கற்றாழை தரும் குளுமையை தவற விடாதீர்கள்


முதல் பார்வையிலேயே மனதை மயக்கி காதல் வசப்பட வைக்கும் அழகான தாவரம் கற்றாழை. தோற்றத்தில் மட்டுமல்ல, மருத்துவ குணத்திலும் கற்றாழையின் செயல்பாடுகள் அழகுதான்! வேனிற் காலத்திற்கென பிரத்யேகமாக இயற்கையால் படைக்கப்பட்ட ’குளுகுளு மூலிகை’ கற்றாழை. இந்திய, கிரேக்க, எகிப்திய, சீன பாரம்பரிய மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ‘அற்புதத் தாவரம்’ கற்றாழை.
பெயர்க்காரணம்: பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சார்ந்த கோளாறுகளை நீக்குவதால் கன்னி, குமரி ஆகிய பெயர்கள் கற்றாழைக்கு நயமாய் பொருந்துகின்றன. செங்கற்றாழை, இரயில்வே கற்றாழை, மலைக்கற்றாழை, வெண்கற்றாழை, வரிக்கற்றாழையோடு சேர்த்து மேலும் பல கற்றாழை வகைகள் உள்ளன. பயன்பாட்டில் அதிகமிருப்பது சோற்றுக்கற்றாழை.
அடையாளம்: வறண்ட சூழலிலும் பல ஆண்டுகள் வாழும் சிறுசெடி. சதைப்பற்றுள்ள மடல்களை சிதைத்தால் கசப்புச் சுவை கொண்ட திரவம் வெளியாகும். இதன் உட்பகுதியில் இருக்கும் கூழ் போன்ற பகுதியே ’கற்றாழைச் சோறு’ என அழைக்கப்படுகிறது. Aloe barbadensis எனும் தாவரவியல் பெயர் கொண்ட கற்றாழையின் குடும்பம் லிலியேசி (Liliaceae). அலோசின் (Aloesin), அலோ-எமோடின் (Aloe-emodin), Aloin, Isobarbaloin, லிக்னின்ஸ், அமினோ அமிலங்கள் ஆகிய தாவர வேதிப்பொருட்கள் கற்றாழையின் உள்ளன.
உணவாக: தோல் சீவிய பின், உள்ளிருக்கும் பனிக்கூழ் போன்ற பகுதியை ஆறேழு முறை நீரிலிட்டு சுத்தம் செய்து, பின் மோருடன் கலந்து, உப்பும் சீரகத்தூளும் சேர்த்து மத்து கொண்டு நன்றாக கடைந்து எடுக்க, குளுகுளு கற்றாழை பானம் தயார். பனிக்கட்டி இல்லாமலே குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்த பானத்தை வேனிற்காலத்தில் குடித்து வர, வெப்பத்தைக் குறைக்கும். வயிற்றுப் புண்களை குறைப்பதற்குமான சிறந்த பானம் இது. கற்றாழை கூழுடன் சிறிது கடுக்காய்ப் பொடி தூவி, ஒரு பாத்திரத்தில் வைக்க சில மணிநேரங்களில் வடியும் சாறை, பானமாகவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். விந்தின் தரத்தை அதிகரிக்க, பாலில் ஊறவைத்த காற்றாழை சோற்றை சாப்பிட்டு வரலாம்.
மருந்தாக: கொலாஜென், எலாஸ்டின் புரதங்களின் உற்பத்தியை அதிகரித்து, தேகத்தில் உண்டாகும் வயோதிக மாற்றத்தை தள்ளிப்போடுவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. வீக்கமுறுக்கி செய்கையுடைய C-glycosyl chromone எனும் பொருள் கற்றாழையிலிருந்து சமீபத்தில் பிரித்தெடுக்கப்பட்டது. வலி உண்டாக்கும் பிராடிகைனினுடைய (Bradykinin) செயல்பாட்டினைத் தடுத்து, உடனடி வலிநிவாரணியாக செயல்படுவதையும் ஆய்வு உறுதிப்படுத்திறது. மார்பகப் புற்று நோய் வராமல் பாதுகாக்கும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாக ஆய்விதழில் வெளியான கட்டுரை ஒன்று தெரிவிக்கின்றது. கற்றாழையை நன்றாக உலரவைத்து வற்றலாகவோ, பொடியாகவோ உணவுகளில் சேர்த்து வந்தால், ’முதுமையிலும் இளமை காணலாம்’ எனும் காயகற்ப முறையைப் பற்றி சித்தர் தேரையர் வெளிப்படுத்துகிறார்.
வீட்டு மருந்தாக: கற்றாழையோடு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தயாரிக்கப்படும் எண்ணெயை தேய்த்து தலை முழுக, நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். தலைமுடி வளர்ச்சிக்கும் நல்லது. வாரம் ஒருமுறை கற்றாழை கூழோடு சிறிது உப்பு சேர்த்து வாய்க் கொப்பளித்து வர பற்கள் பலமாகும். ஈறுகளிலிருந்து வடியும் குருதியும் நிற்கும். நெருப்பு சுட்ட புண்களுக்கு வாழை இலையோடு சேர்த்து, கற்றாழையை பயன்படுத்தலாம். கை, கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சலை குறைப்பதிலும் கற்றாழை கொண்டு தயாரிக்கும் மருந்துகள் பலன் தரக்கூடியவை.
அழகியலில்: முகத்தை மெருகேற்ற வேதியியல் கலவைகள் நிறைந்த செயற்கை கிரீம்களுக்கான சிறந்த மாற்று கற்றாழை. மேல்தோலை சீவிவிட்டு உள்ளிருக்கும் பனிக்கூழ் போன்ற பகுதியினை முகத்தில் தினமும் தடவிவர, கற்றாழையைப் போல விரைவில் முகமும் பொலிவடையும். கிரீம்கள், சோப்பு போன்ற செயற்கை அழகுசாதனப் பொருட்கள், கற்றாழையின் சத்து இல்லாமல் முழுமையடையாது. நேரடியாக சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க (Sun screen) காற்றாழைக் கூழினைப் பூசிக்கொள்ளலாம். கற்றாழையை உடலில் தேய்த்து குளிக்கவும் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள், கற்றாழையைப் பூச, நீர்த்துவம் பெற்று தேகம் புத்துணர்ச்சி பெறும். தோலில் சுருக்கங்கள் உருவாவதை தடுக்கும்.
கருப்பையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுக் கொடுப்பதால், கற்றாழை ’பெண்களுக்கான வரப்பிரசாதம்!’ மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் அடிவயிற்று வலியை குறைக்க, கற்றாழை சாற்றில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொடுப்பது வழக்கம். கர்ப்பிணிகளின் உடற்சூட்டை தணிக்க மற்றும் சுகப்பிரசவத்தை தூண்ட உதவும் ‘பாவனபஞ்சாங்குல தைலத்தில்’ கற்றாழை சேர்க்கப்படுகிறது.
கற்றாழை கொண்டு செய்யப்படும் பெண்களுக்கான சித்த மருந்துகளின் எண்ணிக்கையோ அதிகம்.
ஆசனவாய் சார்ந்த நோய்களைத் தடுக்க உதவும் ’குமரி எண்ணெய்’, கருப்பைக்கு வலுவூட்டும் ’குமரி இலேகியம்’ என சித்த மருந்துகளில் கற்றாழையின் பங்கு அதிகம். அதிவெப்பம் காரணமாக கண்களில் உண்டாகும் எரிச்சலைக் குறைக்க, சிறுதுண்டு கற்றாழையை கண்களின் மீது வைத்து கட்டலாம். கற்றாழை மடல்களுக்கு இடையில் இரவு முழுவதும் வைத்து முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டுவர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
கற்றாழையின் உலர்ந்த பாலுக்கு கரியபோளம், மூசாம்பரம் போன்ற பெயர்கள் உள்ளன. கருப்பையில் உண்டாகும் தொந்தரவுகளுக்கு முக்கிய மருந்தாக கரியபோளம் பயன்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய மூலிகைப் பட்டியலில் கற்றாழையும் ஒன்று. வளமான மண்ணும், சிறிது நீர் வளமும் இருந்தால், கற்றாழைகள் செழிப்பான வளர்ச்சியைக் கொடுக்கும். விரைவில் தாய் கற்றாழையைச் சுற்றி உருவெடுக்கும் பல அழகான ’கற்றாழைக் குழந்தைகளை’ ரசிக்க இருகண்கள் போதாது.
-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)
 
#CactusForMedicine #Cactus #CactusGivesCoolness #FoodNewsInTamil

Comments


View More

Leave a Comments