மதுரை மாநகர் முழுக்க உணவளிக்கும் மீனாட்சி
உலகப் புகழ்பெற்ற மீனாட்சி திருக்கல்யாணம் மிக,மிக எளிய முறையில் மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வர ர் திருக்கோயில் வளாகத்திலேயே மிகவும் எளிய முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.
கோரோனாவால் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. அதே போல மீனாட்சியம்மன் தேர் உலாவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் மிகவும், எளிய முறையில் கோவில் வளாகத்திலேய இன்று காலை நடைபெற்றது. மீனாட்சியம்மன் கோவில் இணையதளத்தில் நேரலை செய்யப்பட்ட திருக்கல்யாணத்தை உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான மீனாட்சி பக்தர்கள் கண்டு ரசித்தனர். இணையதளத்தில் நடைபெற்ற நேரலையை தமிழ் தொலைகாட்சிகளும் ஒளிபரப்பு செய்தன. நேரில் சென்று பார்க்காத குறையை தமிழ் தொலைகாட்சிகள் தீர்த்து வைத்தன.
மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற அதே தருணத்தில் உலகம் முழுவதும் உள்ள இந்தியப் பெண்கள் பலர் தங்கள் தாலிசரடை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
திருக்கல்யாணத்தை இன்னொரு விஷேஷம், இன்றைக்கு மதுரையில் திருக்கல்யாணத்தை காணவரும் லட்சகணக்கானோருக்கு விருந்து படைப்பதுதான். ஆனால், இந்த முறை கொரோனா அபாயத்தால் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கல்யாண விருந்து நடைபெற வில்லை. அதே நேரத்தில் மதுரையில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் இன்றைக்கு வடை, பாயத்துடன் விருந்து நடைபெற்றது. மக்கள் வீடுகளில் விருந்து சமைத்து தங்கள் பூஜை அறையில் உள்ள மீனாட்சி படத்துக்கு படையல் இட்டு, வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விருந்து உண்டு வருகின்றனர்.
ஆண்டு தோறும் மீனாட்சி திருக்கல்யாணத்தன்று மதுரையில் பழமுதிர்ச்சோலை திருமுருக பக்த சபை அமைப்பின் சார்பில் லட்சகணக்கானோருக்கு திருமண விருந்து வழங்கப்படும். இந்த ஆண்டு அதற்கு பதில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்த அமைப்பின் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் தோறும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
இது குறித்து பழமுதிர்ச்சோலை திருமுருக பக்த சபை அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி சாமுண்டி விவேகானந்தன் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில்,
“எங்க அமைப்பின் சார்பாக முப்பது வருஷமா மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறப்ப அன்னதானம் வழங்கி வருகின்றோம். இந்தத் தடவை கொரோனா பாதிப்பு காரணமாக திருக்கல்யாணத்தின் போது விருந்து வழங்க முடியல. ஆனா, அதற்கு பதிலா கடந்த 15 நாட்களாக மதுரையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றோம்.
மதுரை மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள வீடு இல்லாத ஏழைகள், வெளி மாநில கூலித் தொழிலாளர்களுக்கு தினமும் 1,200 உணவுப் பொட்டலங்கள் தயாரித்து மாநகராட்சியிடம் கொடுக்கின்றோம்.
படம்; 2018-ம் ஆண்டு திருக்கல்யாணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் உதவிக்கு நன்றி; தினமணி இணையதளம்