அசைவ உணவு வரலாற்றின் சிகரம் மதுரை முனியாண்டி விலாஸ்
மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு நாவில் எச்சில் ஊறும். ஆம் தென் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் அசைவ உணவுக்கு பெயர் பெற்ற உணவகமாக மதுரை முனியாண்டி விலாஸ் திகழ்கிறது.
மதுரைக்கு அருகில் இருக்கும் வடக்கம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்களால் இந்த அசைவ உணவின் சுவை இன்றளவும் உலக உணவு வரலாற்றில் நிலைத்திருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி பல நாடுகளிலும் முனியாண்டி விலாஸ் உணவகத்துக்கு கிளைகள் உண்டு.
Must Read: கண்களின் ஆரோக்கியம்;: நான்கு உணவுகளை தவற விடவேண்டாம்
வடக்கம்பட்டியில் உள்ள குலதெய்வமான முனியாண்டியின் பெயரில்தான் இந்த முனியாண்டி விலாஸ் என்ற பெயரை உணவகத்துக்கு வைத்திருக்கின்றனர். ஆண்டு தோறும் தை மாதத்தில் மூன்று நாட்கள் வெகு விமர்சையாக வடக்கம்பட்டியில் இவர்கள் திருவிழா நடத்துகின்றனர்.
அப்போது அந்த திருவிழாவில் பிரியாணி விருந்து படையல் நடக்கும். கெடா வெட்டி 2,000 கிலோ பிரியாணி செய்து முனியாண்டிக்கு படைப்பார்கள். அசைவ உணவின் வரலாற்றை இப்போது இங்கு பார்க்கலாம்
சுப்பா நாயுடுவின் முயற்சி
முதன் முதலில் மா.வெ.சு. சுப்பாநாயுடு அவர்கள் வறட்சியின் காரணமாக வயிற்றுப்பாட்டுக்கே உணவின்றிக் கஷ்டப்படும்போது குறைந்த விலையில் வயிறாரச் சாப்பாடு போட்டால் எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தார்.
சுப்பா நாயுடுவிற்குப் பழக்கப்பட்ட காரைக்குடிப் பகுதியில் வடக்கம்பட்டி கிராமக் காவல் தெய்வம் முனியாண்டி பெயரில் முதல் உணவக விடுதியை 1935 வாக்கில் ஆரம்பித்தார். சுப்பா நாயுடு இப்பெயரில் உணவகம் தொடங்குவதற்கு முன்பாகவே ரங்கவிலாஸ் என்ற பெயரில் வெலம நாயுடு சமூகத்தவர் 1925ஆம் ஆண்டுவாக்கில் அசைவ ஹோட்டல் நடத்தியுள்ளனர்.
தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட ரெட்டியார், நாயுடு, ராஜு போன்றவர்கள் தங்களது வியாபாரத் தலத்தை ‘விலாஸ்’ என்ற பெயருடன் குறிப்பிடுவர். விலாஸ் என்ற சொலானது விலாசம் என்ற மராட்டிய சொல்லிலிருந்து மருவியது.
குடும்ப உறுப்பினர்களே வேலையாட்கள்
முதலாவதாக சுப்பாநாயுடு முனியாண்டி விலாஸ் ஹோட்டலை ஆரம்பிக்கும்போது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வேலை செய்து குடும்பத் தொழிலாக ஹோட்டலை நடத்தினார். சுப்பாநாயுடுவைத் தொடர்ந்து விழுப்புரம் வெங்கடாசலம் நாயுடு, புதுக்கோட்டை அயோத்தி நாயுடு, பாண்டிச்சேரி சீனிவாசன் நாயுடு, திருவாரூர் ரெங்கசாமி நாயுடு, பட்டுக்கோட்டை அழகர்சாமி நாயுடு, திருச்சி அய்யப்பன் நாயுடு, மன்னார்குடி அழகர்சாமி நாயுடு, திருத்துறைப்பூண்டி சுருளி நாராயணசாமி நாயுடு, கும்பகோணம் அழகர்சாமி நாயுடு, காஞ்சிபுரம் M.S.R. நாயுடு, புதுக்கோட்டை திருவேங்கடம் நாயுடு, தாராபுரம் கிருஷ்ணன் நாயுடு மற்றும் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் ஆங்காங்கே உணவகங்களை தொடங்கினர்.
காரைக்குடியில் உணவகத்தை ஆரம்பித்துத் தொடர்ச்சியாக ரெட்டியார் சமூகத்தினர் நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, அரக்கோணம், சென்னை ஆகிய இடங்களில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தினார்கள். வடக்கம்பட்டி கிராமத்திலிருந்து வேலை பார்க்கச் சென்றவர்கள் தொழிலை நன்றாகக் கற்றுக்கொண்டு வேலை பார்த்த ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களில் முனியாண்டி விலாஸ் உணவகங்களை ஆரம்பித்தார்கள்.
இன்றைக்குத் தமிழகம் முழுவதும் மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரிட்டுக் கடை நடத்துகிற இன்றைய தலைமுறைகளுக்கு முன்னோடிகள் சுப்பாநாயுடு, ராமசாமி ரெட்டியார் ஆகிய இருவரே.
#VadakkampattiMuniyandiVilas, #MaduraiMuniyandiVilas #MuniyandiVilas
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments