பிரண்டை எனும் அற்புத வைரம் | பிரண்டை மருத்துவ பயன்கள்


வைரம் போல உடல் வலிமை தரும் பிரண்டை 

பிரண்டையில் கால்சியம் அதிகம் உள்ளது

பிரண்டை துவையல் 

மூச்சுப்பிடிப்புக்குத் தீர்வு 

 
நாம் வாழும் இயற்கையே நமக்கான உடல்நலக்குறைவுகளுக்கு தீர்வுகளையும் தந்திருக்கிறது. பிரண்டையும் நம் உடல் நலக்குறைவுகளுக்கு தீர்வு தரும் அற்புத மூலிகைதான். அதிலும் குறிப்பாக இப்போது பலருக்கு எலும்பு தேய்மானம், மூட்டு வலி, எலும்பு தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளன.
 
வயிற்றுக் கோளாறுகள், வாயுகோளாறுகளால் பலர் அவதிப்படுகின்றனர். இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வாக இருக்கிறது பிரண்டை, நமது இணையதளத்தின் எழுத்தாளர்களில் ஒருவரும், மூலிகை ஆர்வலருமான திரு. எம்.மரியபெல்சின் கடந்த ஜனவரி மாதம் எழுதிய இந்த கட்டுரை அதிக வாசகர்களால் படிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த கட்டுரையை மறுபதிவு செய்வதில் பெருமை கொள்கின்றோம். 

பிரண்டை வைரம் போல நம்உடல் எலும்புக்கு வலிமை தருகிறது. மறைந்த சித்த மருத்துவர் மதிப்புக்குரிய கே.பி.அர்ச்சுனன் அவர்கள் எழுதிய புத்தகத்தை மேற்கோளாகக் கொண்டு இந்தப் பதிவை எழுதுகிறேன். பிரண்டைக்கு வஜ்ஜிரவல்லி என்ற பெயர் இருப்பது பலருக்குத் தெரியும். வைரத்தைப்போலவே எலும்புகளுக்கு வலிமை தருவதால் இந்தப்பெயர் வந்தது. வஜ்ஜிரம் என்றால் வைரம் என்று பொருள்.

பிரண்டையின் பல பெயர்கள் 

Vitis quadrangularis, Cissus quadrangularis என்பது இதன் தாவரவியல் பெயர். தெலுங்கில் நல்லரு, கன்னடத்தில் வஜ்ஜிரபாலி, மலையாளத்தில் பிரண்டா, இந்தியில் அர்லங்கர், சமஸ்கிருதத்தில் அஸ்தின் சம்ஹாரி என்று அழைக்கப்படுகிறது. 

Must Read: இது தெரிந்தால் நீங்கள் இன்ஸ்டண்ட் நூடுல்ஸை சாப்பிட மாட்டீர்கள்

பிரண்டையில் பல வகைகள் உள்ளன. இரண்டு பட்டை பிரண்டை, மூன்று பட்டை பிரண்டை என்றும் உருட்டு, ஓலை, கதிர் பிரண்டை எனவும் செடி பிரண்டை, கொடி பிரண்டை, மர பிரண்டை பெரும்பிரண்டை, சிறுபிரண்டை, காட்டுப்பிரண்டை, சதுர பிரண்டை, முப்பிரண்டை, களிபிரண்டை, தீம்பிரண்டை, புளி பிரண்டை, கணுப்பிரண்டை என பலவகைப் பிரண்டைகள் உள்ளன.

பிரண்டையில் பல வகைகள் உள்ளன

பிரண்டையில் உள்ள சத்துகள் 

பிரண்டையில் உள்ள முதன்மையான சத்துகளில் முக்கியமானது கால்சியம். வைட்டமின் சி அதிகம் உள்ளது.  இது தவிர கொழுப்பு, புரதம், நார்சத்து, இரும்பு சத்து ஆகியவையும் பிரண்டையில் உள்ளன. 

எலும்பு மஜ்ஜை கோளாறுகளை சரி செய்யும் 

இத்தனை பிரண்டை இருந்தாலும் நான்கு பட்டை உள்ள பிரண்டையே எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. அதுதான் பெரும்பாலும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பிரண்டை... மனிதனின் எலும்புக்கு உள்ளே உள்ள மஜ்ஜை எனப்படும் எலும்புச்சோற்றின் ஏற்றத்தாழ்வை சமப்படுத்தி எலும்புகளின் இணைப்பில் உள்ள பசை, நீர், வாயு போன்றவை கூடினாலோ குறைந்தாலோ அவற்றை சமப்படுத்தி இயல்பாக இருக்கச் செய்யும். அந்தவகையில் முதுகுத்தண்டு, இடுப்பு, மூட்டு எலும்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய பிரண்டை உதவும்.

பிரண்டை துவையல் 

பிரண்டையை பலவகைகளில் மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். என்னைப்பொறுத்தவரை மிக எளிமையாக எல்லோரும் பயன்படுத்தும்விதத்தில் பிரண்டைத் துவையலையும் பிரண்டைப் பற்று போடுவதையும் நான் பரிந்துரைப்பதுண்டு. எளிமையான இந்த முறைகளில் நான் செய்து நல்ல பலன் கண்டிருக்கிறேன். 

Must Read:நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்கும் கருங்குறுவை அரிசி உணவு


முதலில் பிரண்டைத் துவையல் செய்வது பற்றிச் சொல்கிறேன். பிரண்டையின் மேல்பகுதியில் உள்ள நாரினை உரித்து எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக்கி நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவேண்டும். பச்சை நிறமாக இருக்கும் பிரண்டை பொன் நிறமாக மாறும்வரை வதக்க வேண்டும். அதன்பிறகு மிளகாய்வற்றல் (காய்ந்த மிளகாய்), புளி, வெள்ளைப்பூண்டு, சுவைக்காக உளுந்து, தேங்காய் சேர்த்து அவற்றையும் வதக்க வேண்டும். சூடு ஆறியதும் அம்மியில் வைத்து மையாக அரைக்கலாம், மிக்ஸியிலும் அரைக்கலாம். இதுதான் பிரண்டைத் துவையல் செய்முறை.

முறையை பின்பற்ற வேண்டும்

செரிமானக்கோளாறு, வாய்வுத்தொல்லை, ஓடு வாய்வு, குடல் வாய்வு, மூச்சுப்பிடிப்பு என அவதிப்படுபவர்கள் இந்த பிரண்டைத் துவையலை அடிக்கடி செய்து சாப்பிட்டு பலன் பெறலாம். ஆனால், பல வீடுகளில் பிரண்டை இருந்தும் அதை பயன்படுத்துவதில்லை. பலருக்கு பலன் தெரியவில்லை. சிலருக்கு தெரிந்தும் அதன் தோலை உரித்து எண்ணெயில் வதக்கி அரைத்துச் சாப்பிட சிரமம் என ஒதுக்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் பிரண்டையைத் தொட்டாலே கை அரிப்பு எடுக்கிறது, சாப்பிட்டால் தொண்டையில் நமைச்சல் எடுக்கிறது என்று காரணம் சொல்வதுண்டு. முறையாகச் செய்தால் எந்தச் சிக்கலும் இல்லை.

பிரண்டைத் துவையல் செய்து சாப்பிடலாம்

முற்றிய பிரண்டையை தவிர்க்க வேண்டும்

பிரண்டையை தொடுவதற்குமுன் கைகளில் நல்லெண்ணெய் தடவிக்கொள்ளலாம் அல்லது புளியையும், உப்பையும் சேர்த்து நீர் விட்டுப் பிசைந்து கொள்ளலாம். இல்லையென்றால் கையுறை மாட்டிக்கொள்ளலாம். துவையல் செய்யும்போது கட்டாயம் புளி சேர்க்க வேண்டும். நன்றாக எண்ணெயில் வதக்க வேண்டும். இப்படிச் செய்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. அரைகுறையாகச் செய்தால் நிச்சயம் பிரச்சினை ஏற்படும். துவையல் அரைக்க முற்றிய பிரண்டையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

பிரண்டை பத்து அல்லது பற்று 

அடுத்தது பிரண்டைப் பற்று. முற்றிய பிரண்டையைக்கூட இதற்குப் பயன்படுத்தலாம். தேவையான அளவு பிரண்டையை எடுத்துக்கொண்டு புளி, உப்பு சேர்த்து மையாக அரைத்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். பிரண்டையை அரைக்கும்போது கொஞ்சமாக நீர் விட்டால்போதும். அதன்பிறகு நன்றாகக் கொதிக்கவிட்டு கட்டியானதும் அதை பொறுக்கும்சூட்டில் வலி, வீக்கம், உடைந்த எலும்பு, தசைப்பிறழ்வு போன்ற பிரச்சினைகளுக்கு பற்று போடலாம். ஒருதடவை அரைத்து எடுத்த பிரண்டையை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்தலாம்.

கீரை விற்கும் பாட்டிமாரிடம் 20 ரூபாய் அல்லது அதிகபட்சமாக 40 ரூபாய்க்குக் கிடைக்கும் பிரண்டை 2 லட்சம் ரூபாய் செலவழித்தும்கூட கிடைக்காத பலனை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. பிரண்டையைப் பற்றி இத்தனை விலாவாரியாக எழுதும் நான் என்னிடம் பிரண்டை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. நான் பிரண்டை வியாபாரியும் இல்லை. அவரவர் பகுதியிலேயே பிரண்டை கிடைக்கும். வாங்கிப் பயன்படுத்துங்கள்.

-எம்.மரியபெல்சின்

( திரு. மரியபெல்சின்  அவர்களை 95514 86617 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். )

#PirandaiUses  #PirandaiBenefits  #PirandaiCureForBone #HealthyPirandai 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்




 


Comments


View More

Leave a Comments