நாய் மட்டுமல்ல, பூனை கடித்தாலும் ரேபிஸ் தடுப்பூசி அவசியம்…
ரேபிஸ் உயிர்க்கொல்லி நோய்
ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்
பூனை கடித்தாலும் தடுப்பூசி கட்டாயம்
இந்தியாவைப் பொருத்தவரை ரேபிஸ் எனும் உயிர்க்கொல்லி நோயை உண்டாக்கும் ரேபிஸ் வைரஸ் நாய் மூலமாகவே பெரும்பான்மையானோருக்கு ஏற்படுகிறது. ரேபிஸ் வைரஸ் தொற்றைப் பரப்ப வல்ல ஏனைய உயிரினங்கள் பூனை, குரங்கு ,ஆடு, மாடு, எருமை , செம்மறி , பன்றி , குதிரை, ஒட்டகம் , கழுதை போன்ற கால்நடை விலங்குகள். கீரிப்பிள்ள குள்ளநரி ,நரி, ஓநாய், கரடி புள்ளி மான் அணில் ஆகிய காட்டு விலங்களும் ரேபிஸ் வைரஸை பரப்பக் கூடியவை.
நாயின் நகத்தால் கீறப்பட்டாலும் ஆபத்து
இந்தியாவில் வெளவ்வால் ,எலி , சுண்டெலி, முயல் போன்ற கொரித்து உண்ணும் விலங்குகள் கோழி , கிளி போன்ற பறவைகள் இதுவரை ரேபிஸ் தொற்றை உண்டாக்காத உயிரினங்களாகும்.
மேற்கூறியவைகளில் நமது வீட்டுப் புறங்களில் நிகழும் வவ்வால் மற்றும் எலி கடிகளுக்கு பொதுவாக ரேபிஸ் தடுப்பூசி தேவையில்லை ( எனினும் டிடி ( டெடானஸ்) தடுப்பூசி போடப்பட வேண்டும்) ஆயினும் வனப் பகுதிகளில் அசாதாரண சூழ்நிலைகளில் வவ்வாலோ எலியோ கடித்தால் ரேபிஸ் தடுப்பூசி பெற வேண்டும்.
Must Read: காய்ச்சலிலின் போது கடைபிடிக்க வேண்டிய உணவு முறை…
இந்தியாவில் வவ்வால்கள் மூலம் ரேபிஸ் பரவுவது இதுவரை கண்டறியப் படவில்லை ஆனால் அமெரிக்காவில் வவ்வால்களால் ரேபிஸ் பரவுவது நிரூபணமாகியுள்ளது. எனவே நான் கூறியுள்ள இந்த பதிவு இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும்.
நாய் மற்றும் இதர ரேபிஸ் பரப்பும் விலங்குகள் கடித்து வைத்தாலும் சரி நமக்கு ஏற்பட்ட காயங்களில் நக்கி வைத்தாலும் சரி விலங்கின் எச்சில் உள்ளிட்ட உடல் திரவங்கள் மனிதர்களின் வாய்ப்பகுதி / கண் போன்றவற்றில் பட்டாலும் சரி விலங்கின் நகத்தை வைத்து கீறியதில் ரத்தக் காயம் ஏற்பட்டிருந்தாலும் கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும்
ரேபிஸ் பரப்பும் விலங்குகளிடம் கடி பட்ட 24 மணிநேரத்துக்குள் முதல் டோஸ் ரேபிஸ் தடுப்பூசி பெற்றால் போதுமானது. உதாரணம் இன்று மதியம் அல்லது மாலை / இரவு நாய் கடிக்கிறது என்றால் நாளை காலை முதல் மதியத்துக்குள் தடுப்பூசி பெற்றால் போதுமானது.
செல்ல நாய்க்கு / வீட்டுப் பூனைக்கும் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டுமா?
ஆம்.. குட்டி பிறந்த மூன்றாவது மாதம் முதல் ஊசியும் பிறகு வருடம் ஒருமுறையும் ஊசி போட வேண்டும்
ஊசி போடப்பட்ட செல்ல நாய் / பூனை கடித்தாலோ நகங்களால் பிராண்டி விட்டால் ரேபிஸ் வருமா?
பொதுவாக ஒழுங்காக சரியான இடைவெளியில் தடுப்பூசி போடப்படும் செல்ல நாய்/ பூனையிடம் ரேபிஸ் தொற்று இருப்பதற்கான வாய்ப்பு குறைவு எனினும் ஆய்வுகளில் ரேபிஸ் தடுப்பூசி முறையாக செலுத்தப்பட்ட நாய் / இதர விலங்குகளிலும் 4.9% ரேபிஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே செல்ல நாய் / செல்ல பூனை கடித்தாலும் பிராண்டி விட்டாலும் ரேபிஸ் தொற்று மனிதர்களுக்கு ஏற்படாமல் இருக்க ரேபிஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்வது பாதுகாப்பானது.ரேபிஸ் தடுப்பூசியை முதல் நாள் ,மூன்றாவது நாள் ,ஏழாவது நாள் 28வது நாள் போடப்பட வேண்டும்.
ஒருமுறை இது போன்று நான்கு நாட்களில் தடுப்பூசிகளை பெற்றவர்களை நாய்/ பூனை இதர விலங்குகள் மீண்டும் கடிக்கும் தருணத்தில் என்ன செய்ய வேண்டும்?
மேற்சொன்ன நான்கு தவணை நான்கு நாட்கள் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் கடிபட்டால் தடுப்பூசி தேவையில்லை. மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தால் முதல் நாள் மற்றும் மூன்றாவது நாள் தடுப்பூசி மட்டும் போட வேண்டும்.
முன்கூட்டியே தடுப்பூசி போட வேண்டியவர்கள்
இவர்களன்றி ரேபிஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஆய்வகங்களில் பணிபுரிவோர், விலங்குகள் நல மருத்துவர்கள், விலங்குகளை கையாள்பவர்கள், நாய்களுக்கு உணவு அளிப்பவர்கள், நாய்களைப் பிடிப்பவர்கள், நாய் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுபவர்கள், வன அதிகாரிகள் போன்றோர்முன்கூட்டியே ரேபிஸ்க்கு எதிரான தடுப்பூசிகளை முன்கூட்டிய பெற்றுக் கொள்ள வேண்டும். இதை PRE EXPOSURE PROPHYLAXIS என்கிறோம்
முதல் நாள் மூன்றாவது நாள் 21வது நாள் அல்லது 28வது நாள் பெற்றுக் கொள்ள வேண்டும் இவர்கள் தங்களின் ரத்தத்தில் ரேபிஸ்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி (ANTIBODY TITRE) ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சோதித்து வர வேண்டும்.
எப்போது இந்த எதிர்ப்பு சக்தி 0.5 IU/ml க்கு கீழ் குறைகிறதோ அப்போது மட்டும் ஒரு பூஸ்டர் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஆண்ட்டிபாடி பரிசோதனை செய்யப்பட வேண்டும். எப்போது எதிர்ப்பு சக்தி 0.5 IU/ml க்கு கீழ் குறைந்தாலும் ஒரு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
உணவு பத்தியம் தேவையில்லை
இவ்வாறு ரேபிஸ் முன்கூட்டிய தடுப்பூசிகளை போட்டுக் கொண்டாலும் நாய்க்கடி / விலங்குகளிடம் கடிபட்டால் முதல் நாள் மற்றும் மூன்றாவது நாள் ரேபிஸ் தடுப்பூசி மட்டும் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். ரேபிஸ் தடுப்பூசி போடும் நாட்களில் உணவுப் பத்தியம் ஏதுமில்லை.
மாமிசம் உள்ளிட்ட அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது போன்ற மூட நம்பிக்கைகள் உள்ளன. உண்ணும் உணவுக்கும் நாய்க்கடிக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை. ரத்த தானம் வழங்குபவர்கள் கடைசி நாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி பெற்றதில் இருந்து ஒரு வருட காலம் ரத்த தானம் வழங்குதல் கூடாது. ஒரு வருடம் முடிந்த பின் ரத்த தானம் வழங்கலாம்.
Must Read: வெரிகோஸ் வெயின் குறித்த பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கம்…
இறுதியாக நாய் ; பூனை போன்ற விலங்குகள் கடித்தாலும் சரி பிராண்டி வைத்தாலும் சரி ரத்த காயம் ஏற்பட்டு விட்டால் அல்லது ஆறாத புண்ணில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் விலங்கு நக்கி வைத்து விட்டாலும் இது மூன்றாம் வகை - காயம் என்று கருதப்பட்டு கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் வழங்கப்பட வேண்டும்.
குட்டி கடித்தாலும் தடுப்பூசி போடுங்கள்
பலரும் குட்டி நாய் குட்டி பூனை கடித்தால் ரேபிஸ் வராது என நினைக்கிறார்கள் கடியைப் பொருத்தவரை குட்டி நாய் பெரிய நாய் குட்டி பூனை பெரிய பூனை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. குட்டி நாய், பூனை கடித்தாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.
நாயோ ஏனைய ரேபிஸ் பரப்பும் விலங்குகளோ கடித்தோ கீறியோ விட்டால் உடனடியாக அந்த காயத்தை பதினைந்து நிமிடங்கள் நன்றாக சோப் போட்டுக் கழுவி விட்டு மருத்துவமனை நோக்கி விரைந்திட வேண்டும்
ரேபிஸ் 100% உயிர்க்கொல்லி நோய் ஆதலால் சரியான நேரத்தில் தடுப்பூசி / இம்யூனோகுளோபுளின் ஊசி பெறுவது உயிர்காக்கும் செயலாகும் இது குறித்த விழிப்புணர்வை பரப்புவோம்
-Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா ,பொது நல மருத்துவர் ,சிவகங்கை
#rabiesvaccine #rabies #rabiessymptoms #rabiessindogs
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments