கூவம் கரையோரம் அரிய வகை மூலிகைகள்… மூலிகை தோட்டம் அமைக்குமா அரசு?


சென்னையின் பூர்வ குடிகள் குளித்தும், படகில் சென்றும் மகிழ்ந்த கூவம், அடையாறு ஆறுகள் இன்று சாக்கடைகளின் சங்கமமாக மாறி விட்டது. ஆனால், இந்த இரண்டு ஆற்றங்கரைகளிலும் பல அரிய வகை மூலிகைகள் தான்தோன்றியாக வளர்ந்திருக்கின்றன.

இந்த அரிய வகை மூலிகைகள் மக்களின் பல உடல் நலக்கோளாறுகளை சரி செய்யக் கூடியவை. இரண்டு ஆற்றங்கரைகளின் அருகே வசிக்கும் நண்பர்களை சந்திக்கச் செல்லும்போது இத்தகைய மூலிகைகளை பார்ப்பது உணடு. 

கூவம் ஆற்றங்கரையில் உள்ள மூலிகைகள் பற்றி அறிவதற்காக சென்னை அண்ணாசாலையை ஒட்டிய கூவம் ஆற்றின் சில பகுதிகளில் நான் வலம் வந்தேன். கூவம் ஆற்றில் சாக்கடைக் கழிவுநீரால் நாற்றமெடுக்கிறது. ஆனால் அதன் கரைகளில் வளர்ந்து கிடக்கும் மூலிகைகளோ வாசனை வீசுகிறது. 

கூவம் கரையோரம் அரிய வகை மூலிகைகள்

வெயில் சுட்டெரிக்கும் இந்தச் சூழலிலும் அந்த மூலிகைகள் வளர்ந்து மணம் வீசுகின்றன. முன்னொரு காலத்தில் தெள்ளத்தெளிந்த தூய நீர் ஓடிய இந்த கூவம் நதியில் மீன்பிடித் தொழிலும், படகுப் போட்டிகளும் நடந்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்: பச்சைப் பட்டாணியில் நிறைந்திருக்கும்   சத்துகள்

ஆனால், மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவாகவும், கழிவுநீர் அனைத்தையும் இந்த நதியில் திறந்துவிட்டதாலும் மாசுபட்டு நாற்றமெடுக்கிறது. என்னதான் மாசுபட்டாலும் அது தன் கரையில் வளரும் செடி, கொடிகளுக்கு உயிரூட்டி, உரமூட்டி செழித்து வளரச் செய்வதை பார்க்கமுடிகிறது.

வெயில் வெளுத்து வாங்கும் மத்தியான வேளையில் இன்று சுமார் 1.30 மணி அளவில் ஸ்பென்சர் பிளாஸா, பழைய தாஜ் கன்னிமாரா ஓட்டலின் பின்புறம் உள்ள அந்த கூவம் நதிக்குச் சென்று என்னென்ன மூலிகைகள் வளர்ந்து கிடக்கின்றன என்று பார்த்தேன். 

கூவம் நதி தூர் வாரப்பட்டு கரையின் இருபுறமும் உயர்த்தப்பட்ட நிலையிலும் ஆங்காங்கே மூலிகைச் செடிகள் வளர்ந்து கிடப்பதைப் பார்க்க முடிகிறது. ஆமணக்கு, நாய்வேளை, முடக்கத்தான், குப்பைமேனி, காட்டுக்கொடி தோடை, மிளகாய்ப்பூண்டு என ஏராளமான செடிகள் வளர்ந்திருக்கின்றன. நதிக்கரையோரம் அத்தி, அரச மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. அங்கே சில ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன.

சமீபத்தில் மும்பை சென்றிருந்தபோது, அங்கே ரயில் வழித்தடத்தையொட்டிய காலி இடங்களில் கீரைகள் மற்றும் வெண்டைக்காய், கத்தரிக்காய் தோட்டம் அமைத்திருப்பதைக் காண முடிந்தது. அப்படியிருக்கும்போது இந்த கூவம் நதியை சீர்திருத்தி இந்தக் கரைகளின் ஓரங்களில் தானாக வளரும் மூலிகைகளை மக்கள் பயன்படுத்த மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம் ஏற்பாடு செய்யலாமே? செய்வார்களா?

கொரோனா பெருந்தொற்றின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சித்த மருத்துவத்தின் வாயிலாக சிகிச்சை அளித்து வருகிறது. இந்த சூழலில் மூலிகைகளை காப்பாற்ற கூவம் நதிக்கரைகயில் மூலிகைத் தோட்டங்களை அமைக்கலாம். 

-செய்தி மற்றும் படங்கள்;  மரிய பெல்சின்

#RareHerbs #RareHerbsAtCooum #RareHerbsAtChennaiRiver

 

 

 

 


Comments


View More

Leave a Comments