillomavirus தொற்றுக்கு ஆளான பிறகு, பிறப்புறுப்பின் உட்பகுதியில் மரு ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் மரு அல்லது கொப்புளங்களை சாதாரணமாக எண்ணிவிடாமல் உடனே அதற்கான சிகிச்சையில் இறங்க வேண்டும். முறை தவறிய மாதவிடாய் (Irregular periods), உடலுறவுக்குப் பிறகு பிறப்பிறுப்பிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படுதல் ஆகியவையும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
அதே போல், மெனோபாஸ் வந்த பிறகும் உதிரப்போக்கு இருக்கிறதென்றால் உடனடியாக பரிசோதிக்க வேண்டும். வெள்ளைப்படுதலை பெரும்பாலான பெண்கள் பொருட்படுத்துவதில்லை. அதிகப்படியான வெள்ளைப்படுதலும் இப்புற்றுநோய்க்கான அறிகுறி என்பதால் அதை உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும். புற்றுநோய்களிலேயே கண்ணால் பார்த்துக் கண்டறியக்கூடிய புற்றுநோய் இதுதான்.
Must Read: வெரிகோஸ் வெயின் குறித்த பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கம்…
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு மூலகாரணியாக இருக்கும் Human papillomavirus தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இருக்கிறது. ஆண் - பெண் இருபாலினருக்குமே இத்தடுப்பூசி செலுத்தப் படுகிறது. 3 டோஸ்களாக இத்தடுப்பூசியை எடுத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பொறுத்தவரை முதல் இரு நிலைகளில் இருக்கும்போது கண்டறிந்துவிட்டால் கர்ப்பப்பை வாயில் மட்டுமே புற்றுநோய் பரவியிருக்கும் என்பதால் கர்ப்பப்பையை நீக்கிவிடலாம். பெரும்பாலும் 40 வயதுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால் கர்ப்பப்பை தேவைப்படாது. மிகவும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் கதிர்வீச்சின் மூலம் புற்றுநோய் செல்களை மட்டும் அழித்துவிடலாம் " என்கிறார் நந்தினி.
இப்புற்றுநோயைக் கண்டறியும் பாப் ஸ்மியர் பரிசோதனை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.
தொகுப்பு; ஆரோக்கியசுவை ஆசிரியர் குழு
#WorldCancerDay2024 #cervicalcancer #cancertreatment
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments