அருகம்புல்லை நீக்க சித்திரை உழவு முக்கியம்…


சித்திரை உழவு ஏன் முக்கியம் 

அருகம்புல்லை நீக்க கோடை உழவு 

மஞ்சணத்தியையும் அகற்ற உழவு 

பங்குனி விடை பெற்று விட்டது. சித்திரை பிறந்து விட்டது..மாதங்களிலேயே சித்திரை மாதம்தான் சம்சாரிகளுக்கு மிகவும் முக்கியமான மாதமாகும்.ஏனெனில் இந்த சித்திரை மாதக் கோடையில்தான் எல்லா சம்சாரிகளும் தங்கள் நிலங்களைப் பக்குவப்படுத்துவார்கள்.

சித்திரை மாதத்து உழவு பத்தரை மாதத்து தங்கம் என்பது சொலவடை.கரிசல் மண் கோடை வெய்யிலில் நன்றாகக் காய்ந்து விப்போடிக் கிடக்கும்.உழுவதற்கு ரொம்ப தோதாக இருக்கும்.கலப்பை பாளம்பாளமாக மண்ணைப் புரட்டிப் போடும்.

சம்சாரிகளுக்கு விவசாயத்திற்கு பெரிய இடைஞ்சலாக இருப்பது அருகம்புல்,மற்றொன்று மஞ்சணத்திச் செடி.இவைகளை முற்றாக அப்புறப்படுத்த பெரும்பாடு படவேண்டும்.அதற்கு இந்த சித்திரை மாதம்தான் தோது.

Must Read: ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம் நெறிமுறைகள் வெளியீடு

இப்போது மஞ்சணத்திச் செடியை பட்டுப்போக வைக்க ஒரு மருந்து கிடைக்கிறது.இந்த மருந்தை துணியில் நனைத்து செடியின் தண்டில் சுற்றி வைத்து விட்டால் தீயில் கருகியது மாதிரிசெடி பட்டுப்போகிறது.ஆனால் அருகம்புல்லை அப்புறப்படுத்த எந்த மருந்தும் இல்லை.

சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்."ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி"என்று.   ‌ஒரு நிலத்தில் அருகு பற்றி விட்டால் அந்த இடத்தில் எந்த வெள்ளாமைகளும் விளையாது.அந்த இடம் பொட்டலாகவே கிடக்கும்.விதைத்த விதைகள் அந்த இடத்தில் மட்டும் சரியாக முளைக்காது.

அப்படியே நிலம் முழுக்க அருகு படர்ந்து அந்த நிலமே வெள்ளாமை செய்ய முடியாத நிலமாக மாறிவிடும்.விற்பதானாலும் கூட அந்த அருகை காட்டி அதையெல்லாம் சுத்தப்படுத்த வேண்டுமானால் இவ்வளவு பணம் தேவைப்படும் என்று அதைக் கழித்துக் கொண்டு தான் விலை பேசுவார்கள்.

சித்திரை உழவு நல்லது

ஆகவேதான் இந்த சித்திரைதான் அருகை அப்புறப்படுத்த ஏற்ற மாதம்.அருகு எடுத்தல் என்பது ஒரு கஷ்டமான வேலை மட்டுமல்ல அது ஒரு கலை.எல்லோராலும் இந்த வேலையைச் செய்ய முடியாது.அசாத்தியமான பொறுமை வேண்டும்.திடகாத்திரமான உடல் வேண்டும்.

அருகு எடுக்கும் வேலை செய்பவர்கள் இருவர் இருவராக ஜோடி சேர்ந்துதான் செய்ய முடியும்.தலையில் தலைப்பா இடுப்பில் கோவணம் அல்லது அண்டர்வேர்.இந்த வேணாப்பரிந்த கோடை வெய்யிலில் வியர்வை வழியும்.ஒருவர் நின்று கொண்டு கடப்பாரை கம்பியால் நிலத்தை தோண்டுவார்.இன்னொருவர் எதிரே குனிந்து கொண்டு மண்வெட்டியால் மண்ணை அள்ளி அள்ளி வெளியில் போடுவார்.கட்டிகட்டியாக வந்தால் கைகளால் தூக்கிப் போடுவார்.

அருகம்புல்லின் தண்டு என்பது வெள்ளை வெளேர் என்று நிலத்திற்குள் ஆழமாக கொடிபோல் செல்லும்.இடையிடையே ஏராளமான முடிச்சுக்கள் பட்டாணிக் கடலை அளவு இருக்கும்.இழுத்தால் இந்த முடிச்சு கழன்று கொள்ளும்.முழுசாக வராது.எதிரே இருப்பவரின் இடுப்பளவு ஆழத்திற்கு சென்று கோலிக்குண்டு அளவு கிழங்கு இருக்கும்.

Must Read: தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட்; ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் தொகுப்பு

அதை அப்புறப்படுத்தினால்தான் முற்றாக ஒரு அருகம்புல் அகற்றப்படும்.ஒரு சிறு முடிச்சு நிலத்தில் தங்கி விட்டாலும் மழை பெய்தவுடன் பச்சைப் பசேல் என்று தளிர்த்து விடும்.

அருகு எடுக்கும் வேலைக்குப் போகிறவர்கள் ஆளுக்கொரு தோண்டிக் கலயம் நிறைய்ய நீச்சுத்தண்ணீரும் அந்த தண்ணீருக்குள் ஏழெட்டு கம்மங்கஞ்சி உருண்டைகளும் போட்டு காட்டுக்கு கொண்டு போவார்கள்.கோடை வெய்யிலில் வியர்வை வெளியேறி நாவு உணர்ந்து போகும்.ஆகவே அடிக்கடி கருவேல மர நிழலில் செத்த நேரம் உட்கார்ந்து இடுப்பாத்தி விட்டு அப்படியே இரண்டு உருண்டை கம்மங்கஞ்சியை கரைத்து குடித்து விட்டு வயிறு நிறைய்ய நீச்சுத் தண்ணீரையும் குடித்துக் கொள்வார்கள்.

சாயங்காலம் வேலை முடியும் போது ஏழெட்டு கம்மங்கஞ்சி உருண்டைகளும் ஒரு தோண்டிக் கலயம் நீச்சுத் தண்ணீரும் வயிற்றுக்குள் போயிருக்கும்.அருகும் போயிருக்கும். "அழுதுக்கிட்டு இருந்தாலும்   உழுதுக்கிட்டு இரு"என்பதும் "அகல உழுவதை விடவும்   ஆழ உழுவது மேல்"என்பதும் சொலவடை. சித்திரையே வருக.

-சோ.தர்மன்

#cithiraiulavu  #tillinglandinchithirai  #tillingland

ரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments