கமகம மணத்துடன் அட்டகாசமான மொச்சை கொட்டைக் குழம்பு


சுவையான மொச்சை குழம்பு 

மொச்சை குழம்பு ரெசிபி 

மொச்சை குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை : மொச்சை - 75 கிராம், புளி - 30 கிராம், கடுகு -1 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன், வரமிளகாய் - 6, தாளிப்பு வடகம் - 15 கிராம், கூட்டுத்தூள் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகு - 10 கிராம், சீரகம் - 10 கிராம், கடலை எண்ணெய் - 50மிலி, விதையில்லாத கத்திரிக்காய் - 150கிராம், சின்ன வெங்காயம் - 50 கிராம், தக்காளி - 2, கறிவேப்பிலை - 1 சிறு கொத்து, துருவிய தேங்காய் - அரை மூடி, கொத்தமல்லித் தழை - குழம்பின் மேல் தூவுவதற்கு உப்பு - தேவைக்கு.

மொச்சையை 3 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்! சின்ன வெங்காயத்தை தோலுரித்து நறுக்கி வைக்கவும்! கத்திரிக்காயை நான்காக நறுக்கவும், தக்காளியை பொடிசாக நறுக்கி வைக்கவும்! புளியை ஊறவைத்து கரைத்து வைக்கவும்.. மிளகு சீரகத்தை இடித்து வைக்கவும்! தாளிப்பு வடகத்தை உதிர்த்து வைக்கவும்.

3 மணி நேரம் ஊறிய மொச்சையை எடுத்து குக்கரில் போட்டு அதைப் போல 3 மடங்கு நீர் (மொச்சை ஊறிய நீரையும் சேர்க்கலாம்) ஊற்றி 2 விசில்கள் விட்டு வேக வைக்கவும்! இதிலும் மொச்சை வெந்த நீரை தனியே எடுத்து வைக்கவும்.

Must Read: உடல் உழைப்பு, பசிக்கு சிறுதானிய உணவுகள்… பழங்குடியினரின் வாழ்வியல்!

செய்முறை : அடுப்பை மிதமாக எரியவிட்டு அதில் ஒரு வாணலியை வைத்து 25 மிலி கடலை எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் தாளிக்கவும்! இப்போது இதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்! 5 நிமிடங்கள் இதை வதக்கவேண்டும், 

இப்போது தக்காளியை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, இதில் வேக வைத்த மொச்சையும்..வெட்டிய கத்திரிக்காயும் சேர்த்து ஒரு கிளறு கிளறி மொச்சை வேக வைத்த நீரை சேர்த்து உங்கள் தேவைக்கேற்ப மேலும் சிறிது நீர் சேர்த்து கலக்கி 2 நிமிடங்கள் மூடி வைக்கவும்! 

அடுப்பு மிதமாக எரிவது முக்கியம்! 2 நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து கூட்டுத்தூள், மிளகாய் தூள், புளி கரைசல், உப்பு எல்லாம் சேர்த்து நன்கு கிளறி உப்பு, காரம் சரி பார்க்கவும்! தேவைப்பட்டால்..அதை கூட்டவும்! 

மொச்சை குழம்பு

இன்னொரு அடுப்பில் ஒரு வாணலி  வைத்து அதில் மீதி கடலை எண்ணெய்யை ஊற்றி சூடாக்கி இடித்த மிளகு சீரகம், தாளிப்பு வடகம், துருவிய தேங்காய் அனைத்தும் சேர்த்து தாளித்து வைக்கவும்! 

குழம்பு ஒரு கொதி வந்ததும் தாளிப்பை குழம்பில் சேர்த்து நன்கு ஒரு கிளறு கிளறி ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்து பிறகு இறக்கிவைத்து மல்லித்தழை தூவவும்!

கமகம மணத்துடன் அட்டகாசமான அம்மாபேட்டை அவரைக் கொட்டைக் குழம்பு ரெடி! நீங்கள் செய்த குழம்பு கூட்டு கன்ஸிஸ்டன்சியில் இருந்தால் தேவையான நீர் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து குழம்பாக்கிக் கொள்ளலாம்! சூடான சோற்றில் நெய் அல்லது நல்லெண்ணெய் & கடலை எண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்! அப்பளம் வடகம் இருந்தால் போதும்!

Must Read: கோடைகாலத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் தெரியுமா?

அதிக காரமில்லாத பொரியல் கூட்டு, வடை, பக்கோடா போன்ற தொடுகறிகள் வைத்துக் கொள்ளலாம் என்றாலும் அப்பளமே போதும்! சூடான ஆம்லெட் மிக நல்ல காம்போ! தயிர் சாதத்திற்கு டெட்லி காம்போ இந்தக் குழம்பு இட்லி தோசைக்கும் இந்தக் குழம்பு மிகப் பிரமாதமாக இருக்கும்! சூடான பருப்பு சாதத்திற்கும் மோர் குழம்பு சாதத்திற்கும் மிகவும் நன்றாக இருக்கும்! 

இதே குழம்பில் கூடுதலாக சர்க்கரை பூசணிக்காய் (பரங்கிக் காய்) சேர்த்தால் அது சேலம் குகைப் பகுதி குழம்பாகும்) குறிப்பு : கூட்டுத்தூள் என்பது சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகளில் கிடைக்கும்! அதில்லை எனில் அதற்கு பதில் வத்தக் குழம்பு அல்லது சாம்பார் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

இந்தக் குழம்பை நீங்கள் ரொம்பத் தண்ணீராக வைக்கக் கூடாது! இது திக்காக வைக்கவேண்டிய ஒரு குழம்பாகும்!  மொச்சை ஊறிய, மொச்சை வெந்த நீரையே குழம்புக்கு பயன்படுத்தினால் குழம்பின் ருசி அட்டகாசமாக இருக்கும்!(இந்த செய்முறை அளவு - 5 பேர் உள்ள குடும்பத்திற்கானது)

-வெங்கடேஷ் ஆறுமுகம்

#mochaikulambu  #mochaikulamburecipe #mochaikulambuecipetamil


Comments


View More

Leave a Comments